புதன், 31 ஜூலை, 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 5.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 5.

”ஆழம் தெரியாமல் காலை விடாதே”

                    ஆழம் தெரியாமல் காலைவிடாதே , இன்றும்  ஊர் மக்கள் வழக்கில் உள்ளதுதான். ஆற்றிலோ குளத்திலோ இறங்கும்போது ஆழம் தெரிந்து கொள்ள காலால் எத்திப் பார்த்து இறங்குவது இயல்பான ஒன்றுதான் ஆயினும்  வாழ்க்கையில் நாம் செய்யவேண்டிய செயல்களை என்ணிப்பார்த்துச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இப்பழமொழியின் கருத்தாகும். ஏதாவது ஒரு செயலைத் திட்டமிட்டு அதனைச் செய்வது குறித்து நெருங்கியவர்களிடம் நாம் பேசும் போது அவர்கள்  ‘ உன் சக்திக்கு அதெல்லாம் செய்யமுடியுமா. எதுலயும் ஆழம் தெரியாம கால உடாதே’ என்று அறிவுரை கூறுவார்கள்.

                           அதனால் ,திருவள்ளுவர் கூறுவதை மனங்கொண்டு செயல்பட வேண்டும்,

 “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு. 467.

ஒரு செயலைச் செய்வதற்கு முன் அச்செயல் குறித்து நன்றாக ஆராய்ந்து தொடங்க வேண்டும், தொடங்கிய பின் ஆராயத் துணிவது ஆழம் தெரியாமல் காலைவிட்டு அல்லல் படுவதைப் போன்றதாம்.

செவ்வாய், 30 ஜூலை, 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 4

 

சான்றோர் வாய் (மை) மொழி : 4

“அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.”

                            ஒரு பால் கோடாது உயர் நிலை உடைய நீதியும்  அரசின் உடைமைப் பொருள் அனைத்தும் மக்கள் சொத்து எனக்கொண்டு ஆளும் அரசு மேற்கொள்ளும்  நேர்மையான செலவு நிதியும் நாட்டை நல்வழிப்படுத்தும். அரசு அல்வழியில் செயல்படுமானால் நாடு நலிவடையும் மக்கள் துன்புறுவர்.

                          ஓர் அரசு எப்படி இருக்க வேண்டும் எப்படி இயங்கவேண்டும் என்று நம் முன்னோர் நமக்கு நிறையவே சொல்லியிருக்கிறார்கள். கல்வியறிவில்லாத மூடர்கள் கையில் அரசு சிக்குமானால் என்னவாகும் என்பதை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம் இல்லையா..?

ஆளும் அரசனுக்குரிய தகுதிகள் :

 “அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே

கோடியாத்து நாடு பெரிது நந்தும்.. ” புறநானூறு: 184.

                            அறிவுடைய அரசன் தாம் கொள்ளும் வரியை மக்களின் நிலயறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் அவன் நாடு கோடிப் பொருளை ஈட்டிக்கொடுத்து செழிப்படையும் என்று நாடு செழிக்க நல்வழி  கூறினார் பிசிராந்தையார்.

அன்றைய அரசு முறைகளையும் இன்றைய அரசு முறைகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள் உண்மை புரியும்.  

“ மன்பதை காக்கும் நின்புரைமை நோக்காது

அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு

நும்மனோரும் மற்று இனையர் ஆயின்

எம்மனோர் இவண் பிறவலர் மாதோ..” –புறநானூறு;210.

                          தலைவனே..! மக்களைக் காக்கும் பெரும் பொறுப்பினை உணராது அன்பின்றி அறமற்ற முறையில் நீயும் நும்மை ஒத்தாரும் ஆட்சி செய்வார்களானால் எம்மைப் போன்றோர் இவ்வுலகில் பிறவாதிருத்தலே நன்று, என்று  அன்பும் அறமும் இல்லா ஆட்சியைப்பற்றிப் பெருங்குன்றூர் கிழார் கூறுகின்றார்.

இன்று நம் நாட்டில் நடக்கும் ஆட்சி முறையை அன்றே அவர் கூறினாரோ..? என்று எண்ணத்தோன்றுகிறதே.

                    மக்களை வருத்திக் கந்துவட்டிக்காரனைப்போல  அரசு செயல்படுமானால் நாடு அழியும் நன்மக்களும் அழிவர். கொடுங்கோல் அரசனை எவ்வாறு தண்டிப்பது ….யார் தண்டிப்பது..? முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்பதுதான் நீதி.           

                   “அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்” என்றார் இளங்கோவடிகள்.

அரசியலில் தவறு இழைத்தோர்க்கு அறமே எமனாக அமையும்.

                      நம் கண் முன்னே  அறம் எமனாக நின்றதைக் கண்டோமே..! அரசியலில் அடாது செய்த ஆட்சியாளர்கள் படாதபாடுபட்டு பழியொடு மாண்டுபோனதைப் பார்த்தோமே.!

     

திங்கள், 29 ஜூலை, 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 3.

 

சான்றோர் வாய் (மை) மொழி : 3.

“உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது.”

 உழக்கு – ஓர் அளவு .  இரண்டு ஆழாக்கு = உழக்கு ; ஆழாக்கு = 1/8.

உழு தொழில் உலகின் முதல் தொழிலாகும் . உணவைத் தேடிய மனிதன் நீரையும் நிலத்தையும் இணைத்துப் பயிர்த் தொழில் கண்டான். தொல்பழங்காலந்தொட்டே தமிழர்கள் வேளாண் தொழில் செய்து வருகின்றனர். தமிழ்நிலப் பகுப்பில் பயிர் விளையும் நிலம் ‘மருதம்’ என்று சுட்டப்படுகின்றது. போர் முனையில் போராடும் வீரர்களைவிட ஏர் முனையில் போராடும் உழவர்களைப் போற்றிப் புகழாத புலவர்களே இல்லை எனலாம்.

திருவள்ளுவர் ’கடவுள் வாழ்த்து ‘ என்று ஓர் அதிகாரம் எழுதாமல்  உழவர்களைப்போற்றிப் புகழ்ந்து ‘உழவு’ குறித்து ஓர் அதிகாரம் (104) எழுதியுள்ளார்.

‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் …’ என்று  இவ்வுலகம் ஏர்த்தொழிலின் பின்னேதான் சுழல்கிறது என்றார். ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி….” என்றும்  ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்…’ என்றும்  இவ்வுலகில் வாழத்தகுதியுள்ளவர்கள் உழவர்களே என்பார்.

“குளம் தொட்டுக் காவு பதித்து வழிசீத்து

உளம்தொட்டு உழுவயல் ஆக்கி வளம் தொட்டுப்

பாகுபடும் கிணற்றோடு என்றிவைம் பாற்படுத்தான்

ஏகும் சுவர்க்கத்து இனிது.” என்கிறது சிறுபஞ்சமூலம்.

“ஆற்றங் கரையின் மரமும் அரசறிய்

வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு .” என்று நல்வழி கூறுகிறது.

 மேற்குறித்தவாறு உழுதொழில் ஒன்றே உயர், உயிர், தொழில் என்றும் புலவர்கள் போற்றி உரைத்துள்ளனர்.

இவ்வளவு பெருமைக்குரிய உழவர்களின் வாழ்க்கையோ  வறுமையோடுதான். உழவுத்தொழில் இயற்கையோடு இயைந்த தொழில், படாதபாடுபட்டுப் பருவத்தே பயிர் செய்து விளைச்சலைப் பெற்றாலும் பருவம் தப்பியது என்றால்  உழவனின் வாழ்க்கையும் தப்பிப் பிழைப்பது அரிதாம். அதனால்தான் . நெற்றி வியர்வையால் உழவன் வெற்றி பெற்றாலும் வரவு செலவு கணக்கைப் பார்த்தால் ஓர் உழக்கு அளவு கூட க் கையில்  பொருள் இருப்பதில்லை என்ற வேதனையின் விளைவாகத் தோன்றியதே மேற்சுட்டப்பட்டுள்ள பழமொழி.

 

சனி, 27 ஜூலை, 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 2

 சான்றோர் வாய் (மை) மொழி : 2

“அளவுக்கு  மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்.”

 அமுதம், அமிழ்தம், அமிர்தம், அமுது இச்சொற்கள் அனைத்தும் சோறு, நீர், பால் ஆகியவற்றைக் குறிக்கும்  

அமிழ்தம் தேவர் உலகில் கிடைக்கும் என்றும் அதனால் இதற்குத் தேவாமிர்தம் என்றும் பெயராயிற்று என்பர். இதை உண்டவர்க்கு பிணியில்லை, மூப்பில்லை ,சாக்காடும் இல்லை என்று கதை அளப்பர்.

திருவள்ளுவர் அமிழ்தமாவது  மழைநீர் என்பார்.

”வானின்று உலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்று உணரற் பாற்று.” குறள்:11. இக்குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர், ’அமிழ்தம் உண்டார் சாவாது நிலைபெறுதலின்…..’என்றார்.

மேலும் குறள் 82-இல்

“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று.” சாவா மருந்து எனினும் என்றதற்குப் பரிமேலழகர் ’உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும்’ என்று உரைத்தார். 

பாவேந்தர் “தமிழுக்கும் அமுதென்று பேர் ;அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் …”என்று தமிழமுதம்  உண்பவர் இறாவா நிலை எய்துவர்  எனலாமா…? அஃது உண்மைதானே, இயற்கை எய்திய தொல்காப்பியர் என்றோ.. மறைந்த திருவள்ளுவர் என்றோ… காலஞ்சென்ற கம்பர் என்றோ  எவரும் கூறுவதில்லையே..! முன்னோர் மொழிபொருள் கொண்டு இறவாநிலை எய்திய  தமிழ், அமிழ்தமே..!

 வானின்று பொழியும் மழையை அமிழ்தம் என்றார் வள்ளுவர். கவிஞர் கு.மா. பாலசுப்ரமணியம் “அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ…” (படம்: தங்கமலை ரகசியம்.) என்று வானில் தோன்றும் குளிர்நிலவின் ஒளி வெள்ளத்தை அமுதம் என்றார்.

அளவுக்கு மிஞ்சினால் அனைத்துமே நஞ்சாகுமா…? ஆமாம்.

உயிர்கள் நலம், வளம் பெற்று நீடூழி வாழ  வான்புகழ் வள்ளுவர் வகுத்தளித்த திருக்குறளில் ‘மருந்து’  95. என்றோர் அதிகாரம் இருக்கிறது. வள்ளுவர் ஏதோ மூலிகை மருத்துவம் குறித்துக் கூறியுள்ளதாக நினத்தால் அது தவறு. அவர் நோய்க்கு மருந்து கூறவில்லை; ஆயினும் நோயின்றி மக்கள் வாழ்வதற்கேற்ற வழிமுறைகளைக் கூறியுள்ளார், அஃதாவது வருமுன் காக்கும் நெறியைக் கூறியுள்ளார். ( Prevention is better than cure).

நோய் நொடியின்றி நூறாண்டு வாழ……எதிலும் அத்து மீறாதே அளவோடு இரு.

“மிகினும் குறையினும் நோய் செய்யும்…”

“அருந்தியது அற்றது போற்றி உணின்..”

”அற்றால் அளவறிந்து உண்க…”

கழிபேர் இரையான்கண் நோய்..”

பெரிதுண்ணின் நோய் அளவின்றிப்படும்.”  மேற் கூறியவாறு அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகிக் தோன்றாக் கெடும்- 479.

வள்ளுவர் கூற்று முற்றிலும் உண்மையன்றோ…!

நூறாண்டு நோய் நொடியின்றி  வாழ இந்த ஒரு பழமொழி போதும். 

வெள்ளி, 26 ஜூலை, 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 1

 

சான்றோர் வாய் (மை) மொழி : 1

பழமொழிகள்………………………………… அன்பிற்கினிய  நண்பர்களுக்கு இனிய வணக்கம்…! சான்றோர் வாய்(மை) மொழி என்னும் புதிய தொடருக்கு என் வலைப்பூவழங்கி உங்களை அன்புடன் அழைக்கிறேன். 26 -07 – 2024, முதல் வருக வருகவே..!

பல தலைமுறைகள் கடந்தும் காலத்தால் அழியாது வழக்கிலிருந்து வருகிறது. இக்கூற்றுக்கு உரியவர் யாரோ யார்  அறிவார்..?

பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்
ஏட்டுல எழுதவில்லை எழுதி வெச்சு பழக்கமில்லை
இலக்கணம் படிக்கவில்லை தலைக்கனமும் எனக்கு இல்லை
கவிஞர் வைரமுத்து.

இப்படியாகப் பாடுபடும் மக்களின் பட்டறிவில் தோன்றியதுதான் பழமொழி. பழமொழியின் தொன்மை வளமறிந்த தொல்காப்பியர்  இதனைமுதுசொல்என்றார்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.”

 அகத்தின் அழகு என்பது உளவியல், உடலியல் எனும் இரண்டையும்  உள்ளடக்கியதாகும். அதனால் தான் திருவள்ளுவர் அகமாகிய மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் என்றார்.

மனத்தின் பிறழ்வு நிலைகளை முகம் காட்டிக்கொடுக்கும். மனத்தில் குழப்பம், கவலை, விருப்பு, வெறுப்பு, சினம், வெறி  இன்னபிற  பிறழ்வு நிலைகளை முகம் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும் தன்னகத்தே கொண்ட எண் சாண் உடம்புக்குத் தலையே தலைமைச் செயலகம்.  தலையும்  தன்னிலை உணர்த்தும் தலை சுற்றல், மயக்கம், வலி முதலிய குறிகள் நோய்க்குறிகளாகும் . உடலில் தோன்றும்  மாறுபாடுகளை உணர்த்தும் முதன்மை கருவி முகமேயாகும்.  உடலுக்கு ஒவ்வாத குளிர், வெம்மை முதலிய குறைபாடுகளை உணர்த்துவது மெய் ;  உணவின் ஒவ்வாமையை உணர்த்தும் உமிழ் நீர், குமட்டல், தொண்டைப்புண் முதலியவற்றை உணர்த்துவது வாய் ;  உடலின் உள்ளுறுப்புகளின் மாறுபாட்டை   கண் சிவத்தல், மஞ்சள் படர்தல், நீலநிறம் கொள்ளல் இன்னபிற நோவுகளை உணர்த்துவது கண் ;  சுற்றுச்சூழல் ஒவ்வாமையால் நீர் வடிதல், மூச்சு விடமுடியாமல் அடைப்பு ஏற்படல், காரமான தும்மல் மேலும் பல குறிகளைக் கொடுப்பது மூக்கு ;  செல்வத்துள் சிறந்த செல்வமாகிய செவி உடல் இயக்கத்தில் பெறும் பங்காவது செவிப்பறையில் அளவான நீரின்றேல் மனிதனால் நிலையாக நடக்கமுடியாது, சீழ்வடிதல், வலி ஏற்படல் இன்னபிற குறிகளை உணர்த்துவது செவியாகும்.

மேற்குறித்தவாறு அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்கிற பழமொழி அரும்பொருள் பலவற்றை தன்னகத்தே கொண்டதாகும்.

வியாழன், 25 ஜூலை, 2024

 

சான்றோர் வாய் (மை) மொழி : 1

பழமொழிகள்………………………………… அன்பிற்கினிய  நண்பர்களுக்கு இனிய 

வணக்கம்…! சான்றோர் வாய்(மை) மொழி என்னும் புதிய தொடருக்கு என் ’வலைப்பூ’ 

வழங்கி உங்களை அன்புடன் அழைக்கிறேன். 26 -07 – 2024, முதல் வருக வருகவே..!