திங்கள், 30 செப்டம்பர், 2024

 

இலாவோசு 

என்று அழைக்கப்படும் இலாவோசு மக்கள் குடியரசு (ஆங்கிலம்Lao People's Democratic Republicஇலாவோசு மொழிສາທາລະນະລັດ ປະຊາທິປະໄຕ ປະຊາຊົນລາວSathalanalat Paxathipatai Paxaxôn Lao); தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும்.

இந்த நாட்டின் வடமேற்கில் சீனாமியன்மார்; கிழக்கில் வியட்நாம்; தெற்கில் கம்போடியா; மேற்கில் தாய்லாந்து ஆகிய நாடுகள் அமைந்து உள்ளன.

தற்கால இலாவோசு, பழைய இலாவோசிய அரசான லான் சாங் எனும் அரசின் கலாச்சாரத்தை அடையாளப் படுத்துகிறது. அந்த லான் சாங் அரசு (Lan Xang) 14-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரசுகளில் ஒன்றாக விளங்கியது.[3]

தற்கால லாவோஸ், பழைய லாவோசிய அரசான லான் சாங் எனும் அரசின் கலாச்சாரத்தை அடையாளப் படுத்துகிறது. அந்த லான் சாங் அரசு (Lan Xang) 14-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய அரசுகளில் ஒன்றாக விளங்கியது.

லாவோஸ் நாடு தென்கிழக்கு ஆசியாவின் ஒரு மையப் பகுதியில் அமைந்து உள்ளது. அதன் காரணமாக, இந்த அரசு ஒரு வர்த்தக மையமாக மாறியது. அதே வேளையில் பொருளாதார ரீதியாகவும் கலாசார ரீதியாகவும்செல்வம் செழிக்கும் நாடாகவும் மாறியது.[3]

கடந்த நாற்பது நாட்களாக இலாவோ நாட்டின் தலைநகர்வியண்டைன் நகரில் இருந்து வருகிறேன். பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருவதைப் பார்த்துவருகிறேன். நாட்டின்  இயற்கை அழகை அவ்வளவு எளிதாக எடுத்துக்கூறவிட முடியாது.  மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மனிதநேயமிக்க மக்களை நாள்தோறும் கண்டுவருகிறேன்.  மக்கள் நம்முடைய தோற்றத்தைக் கண்டு இந்தியன் என்று உணர்ந்துபோதும் அவர்கள்இளமுறுவல்உகுத்துக் கடந்து செல்வார்கள்.

 நாட்டில், சீனாவின் தொடர்வண்டித் துறை  இயங்குகிறது , தலைநகர் தொடர் வண்டி நிலையம் என்னை வியப்பில் ஆழ்த்தியது , வானூர்தி நிலையம் என்றுதான் சொல்லவேண்டும்,

……………………………………………………….தொடரும்.

 ……நாளைமறுநாள் தஞ்சாவூருக்குத் திரும்பவுள்ளேன்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 45 . கணி புன்குன்றனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 45 .  கணி புன்குன்றனார்.

செய்யத்தக்கன அறிந்து செய்க.

”மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்

உரம் சாச் செய்யார் உயர் தவம் வளம் கெடப்

பொன்னும் கொள்ளார் மன்னர்…..” – நற்றிணை: 226, 1– 3.

              இவ்வுலகத்துச் சிறப்புக்குரிய மாந்தர், மருந்து தந்து உதவும் மரத்தை அடியோடு அழிக்க முற்படார் ; தம் உடல் வலிமை முற்றும் அழியும்படி தவம்  செய்யார் ; மன்னரும் குடிமக்களின் வளம் கெடும்படி வரி கொள்ளார்.

வியாழன், 26 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 44. மிளைகிழான் நல்வேட்டனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 44. மிளைகிழான் நல்வேட்டனார்.

செய்வினைப் பயன்.

”நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வமன்று தன்செய்வினைப் பயனே..” நற்றிணை: 210, 5,6.

             பலரால் பாராட்டப்படுதலும் விரைந்து செல்லும் குதிரை, தேர் முதலியவற்றை ஏறிச் செலுத்தலும் செல்வமில்லை, முன் செய்த நல்வினைப் பயனே….! (முற்பகல் செயின் பிற்பகல் விளையும்)

புதன், 25 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 43. இளங்கோவடிகள்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 43. இளங்கோவடிகள்.

தன் பயனை ஊட்டும் வல்வினை.

”ஒழிக என ஒழியாது ஊட்டும் வல்வினை

இட்டவித்தின் எதிர்வந்து எய்தி

ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா..” –சிலப்பதிகாரம்: 10; 171-173.

                ஒழிக என வேண்டினாலும் ஒழியாது,  தானே முன்வந்து தன் பயனை ஊட்டக்கூடியது வல்வினையாம் ; நிலத்தில் இட்ட வித்தினைப்போல ஒன்றுக்குப் பத்தாகப் பெருகி உரியவரை வந்து சேரும் அதை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

செவ்வாய், 24 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 42.முன்றுறை அரையனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 42.முன்றுறை அரையனார்.

தொழுதால் மட்டும் தீர்ந்திடுமோ துன்பம்.. ?

“முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று

தொழுது இருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்…” – பழமொழி : 29. 1,2.

            உலகத்தை முழுமையாக முன்னே படைத்தவன், நாம் அடைகின்ற துன்பத்தையும் படைத்தான் என்று எண்ணி அவனைத் தொழுது, முயற்சி இன்றி இருந்தால் அல்லல் நீங்குமோ….?

 

திங்கள், 23 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 41.பாலைபாடிய பெருங்கடுங்கோ.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 41.பாலைபாடிய பெருங்கடுங்கோ.

இளவேனில் கால இன்பம்.

”நிலன் நாவில் திரிதரூஉம் நீள்மாடக் கூடலார்

புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது.” –கலித்தொகை:35, 17,18.

                  தோழி…! நில உலகில் உள்ளார் நாவிலே தவழும் தமிழால் நீண்ட மாடங்களை உடைய மதுரை நகரில் வாழும் அறிவினை உடைய சான்றோர் நாவில் பிறந்த கவிதைகளின் புதுமையை நுகரும் இளவேனில் காலமல்லவோ இது.” என்றாள் தலைவி.

சனி, 21 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 40.பாலைபாடிய பெருங்கடுங்கோ.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 40.பாலைபாடிய பெருங்கடுங்கோ.

நற்குணம் உடையவர் இயல்பு.

”தாய் உயிர்பெய்த பாவை போல

நலன் உடையார் மொழிக்கண் தாவார்.”- கலித்தொகை: 22. 5,6.

                    ஓவியன் , தான் உயிர்ப்புக் கொடுத்த பாவை , தான் அழியும்வரையில் அழகுடனேயே இருப்பதுபோல நற்குணமுடையவர் சொன்ன சொல் தவறமாட்டார்.

 

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 39. நல்லந்துவனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 39. நல்லந்துவனார்.

கனவு நனவாகுமே.

”கனவில் வந்த கானல்அம் சேர்ப்பன்

நனவில் வருதலும் உண்டுஎன

அனைவரை நின்றது என்அரும்பெறல் உயிரே.”

கலித்தொகை: 128, 24 – 26.

                       தோழி…! யான் காணும்படி என் கனவிலே வந்த தலைவன், நனவில் வந்து கூடுதலும் உண்டு என்று கருதி அவன் வரவை எதிர்நோக்கி என் அரிய உயிரும் என்னைவிட்டு நீங்காது நின்றது. –தலைவி கூற்று.

வியாழன், 19 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 38.சீத்தலைச் சாத்தனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 38.சீத்தலைச் சாத்தனார்.

வெகுளாமையே அறிவுடைமை.

“கற்ற கல்வி அன்றால் காரிகை

செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர். “

 மணிமேகலை: 23.129,130.

             காரிகையே…!கற்ற கல்வி ஒன்றே மெய்யுணர்வு ஆகாது ; உள்ளத்தில் வெகுளி தோன்றாமல்  அடக்கியவர் எவரோ அவரே முற்றவும் அறிவுடையோர் ஆவர்.

 

புதன், 18 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 37. ஆலத்தூர் கிழார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 37. ஆலத்தூர் கிழார்.

செய்ந்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.

“நிலம் புடை பெயர்வதாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென

அறம் பாடிற்றே ஆயிழை கணவ,,,” – புறநானூறு:34, 5 – 7.

                 தலைவனே…! நிலம் தலைகீழாகப் பெயர்வதாயினும் ஒருவன் செய்த நன்றியை மறந்தவர்க்கு அத்தீவினையிலிருந்து உய்வதற்கு வழியில்லை என அறநூல் கூறும். செய்ந்நன்றி மறவற்க,       


செவ்வாய், 17 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 36. கணிமேதாவியார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 36. கணிமேதாவியார்.

அறவழியில் கொடாதது கொடை ஆகாது.

“உண்டி உறையுள் உடுக்கை இவை ஈந்தார்

பண்டிதராய் வாழ்வார் பயின்று..- ஏலாதி: 9, 3-4.

            வறியவர்களுக்கு உண்ண உணவும் இருக்க இடமும் உடுக்க உடையும் கொடுப்போர் யாவராலும் போற்றப்பட்டு இனிது வாழ்வார்கள்.

 

திங்கள், 16 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 35.சமண முனிவர்கள்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 35.சமண முனிவர்கள்.

பலரும் விரும்பும்படி வாழ வேண்டும்.

”நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க

படுபனை அன்னர் பலர் நச்ச வாழ்வார். –நாலடியார்: 10.

            பலரும் விரும்பும்படி உதவிசெய்து வாழ்கின்றவர்கள் ஊரின் நடுவே மேடை சூழ விளங்கும் பயன் தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர்கள்.

சனி, 14 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 34. மாங்குடி மருதனார். ஓணம் பண்டிகை

 

சான்றோர் வாய் (மை) மொழி : 34. மாங்குடி மருதனார்.

ஓணம் பண்டிகை

”கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஓண நல்நாள்

கோணம் தின்ற வடுஆழ் முகத்த

சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை

மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்

மாறாது உற்ற வடுப்படு நெற்றி

சுரும்புஆர் கண்ணிப் பெரும்புகல் மறவர்.

மதுரைக்காஞ்சி : 590 – 596.

                  திரட்சிகொண்ட அவுணரை வென்ற, பொன்னால் செய்த மாலையை உடைய கருநிறம் உடைய திருமால் பிறந்த ஓணமாகிய நன்னாளில் ஊரில் உள்ளார் விழா எடுப்பர்.

                 இற்றை நாள் போர் செய்வோம் என்று கருதி மறத்தைக் கொண்டிருக்கும் தெருக்களில் தம்மிம் தாம் மாறுபட்டுப் போர் செய்யும் போரில், மாறாமல் தம்மீதுபட்ட அடியால் வடுவழுந்திய நெற்றியையும் சுரும்புகள் மொய்க்கும் போர்ப் பூவினையும் பெரிய விருப்பத்தினையும் உடைய மறவர், திருமாலுக்கு மதுரையில் ஓணநாள் விழா நிகழ்த்தப் பெற்றது. அவ்விழாவில் மறவர்கள் சேரிப் போர் நிகழ்த்துதல் வழக்கமாகும்.

(கோணம் – தோட்டி,(அங்குசம்) ; சாணம் – தழும்பு ; சமம் – போர்.)

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 33. வெள்ளைக்குடி நாகனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 33. வெள்ளைக்குடி நாகனார்.

இயற்கையும் செயற்கையும்

“மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்

இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்

காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம்…” புறநானூறு,35: 27 – 29.

                     மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் இயல்பு அல்லாதன மக்களது தொழிலிலே தோன்றினும் இவ்விடமகன்ற உலகம் , நாட்டை ஆளும் காவலனைப் பழிக்கும்.

                   என்னே…! சங்கப்புலவரின் தொலைநோக்குச் சிந்தனை, இயற்கை அல்லன செயற்கையால் தோன்றுமாம். அஃதாவது, மக்கள் தொழிலால் தோன்றுமாம். காடழித்தல், மணல் கொள்ளையடித்தல், நெகிழி பயன்படுத்துதல், காற்றை மாசுபடுத்தல், நீரை நஞ்சாக்குதல் இன்னபிற  கொடுமைகளை மக்கள் செய்கின்றனரே இவற்றையே செயற்கையால் இயற்கையை அழித்தல் என்றார் புலவர்.

 

 

வியாழன், 12 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 32. கபிலர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 32. கபிலர்.

இடித்துரைத்தல்

”நின்னும் நின் மலையும் பாட இன்னாது

இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்

முலையகம் நனைப்ப விம்மி

குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே

….”புறநானூறு., 12 -15.

அச்சிற்றூரில் ஒரு வீட்டின் வாயிற்கண் தோன்றி நின்று நின்னையும் நின் மலையையும் வாழ்த்திப் பாடினோம் ; அப்பொழுது இன்னாதாகச் சொரிந்த கண்ணீரை அடக்க மாட்டாதவளாய் முலையிடம் நனைப்பப் பொருமி குழல் இரங்கி ஒலிப்பதுபோல் ஒருத்தி மிகவும்  அழுதால் ; மயிலுக்குக் கொடை நல்கிய பேகன் தன் மனைவி கண்ணகியை அழுமாறு துன்பப்படவிடலாமா என்னும் கருத்தை மறை பொருளாக வைத்துப் புலவர் அறிவுறுத்துகின்றார்.

காதல்  அன்புடைய மனைவியும் கணவனும் பிரிந்திருப்பின் இருவரையும் ஒன்றுபடுத்தி வாழ்வு இனிது நடக்குமாறு செய்தல் பண்டைத் தமிழ்ச் சான்றோராகிய புலவர்களின் இயல்பு, அச்செயலையே பரணர், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் போன்ற புலவர்கள் செய்து அரசனை நல்வழிப்படுத்தினர்.

புதன், 11 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 31. பெருஞ்சித்திரனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 31. பெருஞ்சித்திரனார்.

முதுமையும் வறுமையும்

“பால் இல் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்

கூழும் சோறும் கடைஇ ஊழின்

உள் இல் வறுங்கலம் திறந்து அழக்கண்டு

மறப்புலி உரைத்தும் மதியம் காட்டியும்

நொந்தனளாகி………………………….” புறநானூறு, 160: 15 – 19.

                  இளம் புதல்வன் பால் இல்லாத வற்றிய முலையைச் சுவைத்துப் பால் பெறானாய்க் கூழையும் சோற்றையும் வேண்டி உள்ளே ஒன்றுமில்லாத வறிய சோற்றோடு கலத்தைத் திறந்து பார்த்து,  அதில் உணவைக் காணாது வருந்தி அழுகின்றான் ; அவன் அழுகையை நிறுத்த, காட்டில் உறையும் மறப்புலி வருகின்றது என்று சொல்லி அச்சுறுத்தியும்  நிலவைக் காட்டியும் அவற்றால் தணிக்க இயலாது வருந்தினாள்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :30. பெருங்குன்றூர் கிழார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :30. பெருங்குன்றூர் கிழார்.

 மக்களை வருத்தி வரி கொள்ளும் கொடுங்கோலன்.

”மன்பதை காக்கும் நின்புரைமை நோக்காது

அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு

நும்மனோரும் மற்று இனையர் ஆயின்

எம்மனோர் இவண் பிறவலர் மாதோ.” – புறநானூறு: 20, 1 – 4.

அன்பும் அறனும் இல்லா ஆட்சி. தலைவனே….! மக்களக் காக்கும் பெரும் பொறுப்பினை உணராது அன்பின்றி அறமற்ற முறையில் நீயும் நும்மை ஒத்தாரும் ஆட்சி செய்வார்களானால் எம்மைப் போன்றோர் இவ்வுலகில் பிறவாதிருத்தலே நன்று, என்று

அன்று புலவர் சொன்ன சொல் இன்றும் உண்மையே போலும்….!

 

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :29.செல்லூர்க் கோசிகன் கண்ணனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :29.செல்லூர்க் கோசிகன் கண்ணனார்.

மக்கட்பேறு.

”இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

மறுமை உலகமும் மறுவின்றி எய்துப

செருநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்

சிறுவர் பயந்த செம்மலோர் எனப்

பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்

வாயே யாக்குதல் வாய்த்தனம் தோழி…” – அகநானூறு,66 : 1 -6.

பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகினையுடைய மக்களைப் பெற்ற தலைமையுடையோர், இவ்வுலகத்துப் புகழொடும் விளக்கமுற்று, மறுமை உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர், என்று பல்லோர் கூறிய பழமொழியெல்லாம் உண்மையாதலைக் கண்கூடாகக் காணப் பெற்றோம்,  என்று மகிழ்ந்து கூறினாள் தலைவி.

( இம்மை உலகம் – இவ்வுடம்புடன் வினைப்பயன் நுகரும்  உலகம் ; மறுமை உலகம் – உயிர் இவ்வுடம்பின் நீங்கிச்சென்று வினைப்பயன் நுகரும் உலகம், மறுவின்று எய்துப என்பதனால் அது நல்லுலகம் என்பது பெற்றாம்.

புதன், 4 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :28. கதம்பிள்ளைச்சாத்தனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :28. கதம்பிள்ளைச்சாத்தனார்.

நல்ல நாள் பார்த்து, புத்தரிசி உணவு உண்ணல்.

“நல்நாள் வருபதம் நோக்கிக் குறவர்

உழாது வித்திய பரூஉக் குரல் சிறுதினை

முந்து விளையாணர் நாள் புதிது…” – புறநானூறு: 5 -7.

                 விதைத்தற்கும் விளைந்த தானியத்தை உண்பதற்கும் நல்ல நாள் பார்ப்பது பண்டைத் தமிழரின் வழக்கமாகும். இதனை நன்னாள் வருபதம் நோக்கி என்றும் சிறு தினை முந்து விளை யாணர் (புதிய வருவாய்) நாள் புதிது உண்மார் என்று கூறினார்.

நம் பொங்கல் பண்டிகையின் முன்னோட்டமாகக் கொள்க.

 

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :27. கோப்பெருஞ்சோழன்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :27. கோப்பெருஞ்சோழன்.

நல்வினை ஆற்றலே நன்றாம்.

”யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்

தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்

தொய்யா உலகத்து நுகர்ச்சியும் இல் எனின்

மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்

மாறிப் பிறவார் ஆயினும்…..

எவ்வாற்றானும் நல்வினை செய்தல் நன்றே.” –புறநானூறு, 214. 4 – 12.

யானையை வேட்டையாடச் சென்றவன் எளிதாக அதனைப் பெறவும் கூடும் ; குறும்பூழ்ப் பறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடு வருதலும் உண்டு ; அதனால் உயர்ந்த குறிக்கோளுடன் நல்வினை ஆற்றியோர் உலகில் இன்பம் கூடும் ; அஃது  கூடாயின் மாறிப் பிறத்தலால் பிறப்பில்லாமையை அடையக் கூடும் ; ஓங்கிய சிகரம் போன்று தமது புகழை நிலைநிறுத்தி பழியற்ற உடலோடு இறத்தல் நன்று ; எவ்வாறாயினும் நல்வினை ஆற்றலே நன்றாம்.

திங்கள், 2 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :26.சிறுவெண்தேரையர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :26.சிறுவெண்தேரையர்.

தாரை வார்த்துக் கொடுத்தல்.

“ஆக்குரல் காண்பின் அந்தணாளர்

நான்மறைக் குறி……..யின்

அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின்

மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ

கைபெய்த நீர் கடற்பரப்ப…’- புறநானூறு. 362.

                           அந்தணாளர்களே ….! நான்கு மறைகளிலும்…….. புறத்துறையாகிய பொருள் குறித்தலின் அறநூல்களிலும் குறிக்கப்படுவதும் அன்று, மருக்கையினின்றும் நீங்கி மயக்கத்தையும் போக்கி, கொடுத்தற்பொருட்டுப் பார்ப்பார்தம் கைகளில் பெய்த தாரை நீர் கடல் அளவும் பரந்து சென்றது.

”ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து..”ஒளவையார், புறநானூறு. 367. பொருளை யாசித்து நின்ற பார்ப்பார்க்கு, குளிர்ந்த கை நிறையும் வண்ணம் பொற்பூவும் பொற்காசும் தாரை (நீர்) வார்த்துக் கொடுத்தும்.

 

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :25. மாறோக்கத்து நப்பசலையார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :25. மாறோக்கத்து நப்பசலையார்.

பொருநன் பாடுங்காலம்.

”ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்று எழுந்து

தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்

நுண்கோல் சிறுகணை சிலம்ப ஒற்றி

நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தி..”- புறநானூறு: 383,1 – 4.

     ஒள்ளிய பொறிகளை உடைய சேவல் எழுப்பத் துயில் உணர்ந்து எழுந்து, குளிர்ந்த பனிதுளிர்க்கும் புலராத விடியற்காலத்தே, நுண்ணிய கோல்கொண்டு,தடாரிப் பறையை முழங்க அடித்து, நெடிய வாயிற்கடை நின்று, பலவாகிய உழவு எருதுகளை வாழ்த்தி……. பொருநன் பாடுவான்.