தமிழமுது –211– தொல்தமிழர் இசை மரபு:71.
7. அகநானூறு : யாழ் ஒலிக்கும் ஊர் - நீடூர்.
” யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
வாய்வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர்
அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண்
கள்ளுடைப் பெருஞ்சோற்று எல் இமிழ் அன்ன.
கவ்வை ஆகின்றால் பெரிதே.... - பரணர்; 266 : 10 –15.
எவ்வி என்பவன் குறிதப்பாத வாள்படையை உடையவன் ; யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவன் ; அவன் தன் ஏவலை ஏற்றுக்கொள்ளாத பூண் அணிந்த பகைவரை அரிமண வாயில் உறத்தூர் என்னுமிடத்துப் போரிட்டு வென்று அவர்தம் வலிமையைக் கெடுத்தான் ; அவ்விடத்தே தன் படைவீரர்களூக்குக் கள்ளுடன் பெருஞ்சோற்றினைப் பகற்பொழுதில் அளித்தபோது, அவ்வீரர்கள் உண்டு மகிழ்ந்து எழுப்பிய ஆரவாரம் போன்று நீ பரத்தை மகளிரோடு புனலாடியபோது எழுந்த அலரும் ஆயிற்று.
விளக்கம் : தலைவியைப் பிரிந்து பரத்தையிடம் சென்ற தலைவன் மீண்டும் வந்தபோது அவனோடு ஊடிய தலைவி சொல்லியதாக அமைந்துள்ளது இப்பாடல்,
(மறுகு - தெரு ; மிடல் - வலிமை ; பொருந்தலர் - பகைவர் ; எல் - பகற்பொழுது ; இமிழ்தல் - ஒலித்தல்.ஆரவாரித்தல் ; கவ்வை - அலர்.)
................................................தொடரும் ....................................................