புதன், 16 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 65 - 67

  நற்றிணை – அரிய செய்தி – 65 - 67
காற்றடைத்த பந்து
  பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவ…
உலோச்சனார். நற். 249 : 7
  பலமுறை இழுத்து  நிறுத்தவும் நில்லாததாய் விரைவாக இயங்கும் குதிரையின் கால்கள் பந்தினைப் போலத் தாவின.
( அக்காலத்திலேயே காற்றடைத்த பந்து உண்டோ – ஆய்க.)
நற்றிணை – அரிய செய்தி – 66
நாகமணி
உயர்வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால்மயங்கிய பொழுது கழிபாணாள்
திருமணி அரவுத் தேர்ந்து உழல
ஆலம்பேரி சாத்தனார். நற். 255 : 8 – 10
ஓங்கிய மலையின் சாரலில் ஒளியோடு விளங்கி மின்னி மழை பெய்து – இடத்தொடு இடம் மயங்கி நிற்கின்ற பொழுது; நடுயாமத்தில் இடி முழங்கி மோதுவதால் பாம்பு தன் நாகமணியைக் கக்கி வருந்தி உழலும். ( நாகம் மணி உமிழுமா .. இல்லையெனில் இதன் கருத்து யாது ? ஆய்க)
நற்றிணை – அரிய செய்தி – 67
காக்கைக்குச் சோறு இடல்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல்பட
அகல் அங்காடி அசைநிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
நக்கீரர். நற். 258 : 5  - 8

வந்த விருந்தினரைப் போற்றுவதற்காகப் பொன்னாலாகிய தொடியுடைய மகளிர் உணவு சமைத்தனர். அவ்வுணவில் ஒரு கவளம் எடுத்து முற்றத்தில் பலியாக இட்டனர். கொக்கின் நகம் போன்ற சோற்றைப் பசிய கண்ணையுடைய காக்கை உண்ணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக