திங்கள், 13 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1255


திருக்குறள் -சிறப்புரை :1255

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று. ---- ௨ ௫ ௫

தம்மை விரும்பாது நீங்கிச் சென்றார்பின் செல்லாத பெருந்தன்மையான   நற்குணம், காமநோய் கொண்டவர்களிடத்து இல்லாத ஒன்றாகும்.

சூரர மகளிரின் நின்ற நீமற்
யாரையோ எம் அணங்கியோய் உண்கு எனச்
சிறுபுறங் கவையின னாக அதற் கொண்டு
இகுபெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என்
உள் அவன் அறிதல் அஞ்சி உள்ளில்
கடியக் கூறி கைபிணி விடாஅ
வெரூஉ மான் பிணையின் ஒரீஇ நின்ற
என்னுரத் தகைமையில் பெயர்த்துப்  பிறிது என் வயின்
சொல்லா வல்லிற்றும் இலனே அல்லாந்து
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலா ஆறு இல்லை தோழி நான் சென்மோ.” ---அகநானூறு.

தோழி…! நேற்றைய பொழுது துனைப்புனத்தின்கண் தோன்றிய ஒருவன், சூரர மகளிர் போல நின்றநீ யாரையோ, எம்மை வருத்தினவளே, நின்னை நுகர்வேன் என்று கூறி, எனது பிடரியினை அணைத்துக்கொண்டவனாக, அதற்கொண்டு அவ்வுரைக் கருத்தினை மனத்திற்கொண்டு, மழைபெய்யப் பெற்ற மண் போல, நெகிழ்ந்து வருந்திய என் உள்ளத்து நிலையினை அவன் அறிதலை அஞ்சி, மனத்தொடு படாத கடிய சொற்களைக்கூறி, அவன் கையை அகற்றி, அச்சமுறும் பெண்மானைப்போல் விலகி நின்ற எனது வன்னிலையைக் கண்டு கூசி, தன் காதலை உள்ளடக்கிக் கொண்டு, பிறிதோர் சொல்லும் என்னிடம் கூற வலியற்றவனாகி, அல்லாந்து வருந்தி, தன் இனத்தினின்று நீங்கும் களிற்றைப் போல் மீண்டான். அவன் இன்றும் வந்து நமக்குத் தோலாதிருத்தல் இல்லை….தோழி நாம் செல்வோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக