தமிழமுது –179– தொல்தமிழர் இசை மரபு: 39.
தமிழ் கூறும் நல்லுகத்துப் பேராசான் - தொல்காப்பியர்.
“ நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர்.” - 999.
புனைந்துரை வகையானும் உலகியல் வழக்கானும் பாடல் சான்ற இலக்கண மரபான் அமைந்த ஒழுகலாறுகள் கலிப்பா, பரிபாட்டு என்னும் அவ்விரு பாக்களானும் கூறுவதற்குரியவாகும் எனக் கூறுவர் அறிவுடையோர். என்றவாறு தொல்தமிழரின் இசை மரபு செழித்திருந்த காலத்தே அவற்று இலக்கணம் வகுத்துள்ளார். தொல்காப்பியர் வகுத்தளித்த தொல்தமிழர் இசை குறித்து கூறிய கருத்துகள். தமிழ் நிலம் ஐந்து என்றாலும் பாலை எனும் நிலம் தமிழ் நிலத்தில் இல்லை.
அவற்றுள்
’நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே” - 948.
அகப்பொருள் திணைகள் ஏழாயினும் அவற்றுள் நடுவில் இருக்கும் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐந்து திணைகளுள் நடுவில் இருக்கும் பாலை நீங்கலாக கடலால் சூழப்பெற்ற இந்நில உலகத்தைப் படைத்துக்கொண்டனர்.
” முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடுங்காலை.” -949.
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என முறையாகச் சொல்லும் நிலையில், இலக்கியத்துள் வழங்கியவற்றைக் கருதி அமைத்துக்கொண்டனர்.
முதற்பொருள்:
் முதல் எனப்படுவது நிலம்பொழுது இரண்டின்
இயல்பென மொழிப இயல்பு உணர்ந்தோரே.” -950.
ு முதல் பொருள் எனக்கூறப்பெறுவதை, நிலம், பொழுது என இரண்டின் தன்மை எனக்கூறுவர் அவற்றின் இயல்பினை நன்கு அறிந்தோர்.
கருப்பொருள்:-
தெய்வம் உணாவே மா மரம் புள் பற்
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப. - 964.
தெய்வம், உணவு, விலங்குகள், மரம் செடி கொடிகள், பறவை, தோற்கருவிகள், தொழில், யாழ், போன்ற நரம்புக் கருவிகள், ஊர், நீர், பூ போன்றனவும் கருப்பொருள் என்று கூறுவர்.
தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடத்து இசைக் கருவிகளோடு கூடிய ஆடலும் பாடலும் நிலம்தொறும் செழித்திருந்தன என்பதை அறியமுடிகின்றது.
.............................தொடரும்...............................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக