வெள்ளி, 28 மே, 2021

தன்னேரிலாத தமிழ் -270.

 

தன்னேரிலாத தமிழ் -270.

554

கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு.


செங்கோல் வளைய,  அறனழிந்த செயல்களைச் செய்யும் மன்னன்,  குடி மக்கள் பழிதூற்ற, வளமிழந்து நாடு நலியக் குற்றங்கள் பெருகிக் கொற்றமும் சிதையும்.

ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின் கைக்

கொள்ளி கொடுத்து விடல். ”—பழமொழி, 200.


ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்ந்த முதன்மைப் பதவியைக் கொடுத்தல், குரங்கின் கையில் கொள்ளிக் கட்டையைக் கொடுத்தலோடு ஒக்கும்.

செவ்வாய், 25 மே, 2021

தன்னேரிலாத தமிழ் -269.

 தன்னேரிலாத தமிழ் -269.

553

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

நாள்தொறும் நாடு கெடும்.

 அரசன் தன் ஆட்சியின்கீழ் வாழும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குரிய நீதி நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, நாள்தோறும்  நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஆராய்ந்து, முறைசெய்யாவிடில்

அலத்தல் காலை ஆயினும்

புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே.புறநானூறு, 103.

உலகமே வறுமையுற்ற காலமாயினும் உயிர்களைப் பாதுகாக்கும் வல்லமை உடையவன் அதியமான், அவன் தாள் வாழ்க !.

வெள்ளி, 21 மே, 2021

தன்னேரிலாத தமிழ் -268.

 

தன்னேரிலாத தமிழ் -268.

552

வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு.


செங்கோலைக் கையில் கொண்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றி, நல்லாட்சி நடத்தாமல்  வரி வேண்டி மக்களை வருத்தும் மன்னன்,    வேல் ஏந்திக் கைப்பொருளைக் கொடு என்று வழிப்பறி செய்யும் கொள்ளைக்காரனுக்கு ஒப்பாவான்.


குடிபுரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச்

 சிறியோன் பெறின் அது சிறந்தன்று மன்னே. புறநானூறு, 75.


குடிமக்களிடம் வரி வேண்டி இரக்கும் (பிச்சை கேட்பதுபோல்)  சிறுமை உள்ளம் படைத்த, மேம்பாடில்லாத ஆண்மை உடையவனுமான ஒருவனுக்கு, அரசு உரிமை கிடைத்தால் ,அது அவனுக்குத் தாங்க இயலாத சுமையாக அமைந்துவிடும்.

செவ்வாய், 18 மே, 2021

தன்னேரிலாத தமிழ் -267.

 

தன்னேரிலாத தமிழ் -267.


56.கொடுங்கோன்மை

551

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து.


குடிமக்களின் அமைதியை அழித்து, அலைக்கழித்து வருத்தும் முறையற்ற செயல்களைச் செய்யும் கொடுங்கோல் மன்னன், கொலை செய்வதையே தொழிலாகக்கொண்ட ஒரு கொலைஞனைவிடக் கொடியவன் ஆவான்.


கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்

படுகதிர் அமையம் பார்த்திருந்தோர்.” – சிலப்பதிகாரம், 13.


கொடுங்கோல் வேந்தன் ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள், அவன் செத்து ஒழிவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதைப் போல. வெம்மையான கதிரவன் மறையும் பொழுதை அவர்கள் ( கோவலன். கண்ணகி. கவுந்தி அடிகள்) ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.