ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 37 - 39

நற்றிணை – அரிய செய்தி – 37 - 39
ஓவியம்
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகலிகை அன்ன துய்த் தலைப் பாதிரி
பாலை பாடிய பெருங்கடுங்கோ . நற். 118 : 7 – 8
தொழில் திறமிக்க ஓவியர்  ஒளி பொருந்திய அரக்கினில் தோய்த்த தூரிகை போல் தலையில் நுண்ணிய பஞ்சினையுடைய பாதிரிப் பூக்கள் மலர்ந்தன.
பண்டைய தமிழரின் ஓவிய மாண்பு அறிக.
நற்றிணை – அரிய செய்தி – 38
ஒப்பிடுக
 சிறு தாழ் செறித்த மெல்விரல் சேப்ப
வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ
 புகையுண்டு அமர்த்த கண்ணள் நகைபெறப்
பிறைநுதல் பொறித்தசிறு நுண்பல் வியர்
அம்துகில் தலையில் துடையினள் நப்புலந்து
அட்டிலோளே…………………………
மாங்குடி கிழார்.நற். 120 : 4 – 9
 நம் காதலி ! மோதிரம் அணிந்த மெல்லிய விரல் சிவக்கும்படி – வாளை மீனைக் கொணர்ந்து அதனை உண்ணும் வகையில் நறுக்கினள்; தலைவியின் கண்கள் புகையுண்டு அமர்த்தனவாயின;பிறைபோல் விளங்கும் அழகிய நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகளை – அழகிய புடவையின் தலைப்பிலே துடைக்கின்றாள்- ஒப்பிடு ; முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் குறுந்.167.
நற்றிணை – அரிய செய்தி – 39
இளமை இன்பம்
இறந்து செய் பொருளும் இன்பம் தருமெனின்
இளமையின் சிறந்த வளமையும் இல்லை
இளமை கழிந்த பின்றை வளமை
காமம் தருதலுமின்றே……..
……………………. நற்126 : 7 – 10

நிலம் கடந்து இனிய துணையாளைப் பிரிந்து ஈட்டுகின்ற பொருள் இன்பம் தருமோ; அஃது இளமையில் பெறும் காம இன்பத்தினும் சிறந்ததோ ? இல்லையே ! பொருளால் ஏற்படும் வளமை இளமையினும் சிறந்ததோ ? இல்லையே !  பொருள் தேடலில் இளமையைக் கழித்தால் முதுமை காம இன்பத்தைத் தராது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக