சனி, 18 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1266


திருக்குறள் -சிறப்புரை :1266

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட. ----- ௨ ௬ ௬

நெடுநாட்களாகப் பிரிந்திருந்த தலைவன் ஒருநாள் வருவானாக, அந்நாளில், பிரிவுத் துன்பமெல்லாம் ஒருங்கே அழிய, அவரை அப்படியே அள்ளிப் பருகுவதுபோல் நுகர்வேன்.

இலங்குவளை நெகிழப் பரந்துபடர் அலைப்ப யாம்
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்துகொண்டு
அடக்குவம் மன்னே தோழி மடப்பிடி
மழைதவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று
கழைதின் யாக்கை விழைகளிறு தைவர
வாழையம் சிலம்பில் துஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பே.” ---அகநானூறு.

மேகம் தவழும் பக்கமலையில், இளயபெண் யானை, தனது முதற் சூலினை ஈன்று, மூங்கிலைத் தின்னும், தன்பால் விருப்பமிக்க தனது ஆண் யானையைத் தழுவிக் கொண்டிருக்க, வாழைகள் அழகிய அப்பக்க மலையில் துயிலும்சாரலையுடைய மலைநாடனாய தலைவனது மென்மையுடைய மார்பினை, யாம் முயங்குந்தொறும்.  முயங்குந்தொறும் உயங்க முகந்துகொண்டு, வருந்த முகந்துகொண்டு, நம் மார்பின்கண்ணே அடக்கியிருப்போம்….!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக