புதன், 23 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 85 - 87

நற்றிணை – அரிய செய்தி – 85 - 87
கள் – களியாட்டம்
வங்கா வரிப் பறைச் சிறுபாடு முணையின்
செம்பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன்னகை அழுங்கா பால் மடுத்து
அலையா உலவை ஓச்சி சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும்
துணை நன்கு உடையள் மடந்தை யாமே
மதுரை மருதளினநாகனார். நற். 341 : 1 – 6
 குறமகள் – வங்கா என்னும் பறவை தன் இனத்துடன் நிரைபடப் பறந்து செல்வதைப் பார்த்து மகிழ்ந்து -  சிவந்த புள்ளிகளை உடைய அரக்கினாற் செய்யப்பட்ட வட்டுச் சாடியின் நாவிலிருந்து ஊற்றப் பெறும்  - மகிழ்ச்சியுடன் ஆடற்கேற்ற இனிய கள்ளை அருந்துவாள்; பின் அங்குமிங்குமாக அலைந்து மரக்கிளையை கொண்டு ஓச்சி ; சிற்சில சொற்களைக் கூறும்; குன்றத்திடத்தே  இருக்கும் தன் காதலனோடு கையால் சிறு நொடி பயிற்றிக் காட்டும் – இவ்வாறு செய்யும் அவளுக்குத் துணை நன்கு அமைந்துள்ளது – ஆனால் எமக்கோ… ( தலைவி பிரிவால்  தலைவன் வருந்துவான்)
நற்றிணை – அரிய செய்தி – 86
போற்றுவர் இன்றி வாழ்வேது
அரிய பெரிய கேண்மை நும் போல்
 சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்
 தேறா நெஞ்சம் கையறுபு வாட
நீடின்று விரும்பார் ஆயின்
வாழ்தல் மற்று எவனோ………
நம்பிகுட்டுவனார் . நற்.345 : 6 – 10
துறைவ ! உம்மைப் போன்ற சான்றாண்மையை எதிரேற்றுப் போற்றும் செம்மையான கொள்கையாரும்; தம்மை அடைந்தாரைப் பாதுகாவாதும் தெளியாத உள்ளத்துடன் செயலழிந்து வாடுமாறும் நெடுநாள் விரும்பாதும் கை விட்டனராயின் அவரை அடைந்தார் உயிர் வாழ்தல் யாங்ஙனம் ?
நற்றிணை – அரிய செய்தி – 87
வேனில் தேரை
வேனில் தேரையின் அளிய
காண வீடுமோ தோழி என் நலனே.
பெருங்குன்றூர் கிழார். நற். 347 : 10 – 11

தலைவன் தலைவியை வரையாது காலம் தாழ்த்தினான் – தலைவி வருத்தமுற்றாள். கோடைக் காலத்தில் தவளை மணலுள் புகுந்து கிடப்பது போல் என் உடலில் பசலை மறைத்த  அழகு நலன்கள் என்னை உயிருடன் விடுமோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக