சனி, 26 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 90 -91

நற்றிணை – அரிய செய்தி – 90 -91
அன்னப் பறவை
நிலம்தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவிச் செங்கால் அன்னம்
பொன்படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்
வளராப் பார்ப்பிற்கு அலகு இரை ஒய்யும்
பரணர். நற். 356 : 1 – 5
நிலம் தாழ்ந்த இடத்தை உடைய தெளிவான கடல் அருகில் அழகிய சிறகையும் சிவந்த காலினையும் உடைய அன்னப் பறவை இரை தேடியது.இமயமலையின் உச்சியில் இருக்கும் வானர மகளிர் மகிழ்ந்து விளையாடுவதற்குரிய -  வளராத இளம் குஞ்சுகளுக்கு அன்னம் தான் வாயில் சேமித்த இரைகளைக் கொண்டு சென்று கொடுக்கும்.
நற்றிணை – அரிய செய்தி – 91
யானைக்குச் சினம்
பல்லோர் பழித்தல் நாணி வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப
கையிடை வைத்து மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் …………………..
ஓரம்போகியார்.நற். 360 : 6 – 9

பலரும் இகழ்ந்து கூறியதால் வருந்திய பாகன் – இருப்பு முனையாலே யானையைத் துன்புறுத்தினான். அதனால் சினம் கொண்ட யானை தனக்கிட்ட கவளத்தைத் துதிக்கையால் உடம்பில் வாரி இறைத்துக் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக