வெள்ளி, 16 ஏப்ரல், 2021

தன்னேரிலாத தமிழ்-266.

 

தன்னேரிலாத தமிழ்-266.

426

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவது அறிவு.

உலகத்துச் சான்றோர் கூறிய அறிவுரையின்படி இவ்வுலகம் எவ்வாறு நடந்து கொள்கிறதோ அவ்வாறே நாமும் நடந்து கொள்வதே அறிவுடைமையாகும்உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டேஎன்பார் தொல்காப்பியர்.

தீயவர்பால் கல்வி சிறந்தாலும் மற்று அவரைத்

தூயவர் என்று எண்ணியே துன்னற்க…”நீதிவெண்பா, 72.

 தீயவர்கள் மிகச்சிறந்த கல்வியறிவு  பெற்றவர்களாக  இருந்தாலும் அவர்களைப் பெரியோராகக் கருதி நெருங்காது விலகி இருக்கவும். 

புதன், 14 ஏப்ரல், 2021

தன்னேரிலாத தமிழ்-265.

 

தன்னேரிலாத தமிழ்-265.

1238

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல்.

தலைவியை அணைத்து முயங்கிய கைகள் சிறிது விலகிய பொழுதே, வளையல் அணிந்த இப்பேதையின் ஒளி பொருந்திய நெற்றியில் பசலையூர்ந்தது.

தொல்தமிழரொடு தோன்றிய முருகன்….!

மன்ற மராஅத்த பேஎம்முதிர்கடவுள்

கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்

கொடியர் அல்லர் எம் குன்றுகெழு நாடர்

பசைஇப் பசந்தன்று நுதலே

நெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே.—குறுந்தொகை, 87.

ஊர்மன்றத்தில் உள்ள கடம்ப மரத்தில் உறைகின்ற, அச்சமூட்டும் பழமை வாய்ந்த கடவுள், கொடுமையுடையாரைக் கொல்லும் என்பர். குன்றுகள் பொருந்திய நாட்டின் எம் தலைவர், சிறிதும் கொடுமை உடையரல்லர். அவர் எம்மைப் பிரியலாகாது என்பதற்காக என்னுடைய நுதல் பசலை பூத்தது, பிரிந்தால் உள்ளம் நெகிழும் என்பதைக் காட்டுவதற்காக என்னுடைய பெரிய தோள்கள் மெலிந்தன.

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

தன்னேரிலாத தமிழ்-264.

 

தன்னேரிலாத தமிழ்-264.

432

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு.

கொடை வழங்காத சிறுமையும்; போற்றத்தகாத மான உணர்ச்சியும்; விரும்பத்தகாத மகிழ்ச்சியும் அரசனுக்குக் குற்றங்களாகும்.

தம்முடைய ஆற்றலும் மானமும் தோற்றுத் தம்

இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக பின்னர்ச்

சிறுவரை ஆயினும் மன்ற தமக்கு ஆங்கு

இறுவரை இல்லை எனின்.”  நீதிநெறிவிளக்கம், 41.

இனிமேல் வாழப்போவது சிறிது காலமாக இருந்தாலும் உறுதியாகத் தமக்கு இறப்பு இல்லை என்றால் தம்முடைய வலிமையையும் மானத்தையும் இழந்தும் தம்முடைய இனிய உயிரைக் காப்பாற்ற விரும்பினாலும்

சனி, 10 ஏப்ரல், 2021

தன்னேரிலாத தமிழ்-263.

 

தன்னேரிலாத தமிழ்-263.

சோறு யாரும் உண்ணாரோ சொல் யாரும் சொல்லாரோ

ஏறு யாரும் வையத்துள் ஏறாரோ தேறி

உரியது ஓர் ஞானம் கற்று உள்ளம் திருத்தி

அரிய துணிவதாம் மாண்பு.” -அறநெறிச்சாரம், 126.

சோறு உண்ணுதலும் செய்வதற்கு அரியன செய்வேன் என்று கூறுதலும் பல்வேறு  ஊர்திகளில் ஏறிச் செல்லுதலும் ஆகிய செயல்களை உலகத்தில் பலரும் செய்வர். ஆகவே தகுதி மிக்க அரிய செயல்களைச் செய்து, வீடு பேற்றினை அடையக் கருதுவதே ஒருவனுக்குப் பெருமை தருவதாகும்.

வியாழன், 8 ஏப்ரல், 2021

தன்னேரிலாத தமிழ்-262.

 

தன்னேரிலாத தமிழ்-262.

சென்ற காலமும் வரூஉம் அமையமும்

இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து

வானமும் நிலனும் தாம் முழுது உணரும்

சான்ற கொள்கை சாயா யாக்கை

ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர்.”  -மதுரைக்காஞ்சி, 477 – 481.

உயர்ந்தோர் உலகத்துச் செய்திகளையும்; எல்லா நிலங்களின் செய்திகளையும் ;தம் நெஞ்சால் அறிதற்குக் காரணமாகிய அறிவுடையர்,

சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும் இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடு மிக உணர்ந்து, அவற்றை உலகத்தார்க்கு உரைப்பர்.