செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 141. அறிவியல் சிந்தனைகள் - சித்தர் மரபு.

 

சான்றோர் வாய் (மைமொழி : 141. அறிவியல்

சிந்தனைகள்  - சித்தர் மரபு. 

ஊன் என்று உடலை நம்பி இருந்த பேர்க்கே ஒரு நான்கு வேதம் என்றும் நூலால் என்றும் ;

நான் என்றும் நீ என்றும் சாதி என்றும்  நாட்டினார் ;

உலகத்தார் பிழைக்கத்தானே ;

அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள் ஆகாயம் நின்றநிலை  அறியலாமேஎன்று சாடுகின்றார் அகத்தியர்.

 

பேரறிஞர் இங்கர்சால் கூறியதும் பெரியார் ஈ.வே. ராமசாமி கூறியதும் சித்தர்கள் கூறிச் சென்ற கருத்துகள்தாம் என்பதை நாம் இப்பொழுது அறிந்துகொள்ள இயலும்.

 

பூட்டைத் திறப்பதும் கையாலே மனப்

      பூட்டைத் திறப்பதும் மெய்யாலே

வீட்டைத் திறக்க முடியாமல் விட்ட

      விதியிதுஎன்கிறார் ஞானப் பெண்ணே

தாடி வளர்த்துச் சடை வளர்த்து நல்ல சந்யாசி

      என்று ஒரு வேடம் இட்டே

ஓடித்திரிந்த விளையாட்டை இங்கே ஒப்புவது யாரடி ஞானப் பெண்ணே.” - - வாலைச் சித்தர். 

 

இவ்வாறு மருத்துவத்துடன் அறிவையும் போதித்த ஞான ஆசிரியர்களே சித்தர்கள்.

 

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொண மொண என்று சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ..”

என்பது உயர்ந்த ஞானப்பெருவெளியில் நின்று நடமிடும் சிவவாக்கியரின் பாடல்.

 

உடலும் உயிரும் பூரணமும் ஒன்று என்பது அகத்திய ஞானம். உள்ளத்தே இருக்கும் இறைவனை அடையமுடியாமல் வெறும் வழிபாட்டினால் பயனில்லை என்பது  சித்தர்கள் அனைவரும் கூறும் அறிவுரையாகும்.

 

சாத்திரம் இல்லையடிஅகப்பேய் சலனம் கடந்ததடி

சாதி பேதம் இல்லைஅகப்பேய் தானாக நின்றவர்க்கு  -அகப்பேய்ச் சித்தர்.

உடம்பினைப் பெற்ற பயன் ஆவது எல்லாம்

உடம்பில் உத்தமனைக் காண்’ –ஒளவையார் ஞானக்குறள்.”

 

 சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் ; சாதி சமயப் பூசல்களையும் ; அர்த்தமில்லாத சடங்கு சம்பிரதாயங்களையும் கடுமையாகச் சாடுகின்றனர்.

பற்றுகளைத் துறந்தால் அனைத்தும் கைகூடும் என்பது சித்தர்கள் கருத்தாகும்.

 அறுவை சிகிச்சையைப்பற்றியும் அகத்திஅய்ர்  ‘சத்திராயுதசிதி’ என்ற நூல் கூறுகிரது.

 

“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன் போல் ..”

எனக் குலசேகரர் கூறியபடி சித்த மருத்துவர்கள் மக்கள் மத்தியில் பெரும் பேற்றினைப் பெற்றிருந்தனர். காலப் போக்கில் தமிழ் மண் அடிமையுற நேர்ந்த போதும், தமிழ் விரோதிகள் தமிழ் மண்ணை ஆண்டபோதும், சித்த மருத்துவத்தில் சந்தர்ப்பவாதிகள் நுழைந்து விட்டனர். சித்த மருத்துவம் எரிதணலில் வீழ்ந்த புழுபோல் துடித்தது.

 

 இன்று காலம் மாறிக்கொண்டிருக்கிறது.   சித்தர்கள் காட்டிய வழியில் ,மக்கள் இயற்கையின் பேராற்றலை உணர்ந்து மூலிகைகளைத் தேடி அலைந்துகொண்டிருக்கின்றனர்.  அறிவியல் போர்வை கொண்டு மக்களைச் சீரழித்த பன்னாட்டுவணிகர்கள்    சத்துநிறைந்த கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை  இன்னபிற உணவுகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொண்டனர். அறிவியல் தன் தோல்விகளை ஒப்புக்கொண்டு, இன்று சித்தர் மருத்துவ குறிப்புகளைக் கையாளத் தொடங்கி விட்டது.

தமிழனின் அறிவாற்றலை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது.

 

 

திங்கள், 3 பிப்ரவரி, 2025

 

சான்றோர் வாய் (மைமொழி : 140. அறிவியல்

சிந்தனைகள்  - சித்தர் மரபு. 

 

சித்தர்கள் : சித்தி பெற்றவர்கள் பேறுபெற்றவர்கள்வீட்டின்பம் பெற்றோர்அனுபூதிஞானம் பெற்றவர்கள்சமயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.

சித்தர் மரபின் தொடர்ச்சி : திருமூலர் வழியில் தோன்றியவர்கள்,  சைவ சமயக்குரவர்கள் நால்வர் , ஆழ்வார்கள் , கருவூர்ச் சித்தர், குகை நமச்சிவாயர், மெய்கண்டார், சிவப்பிரகாசர், தாயுமானவர், பட்டினாத்தார் முதலியோர் குறிப்பிடத்தக்கவராவர்.

 

தமிழ் நாட்டில் சமயத்துறையில் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து முற்போக்கான மனிதநேயச் சிந்தனைகள் தோன்றிப் படிப்படியாக வளர்ந்தன. வைதீக தர்மம், பிராமணிய ஆதிக்கம், சாதிக்கொடுமைகள்,இவற்றை எதிர்த்து சித்தர்கள் வெகுண்டெழுந்து கலகத்தைத் தொடங்கினர். சித்தர்கள் ஓர் இயக்கமாகவே செயல்பட்டனர்.

 சித்தர்களின் ஞான நூல்கள் பல உள்ளன. சிவ வாக்கியார் பாடல், பாம்பாட்டிச் சித்தர் பாடல், இடைக்காட்டுச் சித்தர் பாடல், அகப்பேய்ச் சித்தர் பாடல், அழுகணிச் சித்தர் பாடல், திருவள்ளுவர் ஞானம், அகத்தியர் ஞானம்,  சட்டைமுனி ஞானம், காகபுசுண்டர் ஞானம், கொங்கணர் வாலைக்கும்மி  ஒளவையார் ஞானக் குறள்,  ஞான வெட்டியான் நூல்களும் முதலியன குறிப்பிடத்தக்கவையாகும்.

 

பட்டினத்தடிகள்

முதற் சங்கம், இரண்டாம் சங்கம், மூன்றாம் சங்கம், எனத் தமிழர் வாழ்ந்த  சிறப்புமிக்க வாழ்வைப்பற்றி,

முதற்சங்கம் அமுதூட்டும் மொய்ங்குழலார் ஆசை

 நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும்கடைச்சங்கம்

ஆம்போ தது ஊதும் அம்மட்டோ இம்மட்டோ

நாம்பூமி வாழ்ந்த நலம்.” என்றார்.

 

பாம்பாட்டிச் சித்தர் கூறுகிறார்….

 :அறுபத்துநாலு கலையாவும் அறிந்தோம்

     அதற்குமேல் ஒருகலையன தறிந்தோம்

மறுபற்றுச் சற்றுமிலா மனமு முடையோம்

      மன்னனே ஆசானென்று ஆடுபாம்பே.”

 ஆயகலைகள் அறுபத்துநான்கு என்பர். சித்தர்களோ அதற்கு மேலும் ஒரு வித்தையைப் பயின்றிருந்தார்கள் அஃதாவது….


 காலனெனும் கொடிதான கடும்பகையைநாம்

     கற்பமெனும் வாளினாலே கடிந்து விட்டோம்

தாலமதிற் பிறப்பினைத் தானும் கடந்தோம்

     தற்பரங் கண்டோமென்று ஆடாய் பாம்பே.”


 சித்தர்கள் கற்பம் என்ன என்பதை கண்டிருந்தனர். காலத்தை வென்றிருந்தனர், எனவே அவர்கள் மக்களுக்கு மருத்துவத்தைத் தொண்டாகக் கருதிச் செய்தனர்.


சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்

சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்

 வீதிப் பிரிவினிலே விளையாடிடுவோம்.’


 சித்தர்கள் மருத்துவத்துடன் மக்களின்

 மூடத்தனத்தையும் களைந்திருக்கின்றனர்.

 

குதம்பைச் சித்தர்:

சித்தர்கள் முத்தமிழிலும் வித்தகராய் விளங்கியதோடு தமிழைத் தெய்வமாகப் போற்றினர்  என்பதும்…….


முத்தமிழ் கற்று முயங்கும் மெய்ஞ் ஞானிக்கு

சத்தங்கள் ஏதுக்கடிகுதம்பாய்

சத்தங்கள் ஏதுக்கடி.

சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு

ஏகாந்தம் ஏதுக்கடிகுதம்பாய்

ஏகாந்தம் ஏதுக்கடி.

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்

கோலங்கள் ஏதுக்கடிகுதம்பாய்

கோலங்கள் ஏதுக்கடி!

  சித்தர்கள் மருத்துவர்கள் மட்டுமல்ல! அறிவியலின் தூதர்கள். அறியாமையைச் சாடியவர்கள். சாதிப் பிரிவைச் சாடியவர்கள். அறிவுச் சுடராய் ஒளிர்ந்து மக்களின் பிணியை, சாக்கடை பேதமையை அகற்றியவர்கள்.

சித்தர் மரபு ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;தொடரும்…………….

சனி, 1 பிப்ரவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 139. அறிவியல் சிந்தனைகள். வடலூர் வள்ளலார்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 139. அறிவியல்

சிந்தனைகள்.  வடலூர் வள்ளலார்.

மெளனம்;

வள்ளலார் வழங்கிய சிந்தனைகளுள் தலையாயது மெளனம் எனும் மனவளக் கலையே.

உடலுக்கும் உள்ளத்திற்கும் உலக அமைதிக்கும் உயிர்கள் யாவும் இன்புற்றிருக்கவும் மெளன நோன்பு அருட்பிரகாச வள்ளலாரின் உள்ளத்தில் உதித்த எண்ணங்கள்

 

மெளனம் உலக மக்களின்    தாய்மொழி ; ஆறறிவுமனம் படைத்த மனிதனிடம் மாண்புறும் மொழி ; அளந்தறிய இயலாத ஆற்றல் வாய்ந்த மொழி ; அன்புருவின் ஆட்சிமொழி.  

 

மெளனம், ஓர் இனிய மொழி, அலை பாயும் மனம் அமைதியுற, அவ்வழி உன்னை நீ உணர, உன்னுள் உன்னைக் காண, உன்னுள் உயிர் வளம் பெற, இனம்புரியாத இன்ப நிலை எய்தி, மெளனத்தால் ஆக்கம் பெற்று, இன்புற்று வாழ்தல் எளிதாகின்றது.

·         மனமகிழ்ந் தேன்மன மாயையை நீக்கினன் மாநிலத்தே

·         சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம்வல்ல சித்தும்பெற்றேன்

·         இனமிகும் சுத்தசன் மார்க்கப் பெருநெறி எய்திநின்றேன்

·         கனமிகும் மன்றில் அருட்பெருஞ் சோதியைக் கண்டுகொண்டே.

·          

மன மாயை நீங்கி இறவனின் அருள் பெற்றுப்  பெரிய போற்றத்தக்க நெறியை  எய்தி  அருட்பெருஞ்சோதியைக் கண்டு மகிழ்ந்த நிலையை அடைந்தார் வள்ளலார்.

மெளனம், பேச்சின் தந்தை என்று அழைக்கப்படுகிறது. மெளனம் உலகின் மிகப் பெரிய மொழி. அதைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெறுங்கள் ; கையாளுவதில் திறமை பெறுங்கள்.” என்கிறார். ( டேல் கார்னகி. மேடைப் பேச்சுக்கலை,பக்.53.)

  • மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
  • இனம்பெறு சித்த மியைந்து களித்திட

மெளனத்தால் மனம் ஆர்றைப் பெறுகின்றது. அன்பினால், கருணையினால் உள்ளம் உருகித் தெளிவு பிறக்க இன்பம் விளைகிறது.

பேசாதீர்கள், மனப்பூர்வமாக உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். பேசாதீர்கள் , மெளனத்தில் உங்கள் எண்ணம் முதிர்ச்சி அடையும்வரை பேசாதீர்கள். அமைதியிலிருந்துதான் உங்கள் ஆற்றல் பிறக்கிறது. பேச்சுவெள்ளி ; அமைதிபொன் . பேச்சு மனிதத் தன்மை உள்ளது ; அமைதி தெய்வீகமானது.” என்கிறார் கார்லைல் (மேலது.)

  • மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
  • அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

 

மனித உயிர்கள் அனைத்திற்கும்  மன மே முதல் கருவியாகச் செயல் படுகிறது . மனத்தூய்மை அறம். “மனத்துக்கண் மாசிலனாதலே அறம். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்  இவை நான்கையும் ஒழித்தால் நன்னிலை  எய்தலாம் என்றார் திருவள்ளுவர்.

 

 

       மனமெலி யாமல் பிணியடை யாமல் வஞ்சகர் தமைமரு வாமல்

  • சினநிலை யாமல் உடல்சலி யாமல் சிறியனேன் உறமகிழ்ந் தருள்வாய்
  • அனமகிழ் நடையாய் அணிதுடி இடையாய் அழகுசெய் காஞ்சன உடையாய்
  • இனமகிழ் சென்னை இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே.
  • மனம்எனும்ஓர் பேய்க்குரங்கு மடைப்பயலே நீதான்
  • மற்றவர்போல் எனைநினைத்து மருட்டாதே கண்டாய்
  • இனமுறஎன் சொல்வழியே இருத்தியெனில் சுகமாய்
  • இருந்திடுநீ என்சொல்வழி ஏற்றிலைஆ னாலோ
  • தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன் உலகம்
  • சிரிக்கஉனை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே
  • நனவில்எனை அறியாயோ யார்எனஇங் கிருந்தாய்
  • ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே (விக்கிபீடியா)

 

மன மாசு, வஞ்சகம் நிறைந்த நெஞ்சத்தார் எவ்வளவு  வளம் பெற்றிருந்தாலும்  அதனால் பயன் ஒன்றும் இல்லை என்பதை

 கற்றதம் கல்வியும் கடவுள் பூசையும்

நற்றவம் இயற்றலும் நவையில் தானமும்

 மற்றுள அறங்களும் மனத்தின்பால் அழுக்கு

அற்றவற்கே பயனளிக்கும்  என்பரால்.”

என்றது , காசிக்காண்டம் உரைக்கும் உண்மையாகும்.

 தன்மனத்தை தான் அடக்கி வெல்லல் ஓர் அரிய கலை, வித்தை. சிந்தையை அடக்கியே சும்மாவிருக்கின்ற திறம் அரிது என்று உணர்ந்த தாயுமான சுவாமிகள்

மனமான வானரக் கைம்மாலை ஆகாமல்

எனையாள் அடிகள் அடி எய்துநாள் எந்நாளோ என்று ஏங்குகிறார்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழ், உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதல் நன்று. குறள். 294. உயர்ந்த எண்ணங்களே என்றும் உள்ளத்தில் நிலவ வேண்டும். குறள். 596. ; செல்லும் வழி மனத்தைச் செல்லவிடாது அடக்கின் எழுபிறப்பும்நல்ல பயனேயாம். மனத்தை அடக்கி ஆள்வது எளிதோ… “பயிற்சி செய் பலன் கிடைக்கும் ; நலம் விளையும் ; வளம் பெருகும் ; வாழ்க்கை இனிக்கும்.

இறைவன் மொழி.

“ மவுனம் இறைவன் மொழி, அது தட்சிணாமூர்த்தி தத்துவம் 

“பிள்ளை மதி செஞ்சடையான், பேசாப் பெருமையினான் “ என்று தாயுமானவர்  தன் மவுன குருவைப் பாடுவார். “சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே என்று முருகன் அருணகிரிநாதருக்கு உபதேசித்த மந்திரமொழி மவுனம் தான். கல் ஆலின் குடை அமர்ந்து மவுனித்து உடல் மொழியால் சின் முத்திரை தத்துவத்தை போதித்த  தட்சிணாமூர்த்தியை “ வாக்கு இறந்த பூரணம்” , “சொல்லாமல் சொன்னவன்” என்று திருவிளையாடற் புராணம் வருணிக்கும் அமைதி வேறு, மவுனம் வேறு. போருக்குப் பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது, மவுனம் உள்ளிருந்து வருவது, அது வார்த்தைகளற்ற நிலையல்ல; எண்ணங்கள் அற்ற நிலை. மவுனத்தை நம் முன்னோர்கள் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தால் உணர்த்தினார்கள்.” – டாக்டர் பி.கி. சிவராமன், தஞ்சாவூர்.

 சீவகாருண்ய ஒழுக்கத்தினால்  மக்கள் உள்ளத்தில் தோன்றும் இரக்கத்தின் விளக்கமே கடவுள் விளக்கம். அவ்வொழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பம்.  இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்  கண்டு நுகர்ந்து நிறைவு பெற்றவர்களே சீவன் முத்தர்கள் ஆவர் என்பது வள்ளலாரியம்.

வியாழன், 30 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 138. அறிவியல் சிந்தனைகள். வடலூர் வள்ளலார்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 138. அறிவியல்

சிந்தனைகள்.  வடலூர் வள்ளலார்.


சித்தர் கோவை :

 திக்கெட்டும் பரவியிருந்த சித்தர்கள் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவர்கள். அவர்களுடைய காலங்களைக் கணிக்கமுடிய வில்லை. இன்றும் அவர்கள் அருவநிலையில் உலவுகிறார்கள் என்றும் கூறுவர்.

 

 தொன்மைக்கலத்தில் வாழ்ந்த பதினெட்டு சித்தர்களுக்கும்  மேற்பட்ட சித்தர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  சித்தர் கோவையில் உள்ள, பட்டினத்தடிகள், பத்ரகிரியார், இராமலிங்க அடிகள் முதலியோரின் சில பாடல்களும் அவர்கள் சித்தர்களே என்பதைப் புலப்படுத்துகின்றன.

 

 வடலூர் வள்ளலார் : 1823 – 1873.

 

அருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப் பெறும் இராமலிங்க அடிகள், சமயத்தில் நின்று சடங்குகளை எதிர்த்தார், இதனால் அவரியற்றிய ’அருட்பாவை’ மருட்பா என்று கூறினர் சைவர். யாழ்ப்பாண ஆறுமுக நாவலர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தார், அருட்பாவே வென்றது.

 

சமுக அறிவியல் சிந்தனைகள்:

 கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக….

உருவ வழிபாட்டை எதிர்த்தார்.

பல தெய்வ வணக்கம் வெறுத்தார்.

 அந்நியராட்சியை ஒழிக என்றுரைத்தார்.

சாதி சமய வேறுபாடற்ற மக்கள் ஒற்றுமையை விரும்பினார்.

 ஒளிவழிபாடு போற்றினார்.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம் அமைத்தார்.

 சாதி, மத போதமின்றி அனைவரும் ஒரே பந்தியில் அமர்ந்து உண்டனர்.

 மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார்.

 இச்சாதி சமய விகற்பங்களெல்லாம் தவிர்ந்தே

எவ்வுலகும் சன்மார்க்கம் பொதுவடைதல் வேண்டும் என்றார்.

  ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும். என்றார்.

 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அனைத்து உயிர்களித்தும் அன்பு கொண்டு கருணையுடன் வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

வள்ளலார் அருள் வாக்கு :

“ எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ;

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவருளந்தான்

சுத்த சித்துருவாய் என்பெருமான் நடம்புரியும் இடமென நான் தேர்ந்தேன்..”

 

அருட்பிரகாச வள்ளலாரின் அருள் வேண்டுவோர் வட்டித்தொழிலை விட்டொழித்தல் நன்று.

 

“ வட்டி மேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்

     வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்

பெட்டிமேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்றுப்

     பெட்டியை நிரப்பிகொண்டு ஒட்டியுள்ளிருந்தீர்

பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் தேரீர்

     பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்

எட்டிப்போல் வாழ்கின்றீர் கொட்டிபோற் கிளைத்தீர்

     எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே.”

 

சாதி மத பேதங்களால் பிளவுபட்டுக் கிடக்கும் மக்களைப் பார்த்து அருட்பிரகாச வள்ளலார் ……….

 

“” சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

     சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற  உலகீர்

     அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே.”

 

’ நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும்’

‘உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும்’

’எனையடுத்தார் தமக்கெல்லாம் இன்பு தரல் வேண்டும்’

’புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும்’

’பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும்’

வள்ளலார் போறி ஒழுகும் வாய்மை நிறைந்த தூய்மை நெறியை ஈண்டு உணர்ந்து ஒழுகுதல் நன்றாம்.

 

……..சித்தர்……..வள்ளலார்… ……. தொடரும்…………