செவ்வாய், 14 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1258


திருக்குறள் -சிறப்புரை :1258

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.------ ௨ ௫ ௮

பல மாயங்களைச் செய்யும் கள்வனைப் போல, காதலரின்  மென்மையான இனிய மொழிகள் அன்றோ யாம் பெற்ற  பெண்மை என்னும் அரிய காப்பினை  உடைக்கின்றன.

பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம் என்றி அன்று இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல
தழலும் தட்டையும் முறியும் தந்து இவை
ஒத்தன நினக்கு எனப் பொய்ந்தன கூறி
அன்னை ஓம்பிய ஆய்நலம்
என்னை கொண்டான் யாம் இன்னமால் இனியே.” –குறுந்தொகை.

தோழி…! பெரிய ஊரினர் மேற்கொண்ட ஆரவாரத்தையுடைய விழாவைக் காண்பதற்குச் செல்வோம் என்று நீ வற்புறுத்திக் கூறுகின்றாய் ; அன்று நாம் செல்லுங்கால், இங்கு நல்லோரால் கூறப்பட்ட நல்ல வாய்ச் சொற்கள் பலவாக இருந்தன. கிளியை ஓப்புதற்குத் தழலையும், தட்டையையும் அணிந்து கொள்வதற்குத் தழயாடையையும்  என்னிடம் தந்து, இப்பொருள்கள் நினக்கு ஏற்புடையன எனப் பொய்யான புனைந்துரைகளை என்னிடம் கூறினான். தாய் பாதுகாத்ததும் ஆய்த்தார் ஆய்ந்ததுமாகிய என் அழகினை, என் தலைவன் கவர்ந்து சென்றான், யான் இப்பொழுது இந்நிலையில் உள்ளேன்.

1 கருத்து: