செவ்வாய், 14 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1257


திருக்குறள் -சிறப்புரை :1257

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின். ---- ௨ ௫ ௭

நம்மால் விரும்பப்பட்ட காதலரொடு ஒத்துணர்ந்து இன்பம் துய்க்கும்போது,நாணம் என்ற ஒன்று  இருப்பதையும் அறியமுடியாதபடி இருந்தோமாக.

உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல
நாணுவரை நில்லாக் காம நண்ணி
நல்கினள் வாழியர் வந்தே ஓரி
பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லிக்
கார்மலர் கடுப்ப நாறும்
எர்நுண் ஓதி மாஅ யோளே.’ ---அகநானூறு.

 நெஞ்சே….! ஓரி என்பானது பல பழங்களையுடைய பலாமரங்களின் பயன் மிக்க கொல்லி மலையின், கார்காலத்துப் பூக்கும் மலரினை ஒப்ப மணக்கும் அழகும் மென்மையும் பொருந்திய கூந்தலையுடைய மாமை நிறத்தினளாகிய தலைவி, உப்பினாலாகிய அணையில் தடைப்பட்டு நில்லா வெள்ளத்தைப்போல, நாணத்தின் எல்லையில் அடங்காத காமம் பொருந்தப்பெற்றுப் புணர்ந்து நம் துன்பத்தினை நீக்கி அருள் செய்தனள், வாழ்வாளாக…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக