வியாழன், 24 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 88 - 89

நற்றிணை – அரிய செய்தி – 88 - 89
நெருங்காதே விலகிச் செல்
தேர்வண் விரர்அன் இருப்பை அன்ன என்
தொல்கவின் தொலையினும் தொலைக சார
விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇக்
கவவுக்கை தாங்கும் மதுகைய குவவுமுலை
சாடிய சாந்தினை வாடிய கோதையை
ஆக இல் கலம் தழீஇயற்று
வாரல் வாழிய கவைஇ நின்றாளே
பரணர்.நற். 350 :  4 – 10
தம்மை நாடிவரும் இரவலர்களுக்குத் தேரைக் கொடுக்கும் வள்ளன்மை மிக்க விரான் என்பவனுடைய இருப்பையூர் போன்ற எனது பழைய அழகெல்லாம் நீங்குவதாயினும் நீங்கட்டும்; நீ என்னருகில் நெருங்க அனுமதியேன் ; விடுவேன் ஆயின் என் சொற்கள் உன்னை விலக்கினாலும் என்னோடு பொருந்திய கைகள் தாமே வந்து உன்னைத் தழுவும் ; நீயும் வலிமைமிக்க பரத்தையின் குவிந்த மார்பகத்தால் மோதப்பட்ட சந்தனத்தைக் கொண்டுள்ளாய் ; அவளாலே தழுவப்பட்டமையால் துவண்ட மாலையையும் அணிந்துள்ளாய் ;  ஆகவே உன்னைத் தொடுதல்  பயன்படாது கழிந்த கலத்தைப் பயன்படக் கொள்ளுதல் போலாகும்; இனி நீ இங்கு வரவேண்டா !
நற்றிணை – அரிய செய்தி – 89
நஞ்சும் உண்பர்
 முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
 நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்
…………………….. நற். 355 : 6 – 7
 நட்புடைய நல்ல கண்ணோட்டம் உடையவர்முன் நஞ்சைக் கலந்து உண்ணக் கொடுத்தாலும் அவர்கள் அதனை உண்டு நல்ல கண்ணோட்டம் உடையர் என்பதை மெய்ப்பிப்பர்.
ஒப்புநோக்குக –
 பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
 நாகரிகம் வேண்டு பவர் – குறள்.580             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக