வெள்ளி, 17 மே, 2019

திருக்குறள் சிறப்பறிவோம்


திருக்குறள் சிறப்பறிவோம்

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.104.

ஒருவர் செய்த உதவியானது சிறிதாயினும் அதன் பயனைத் துய்த்து உணர்ந்தவர், அவ்வுதவியைப் பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
தினையின் பயனையும் பனையின் பயனையம் சொல்லவும் வேண்டுமோ..?

தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி.” –திருவள்ளுவமலை.

வள்ளுவனாரின் குறட்பா பனித்துளிபோல் சிறியதாயினும் அதில் அடங்கியுள்ள பொருள், பனித்துளிக்குள்ளே நிழலாக அடங்கித் தெரியும் மிகப்பெரிய பனை மரம் போன்றதாம்.

நடுவூருள் வேதிகை கற்றுக்கோள் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வர்
குடிகொழுத்தக் கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.”  ---நாலடியார்.

பலரும் தம்மை விரும்பி வரும்படி உதவி செய்து வாழ்கின்றவர்கள், ஊரின் நடுவே மேடைசூழ விளங்கும் பயன்தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர்; தமது குடி செல்வத்தில் செழிக்கும் காலத்தும் பிறர்க்கு உதவி செய்யாத மாக்கள், சுடுகாட்டுள் நிற்கும் காய்க்காத ஆண்பனையைப் போன்றவராவர்.
தினையும் பனையும் உருவால் (சிறிய-பெரிய) ஒப்புமையுடையாதாயினும் பொருளால் பெருஞ்சிறப்புடையன என்பதறிந்து இன்புறுக.
பனை வளர்ப்போம்; பயன் பெறுவோம்….!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக