வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----135

 

தன்னேரிலாத தமிழ்----135

             உலகம்சொற்பொருள் : உல்முன்மை, தோன்றுதல், வளைதல், சுற்றுதல், உலாவுதல்...எனப் பல பொருள் குறித்த ஒரு சொல். உலகுஉருண்டையானது, சுற்றிவருவது. உலகுஉலகம். ----செந்தமிழ்ச் சொற்பிறப்பியல், பேரகர முதலி.

                       வானியல் வல்லுநர்களாகத் திகழ்ந்த தமிழ்ச் சான்றோர்கள் உலகத் தோற்றம் குறித்தும் சிந்தித்துள்ளனர். கி.மு. 585 இல் கிரகணம் தோன்றுவதை முன்கூட்டியே தெரிவித்தவர் மைலீட்டஸ் தீவில் பிறந்த தேலிஸ். இவரே உலகம் எதனால் ஆனது என்ற கேள்வியைக் கேட்டுஇந்த உலகம் நீரால் ஆனது என்றும் நீரே எல்லாப் பொருள்களுக்கும் மூலமானது என்றும் கூறினார். “ நீரின்றமையாது உலகுஎன்று ஓர் அறிவியல் நுட்பத்தைத் திருவள்ளுவர் கூறினார். தேலிசுக்குப் பின்வந்த சிலர் இந்த உலகம் நெருப்பால் ஆனது ; காற்றால் ஆனது என்றெல்லாம் கூறிச் சென்றனர். ஆனால் தொல்காப்பியர் என்றொரு விஞ்ஞானி மட்டும் இவ்வுலகம் ஐம்பெரும் இயற்பொருள்களின் சேர்க்கை என்று மிகச் சரியாக எடுத்துரைத்தார்.

 நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்              

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

                                                                -----தொல். 1589: 1- 2

                      அளத்தற்கரிய ஐம்பெரும் பொருள்களாகிய நிலம். தீ. நீர். வளி (காற்று). விசும்பு என்ற ஐந்தும் கலந்தும் மயங்கியும் கிடப்பது இவ்வுலகம் என்றார். இஃது அறிவியல் உண்மை.

 உலகம் என்றது உலகினையும் உலகினுட் பொருளையும். உலகமாவது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம் நீர் தீ வளி ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமைபடாது நிற்கும்; அவ்விரண்டனையும் உலகம் உடைத்தாகலின் கலந்த மயக்கம் என்றார். “

என்று விளக்குவார் இளம்பூரணர். இதனால் எந்தக் கடவுளும் இவ்வுலகை உருட்டி வைக்கவில்லை என்பதும் விளங்குமன்றோ.

                        இவ்வுலகமும் உலகப் பொருள்களும் இவ்வைந்து பூதங்களால் உருவானவை. அழியும் போதும் இவ்வைந்தாகவே மாறும். மீட்டுருவாக்கம் பெற்று இவை சேர்ந்தும் பிரிந்தும் பலவகைப் பொருள்கள் ஆகின்றன. மனித உடலுட்படத் தோன்றியும் மறைந்தும் உலகம் நடக்கிறது.” என்று விளக்கம் தருகிறார் தமிழண்ணல்.

மண் திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை …..

----முரஞ்சியூர் முடிநாகராயர். புறநா. 2 : 1 - 6

                              அணுச் செறிந்த நிலனும்அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும்அவ்வாகாயத்தைத் தடவிவரும் காற்றும்அக்காற்றின்கண் தலைப்பட்ட தீயும்அத்தீயோடு மாறுபட்ட நீரும் என ஐவகைப்பட்ட பெரிய பூதத்தினது தன்மைபோல…..” இவ்வுலகம் விளங்குவதாகக் கூறுகிறார்.

                           தமிழர்களின் சிந்தனை இவ்வாறிருக்ககி.பி. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவெடி மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி ரோஜர்பேக்கன் இந்த உலகம் உருண்டையானது என்றார். அவருக்குப் பின்னே கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ உலகம் உருண்டையானது என்று அறிவியல் வழி மெய்ப்பித்தார். அக்காலத்தில் இவர்கள் இருவருக்கும் கிடைத்தபரிசு சிறைத் தண்டனை ; கிடைத்த பட்டம் பைத்தியக்காரர்கள்.

                             தொல்காப்பியர் காலந்தொட்டே  அறிவியலைப் புரிந்து போற்றும் அளவிற்குத் தமிழர்களுக்கு அறிவு இருந்தது அதனாலன்றோ தொல்காப்பியர் திருவள்ளுவர் போன்ற சான்றோர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக