புதன், 22 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 130. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருவள்ளுவர்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 130. அறிவியல்

சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்கள்- திருவள்ளுவர்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

 

அறவியல் ; அறிவியல் :

அறவியல் சிந்தனைகள் :

 இவ்வுலகில் அறவாழ்க்கைக்கு செல்வம் துணையாகுமானால் அதுவே இன்ப வாழ்க்கை என வள்ளுவர் கருதுவார்.  இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பதே இன்ப வாழ்க்கைக்கு வழி என்ற கூற்றினை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மனித வாழ்க்கைக்கு உகந்ததாக ஏற்றுக்கொண்ட குறிக்கோள் ‘ அறவாழ்க்கை , பொருளீட்டல்,’ இவை இரண்டால் ஏற்படும் இன்பமான ’இல்லற வாழ்க்கை’ ஆகிய மூன்றுமே. பிற்கால சமய நூலார் கூறும் ‘வீட்டினை’ வள்ளுவர் சிறப்பான குறிக்கோளாகக் கூறவில்லை.

 

 

 அறம் + இன்பம் = மனிதவாழ்வு.

அறத்தான் வருவதே இன்பம் என்றார். இதுவே மானிட மதிப்புகளில் (Human Values ) முதன்மை பெறுகிறது.

இன்பம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது இதனை உளவியல் அறிஞர் ஃபிராய்டு கொள்கைக்கு உடன்பாடே .

 அறவியல் பற்றி அரிஸ்டாட்டில் “ அறிவு இன்பத்தை ‘ யூடோமியா  (Eudomea) என்பார். இஃது புலன் நுகர்  இன்பம் அல்ல.

 “ அறம் என்பது நன்மை

நன்மை என்பது பயன் தருவது/

பயன் தருவன எல்லாம் இன்பம் அளிப்பன.

அறிவு பயன் தருகிறது

அறிவு இன்பம் தருவதே.

எனவே அறமும் இன்பம் தருவதே “ என்கிறார் சாக்ரடீஸ்..

 

 திருமூலர் காலத்திதான் (கி.பி.  5.) இன்பம் இரண்டானது, பேரின்பம் ஆன்மா இன்பமாகியது. சங்கக்காலப் பாடல்களில் இருவகை இன்பம் இல்லை.

 

 “ சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே

மற்றுன்பம் வேண்டு பவர். குறள் : 173.

சிற்றின்பம் – நிலையில்லாத இன்பம்.; மற்று இன்பம்  வேண்டுபவர் – அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தைக் காதலிப்பவர் , என்று விளக்கினார் பரிமேலழகர்.  

“பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் சங்க நூல்கள் ; காபியங்களும் கீழ்க்கணக்கு நூல்களும் சங்கம் மருவிய நூல்கள் என்று கூறும் மரபுண்டு. அவற்றுள் சங்க நூல்களே

 வள்ளுவத்தை ஒட்டி எழுந்தவை ஆதலாற் சங்க நூல்கள் கூறும் மெய்ப்பொருளியற் கூறுகளும் வள்ளுவர் கூறும் மெய்ப்பொருளியற் கூறுகளும் பெரும்பாலும் இணைத்தவையாகலாம்.

 மெய்ப்பொருளியல் வளர்ந்து – வாழ்ந்து – தெளிந்த சமுதாயத்தின் தேர்ந்த கருத்தாகும் என்பதை மேலை நாட்டறிஞர்களும் மனவியல் கலைஞரும் ஒப்புகின்றனர்.

 

 

அறநூலாகிய திருக்குறள் இயம்பும் அறவியல் சிந்தனைகள் அளப்பரியன. ஈண்டு ஒரு சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

 

சித்தர்கள்..… திருவள்ளுவர் ……. தொடரும்…………

செவ்வாய், 21 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 129. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருவள்ளுவர்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 129. அறிவியல்

சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்கள்- திருவள்ளுவர்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.


மெய்ப்பொருள் அறிஞர் :


 “ மந்திரம் என்பது நினைப்பவனைக் காப்பது என்னும் பொருளது. நினைப்பவன் எவ்வளவு உறுதியாக எண்ணுகிறானோ  அவ்வளவுக்கவ்வளவு எளிதில் எண்ணிய எண்ணங்களை ஈடேற்றிக் கொள்ள அவனால் இயலும் என்ற உண்மையை அடிநிலையாகக்கொண்டது. இக்கொள்கையை வள்ளுவனாரும் வினைத்திட்பம் அதிகாரத்தில் ..

“ எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

 திண்ணிய ராகப் பெறின் .

என்ற குறட்பாவால், நினைப்பவன் உறுதியாக ஒன்றை நினைத்தால் நினைத்ததை நினைத்த வண்ணம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கிறார். இத்தகைய உறுதியான எண்ணத்தையே வடநூலார் தியானம்  என்பர். வள்ளுவர் கூறிய ‘இறைவனடி சேராதார்’ என்ற பகுதிக்குப் பரிமேலழகர், சேர்தல் – இடைவிடாது நினைத்தல் எனக் குறிப்புத் தருவார். இது இடைவிடாத தியானத்தைக் குறிப்பது என்பதில் ஐயமில்லை.


தொல்காப்பியர் வழிவந்த திருவள்ளுவர் ”அறிவியல் முறையில் மெய்ப்பொருள்களை அணுகுமுறைக்கு  அடிகோலியது சாருவாகம், இக்கருத்தையே வள்ளுப் பெருமானும் இன்பத்துப்பாலில் ஏனையபாடல்களில் சிலவிடத்தும் குறித்தனராதல் வேண்டும். “


முப்பால் :

 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற. – அறத்துப்பால்.

செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்

 எஃகதனின் கூரிய தில். – பொருட்பால்.

மலருனும் மெல்லிது காமம் சிலரதன்

செவ்வி தலைப்படு வார் . – காமத்துப்பால்.

அறம், பொருள், இன்பம், எனும் முப்பால் திருக்குறளின் சிறப்பினைப் புலப்படுத்தும்.

 

சித்தர்கள்..… திருவள்ளுவர் ……. தொடரும்…………

திங்கள், 20 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 12.8. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருவள்ளுவர்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 12.8. அறிவியல்

சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்கள்- திருவள்ளுவர்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

 

உலகம் உள்ளவரை உயிரினங்கள் வாழும்வரை உலகம் போற்றும் உயரிய வாழ்வியல் அறங்கூறும் திருக்குறள் வாழும்.

“திருவள்ளுவர் உலகம் இருண்டது என்று கருதியவரல்லர். வாழ்வதற்குரியது உலகம் என்றும் ; வாழப் பிறந்தவன் மனிதன் என்றும் கருதினார். இடர்ப்பாடுகளைப் பொடிப் பொடியாக்கித் துயரங்களை எதிர்த்து நின்று போராடி வெல்பவனே சிறந்த மனிதன் என்பது அவர் நம்பிக்கை”

 (– அ.சி. செட்டியார்.).                                

 

பெருமைமிகு பேரிலக்கியம்

“ சிங்கன் என்கிற அறிஞர் கூறுகின்ற பொழுது உலக இலக்கியங்களிலே தலைசிறந்த இடத்தை வகின்றது குறள். கன்பூசியஸ் கருத்துக்களுக்கு ஒப்பாக, பிளாட்டோ உரையாடல்களுக்கு ஒப்பாக, அரிஸ்டாட்டில் ஒழுக்க முறைக்கு ஒப்பாக, சினேகா அவர்களின் எழுத்துக்கு ஒப்பாக ; உலகத்தின் மாபெரும் நூல்களின் வரிசையில் திருக்குறள் வைக்கப்பட வேண்டும்.

தமிழினம் உலக அறிவு இலக்கியத்திற்குத் தந்த அழகான நூல் திருக்குறள்.

 

 “ This book occupies  in the literature of the world, a place comparable to Confucian Analects, Plato’s Dialogues, Aristotle’s  Ethics and Seneca’s Writings. The Thirukkural belongs to the great books of the world, and it is the Tamil’s contribution to the Wisdom Literature of the world.”

(ச. மோகன், திருக்குறள் – ஒரு உலக இலக்கியம், பக்.2 -3.)

 

திருக்குறள் பகுப்பு :

அகம் : 1. களவு – 109 – 115 அதிகாரங்கள்.

            2. கற்பு – 116 – 133.       

            3. இல்லற நெறி – 4 – 24     

புறம் :. 1. அரசு – 39 – 63.   அதிகாரங்கள்.

            2. படை – 77,78,                

            3. குடி. – 96 – 103, 105 -108. “    

            4. கூழ். – 2, 104 .                      

            5 . அமைச்சு – 64 – 76.          

            6. நட்பு – 79 – 95.                  

            7. அரண். – 74, 75.                 

            8. நிலையாமை,  காஞ்சி. 1, 3, 25 – 38. “  

 

சித்தர்கள் வரிசையில் திருவள்ளுவர் :

“ சித்தர்கள் சிறந்த சிந்தனையால் உயர்ந்தவர்கள் சித்தர்களீன் சிந்தனையாலேயே சிறந்த மருந்துகள் உருவாயின. பச்சிலை மூலிகைகளின் பண்புகள், பயன், அவற்றைப் பயன்படுத்தும் முறை அனைத்தும் காணப்பெற்றன. அவர்கள் சிந்தனையின் ஆற்றலாலே என்றோ எப்போதோ நடந்தவைகளையும் நடக்க இருப்பவைகளையும் கண்டு காட்டக்கூடியவர்கள். அத்தகைய சித்தர்கள் வரிசையில் திருவள்ளுவரையுஞ் சேர்த்து வழங்குவதிலிருந்தே இவர் சிறந்த செந்நெறிச் சிந்தனையாளர் என்பதைத் தெளியலாம்.

 

ஞானிகளில் ஒருவர் :

பிற்காலச் சான்றோர்கள் இவரையும் இவர் நூலையும் ஞான நூல் வரிசையிலும் ஞானிகள் வரிசையிலும் வைத்துப் பாராட்டியுள்ளனர்.

“தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒரு வாசகமென்று உணர்.”

 

அன்புடைமை, கொல்லாமை, நடுவுநிலைமை,ஈகை, பிறன்மனை நயவாமை, புலால் மறுத்தல், வாய்மை இன்னபிற வாழ்வியல் நெறிகளை உலகுக்கு வழங்கியர் திருவள்ளுவர்.

சித்தர்கள்..… தொடரும்…………

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 127.. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருமூலர்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 127.. அறிவியல்

சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்கள்- திருமூலர்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

 

 கநிலை :

மனமே..! கழிந்ததற்கு இரங்கிக் காலத்தை வீணாக்காதே. உடல் நலமும் உள்ளத் தெளிவும் இன்றே பெறுக. வாழ்க்கைப் பயணம் இனிதே அமையும்.

 நெறிவழியே சென்று நேர்மை உள் ஒன்றித்

தறி இருந்தால் போல் தம்மை இருத்திச்

சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணராக்

குறி அறிவாளர்க்குக் கூடலும் ஆமே” –திருமூலர்.

 

 “ மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள வழியாகப் பிராணனை மேலே செலுத்தி, நெற்றிக்கு நேர் புருவ மத்தியில் மனத்தை ஒன்றி நிற்கச் செய்து,  அடித்த கட்டுத்தறிபோல் ஒரே இடத்தில் அசைவற்றுத் தம் உடலை இருக்கச் செய்து, பிறர் வந்து உடலைச் சொறிந்தாலும் அடித்துத் துன்புறுத்தினாலும் இவை எதையும் உணராது, அடைய வேண்டிய இலட்சியமே குறியாக இருந்து தியானம் செய்பவருக்கு யோகம் எளிதாகக் கைகூடும்.”

 

அறிவியல் ஆய்வு:

 இந்த யோக நிலை உலக அளவில் அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. டிஸ்கவரி தமிழ், தொலைக்காட்சியில் சூப்பர் ஹியுமன்ஸ் (Super Humans) என்றொரு தொடர் ஒளிபரப்பாகியது,அதில் உலகில் தலை சிறந்த  ஓகக் கலை வல்லுநர்கள்  வலி உணரா நிலையை மெய்ப்பித்துக் காட்டினர்.

 

 புரூஸ்லி (Bruce Lee, 1940 – 1973. Bruce = strong one) வாழும் கலையில் வல்லவராகவும் குங்ஃபூ கலையில் கைதேர்ந்தவரகவும் விளங்கி உலகப் புகழ் பெற்ற புரூஸ்லி வாழும் கலைக்குப் புதிய இலக்கணம் வகுத்தவர். புரூஸ்லி ஓகக் கலையில் வல்லவராக அரிய அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தும் ஞானத்தைக் கைவரப் பெற்றவராவார். ஓகக் கலை நிலைகளை  ஆய்வு செய்து, தன்னுடைய நாள் குறிப்பேட்டில்  ஓகக் கலை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அன்றைய இந்தியா என்பது தமிழ் நிலமே என்று அறிக.

 

 இன்றைய அறிவியலுக்குச் சவால் விடும் அளவுக்கு மனவளக் கலை விளங்குவதை டிஸ்கவரி தமிழ் , அன்று இரவு எட்டு மணி நிகழ்ச்சி உணர்த்தியது.

 

மன வலிமை மரணத்தை வெல்லுமா..?

மரணமிலாப் பெருவாழ்வு வாய்க்குமா…?

வள்ளலார் வாக்கு மெய்ப்படுமா…?

 மேற்குறித்துள்ள வினக்களுக்கு விடை கூறிய தொலைக்காட்சி….


1.)     30 மீட்டர் உயரம் 11ஆவது மாடியின் கைப்பிடிச் சுவரின் விளிம்பில் நின்று உடற்பயிற்சி செய்தார்.

2.)      300 மீட்டர் உயர மலை உச்சியின் விளிம்பில் தியானமும் உடற்பயிற்சியும் செய்தார்.

” மரண பயம் நீங்கினால்தான் மனிதன் வாழ்த் தொடங்குகிறான்.” என்றார்

3.)     பனி மனிதன் (Ice man) வெற்றுடம்போடு உறைபனியில் ஆசனம். மனத்தைத் தன்வயப்படுத்தி உடற்பயிற்சி, வெறுங்காலாலே பனிமலையில் மரத்தான் ஓட்டம் முதலியவற்றை நிகழ்த்திக்காட்டினார்.


மேற்குறித்துள்ளவர்களின் மன ஆற்றலை அறிவியல் சோதனைக் கூடத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து “ இவர்கள் உண்மையிலேயே சூப்பர் ஹியுமன்ஸ் என்று சான்று அளித்தனர்.


இன்பநிலை :


   மனவளக் கலை மரண பயத்தை நீக்கும் என்பது அறிவியல் ஒப்புக்கொண்ட உண்மையாகும். அன்றாடம் பயிலும் ஓகக் கலையின் நிறைவு நிலை இன்ப நிலையாகும்.

 

 “ ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்

வென்றான் தன் வீரமே வீரம் – என்றானும்

சாவாமற் கற்பதே கல்வி தன்னைப் பிறர்

ஏவாமல் உண்பதே ஊண். (ஒளவையார், தனிப்பாடல்.)

ஒன்றே இறை  - சிவன் ; ஐம்புலன் அடக்கல் – திண்மை ; சாகாக் கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு.

 

சாதலால் வரும் துன்பத்தினை மன உணர்வு உடைய மாந்தர்கள் தாம் மேற்கொண்டு ஒழுகும் தவத்தின் ஆற்றலால் மாற்றி, இவ்வுலகில் இறாவா நிலையை அடைதல் கூடும் என்னும் உண்மையைத் திருவள்ளுவர்….

“ கூற்றம் குதித்தலும் கைகூடுm நோற்றலின்

ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு.” -269.


மனத்தை அறிவியல் கண்கொண்டு ஆராய்ந்தாயிற்று ; உளவியல் கண் கொண்டு உணர்ந்தாயிற்று ; இதனால் முன்னோர்கள் மொழிந்தவை யாவும் முற்றிலும் சரியே என்பது விடையாயிற்று.

 

சனி, 18 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 126.. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்- திருமூலர்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 126.. அறிவியல்

சிந்தனைகள். தொல்தமிழர்சித்தர்கள்- திருமூலர்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

 

ஓகக் கலை (யோகம்)

 

ஓகக் கலை, தொல்தமிழர்தம் அறிவில் விளைந்த உடல் இயங்கியல் சார்ந்த ஓர் அறிவியல்  கலையாகும். இக் கலை குறித்த செய்திகளை முன்னேரே பதிவிட்டுள்ளேன். கூறியது கூறல் மிகை என்று கருதி, ஒரு குறிப்பை மட்டும் தருகின்றேன்.

 

 கோவிந்த் ராவத் என்பர் எழுதிய  ”யோகா நலவாழ்வு மந்திரம்’ “(Govind Rawat, Yoga: The Healtha Mantra.”  நூலின் பக்கம் 30.  இநூல் நூலகங்களில் கிடைக்கும் எடுத்துப் படித்துப் பாருங்கள்.

 

 ஓகப் பயிற்சி :

பன்னெடுங் காலமாகச் சித்தர்கள் போற்றி வளர்த்த ஓகநெறி  வழி வழியாக நின்று, இன்று நிலைபேறு பெற்று உலகம் முழுவதும் பரவலாக பயின்று வரப்படுகின்றது. என்கிறார், செ.கணேசலிங்கன்.

 

பண்டைத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வை வற்புறுத்தினர். அறிவியல் யுகம் என்று வருணிக்கப்படும் இந்தக் காலக் கட்டத்திலும்கூட இயற்கையை எதிர்த்து வாழ்தலோ வெல்லுதலோ இயலாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பெருங்காற்றையும் பேய்மழையையும் பனிப்புயலையும் நிலநடுக்கத்தையும்  கடல் கொந்தளிப்பையும் செஞ்சுடர் தீக்கதிரையும் இடி, மின்னல் ஆகியவற்றின் ஆற்றல்களையும் அவை தாக்கும் காலத்தையும் அறியலாம் ஆயின், தடுக்கும் மூலம் உளதோ..?

 

 ” இயற்கையால் சராசரி நூறு ஆண்டுகள் வாழப் படைக்கப்பட்ட மானிட  வாழ்க்கையின் பயணத்தைத்  தவறான குறைபாடுள்ள வாழ்க்கை முறைகளினால் மனநலம் , உடல்நலம் குன்றி வாழ்க்கைப் பயணத்தைக் குறைத்துக் கொள்கிறான்.

எல்லா வசதிகளையும்  பெற்றுள்ள மனிதன் தன் மனத்தால் அடையும் அமைதியை இழந்து இயற்கையுடன் மாறுபட்டு வாழ்வதனால் இயல்பான மன அமைதியை இழந்து பலவகை உணர்ச்சிப் போராட்டங்களுக்கு ஆளாகிப் பல  நோய்களுக்கு  இடம்கொடுக்கின்றான். மிகுந்த ஆற்றல் வாய்ந்த மனிதனின் ‘மனம்’ மூளையின் ஒரு பண்புக்கூறாக உணரப்பட்டாலும் மூளை, இதயம் மற்றும் உடலின் அனைத்து அக-புற உறுப்புகளையும் இயங்க வைப்பது மனம் தான்.” என்கிறார் இதய நோய் மருத்துவர் டாக்டர் வி. சொக்கலிங்கம். (உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மலர், பக். 590.)

 ஒகநிலை :

மனமே..! கழிந்ததற்கு இரங்கிக் காலத்தை வீணாக்காதே. உடல் நலமும் உள்ளத் தெளிவும் இன்றே பெறுக. வாழ்க்கைப் பயணம் இனிதே அமையும்.


 ”நெறிவழியே சென்று நேர்மை உள் ஒன்றித்

தறி இருந்தால் போல் தம்மை இருத்திச்

சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணராக்

குறி அறிவாளர்க்குக் கூடலும் ஆமே” –திருமூலர்.

 

…………..திருமூலர் ….தொடரும் ……………..