ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----144

 

தன்னேரிலாத தமிழ்----144

உயிரினம் குறித்து ஆராய்ந்த தொல்காப்பியரின் - - பகுப்பாய்வு

மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்ற

ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே

                                                            (தொல். 1500)

இந்நூற்பாவின் பொருளாவது..

                        இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின் இருதிணைப் பொருளும் பற்றிவரும் இளமைப் பெயர் உணர்த்துதல் நுதலிற்று. பார்ப்பு முதலாகக் குழவியீறாகச் சொல்லப்பட்டவொன்பதும் இளமைப் பெயர் என்றவாறு.

அவற்றுள்-

                   பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றினிளமைப் பெயர்களாகச்சுட்டியுள்ளமை அறிவியல் நோக்குடையன.

பறவைதம் பார்ப்புள்ளஎன்று கலித்தொகையும்வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவேஎன ஐங்குறுநூறும் கூறுவதைக் காணுங்கள்.பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்ற ஆய்வு 18 ஆம் நூற்றாண்டுவரை நடந்தது.கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத் தேவர்பறவைகள் காற்றில் மிதப்பதில்லை ;  காற்றைக் கிழித்துக்கொண்டு ஏகும்என்று குறிப்பிட்டுள்ளார்பறவைகள் காற்றைவிடக் கனமானவை.

  பறவைகள் புலம் பெயர்தலைவலசை போதல் என்று இலக்கியங்கள் குறிக்கின்றன.

 புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்

விதுப்புற அறியா ஏமக் காப்பினை

   --குறுங்கோழியூர் கிழார் புறநா. 20: 18-19

                   என்று புறநானூறு குறிப்பிடுகின்றது.” வதிபுள்என்பது ஓரிடத்து நிலைத்து வாழும் பறவையைக் குறிப்பதாகும். பறவைகள் உணவிற்காகவும் இனவிருத்திக்காகவும் இடம்பெயர்தலை ஆய்வாளர்கள் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். உயிரின வகைப்பாடு ஆய்வாளர்கள் (Taxonomists) சுமார் 300 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர்

                        சுவீடன் நாட்டு ஆய்வாளர் லின்னேயஸ் (1707 – 1778)  உயிரினங்களுக்கு லத்தீன் மொழியில் இரு பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தினார். கடந்த 230 ஆண்டுகளில் சுமார் 15 இலட்சம்உயர்நிலைஉயிரினங்கள் இவ்வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உயிரியல் நிபுணர் ஜெ.பி.எஸ்.ஹால்டேனிடம் உயிரினங்கள் குறித்துக் கேட்டபோதுஆண்டவனுக்கு வண்டுகள் மீது அபரிதமான அபிமானம் உள்ளதாகத் தோன்றுகிறதுஎன்றார். உயிரினங்களில் நான்கில் ஒரு பகுதி வண்டுகளாக உள்ளன. தமிழில் தும்பி  உயர் சாதி வண்டாகக் குறிக்கப்படுகிறது.

2 கருத்துகள்:

  1. பறவைகள் பறப்பதில்லை, காற்றைக் கிழித்துக்கொண்டு போகும்.. அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஐயா, தாங்கள் அளித்துவரும் ஊக்கம் இனிது; கற்றலின் பயன் கற்பித்தலே..... தங்களைப்
    பின் தொடர்ந்து வருகிறேன்...!

    பதிலளிநீக்கு