புதன், 29 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1288


திருக்குறள் -சிறப்புரை :1288

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு. ----- ௨ ௮ ௮

கள்  உண்பார்க்கு இழிவுதரும் துன்பத்தைச் செய்தாலும் மேன்மேலும் அதனை  விரும்பி  உண்பதைப்போல,  தலைவ..! நீ, மீண்டும் மீண்டும் எம்மைப் பிரிந்து வருத்தினாலும் நின் மார்பினைத் தழுவுதல் இன்பம் தருவதாக உள்ளது.

மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை
இருங்கரை நின்ற உப்புஒய் சகடம்
பெரும்பெயல் தலைய வீந்தாங்கு இவள்
இரும்பல் கூந்தல் இயல் அணி கண்டே.”---- குறுந்தொகை.

ஏறுதற்கரிய கரையில் நின்ற வண்டியில் ஏற்றப்பட்ட உப்பு, பெருமழையால் சிறுக சிறுகக் கரைந்து அழிந்து, பின் சகடமும் அடித்துச் செல்லப்படுவதப்போல. உடல் நிற்க உயிர் அழிய,   யான் கலங்கி, அவளைக் குறையிரந்த போது மறுத்தனள்.  இவளது கரிய பலவாகிய கூந்தலோடு கூடிய, இயற்றப்பட்ட அழகினைக் கண்டு நீ ஒரு முறை விரும்பிய பின்னரும் விருப்பத்தை அடைந்தனை. நின் செயல் கள்ளை உண்டு அறிவு அழிந்ததன் மேலும் அதனை விரும்பி உண்பது போல் உள்ளது.

1 கருத்து:

  1. குறள் மற்றும் குறுந்தொகை பாடல்களில் நேர் மொழி பயன்பாட்டின் ஒற்றுமையும் உவமை ஒற்றுமையும் ஒன்றாக இருப்பினும் இவற்றை எடுத்தாளும் முறையில் உள்ள சீர்மையும் சிறப்பும் மாற்றமும் கூர்ந்து நோக்கற்பாலது!

    பதிலளிநீக்கு