சான்றோர் வாய் (மை) மொழி : 1
பழமொழிகள்………………………………… அன்பிற்கினிய நண்பர்களுக்கு இனிய வணக்கம்…!
சான்றோர் வாய்(மை) மொழி என்னும்
புதிய தொடருக்கு என் ’வலைப்பூ’ வழங்கி உங்களை
அன்புடன் அழைக்கிறேன். 26 -07 – 2024, முதல் வருக வருகவே..!
பல தலைமுறைகள் கடந்தும் காலத்தால் அழியாது
வழக்கிலிருந்து வருகிறது. இக்கூற்றுக்கு
உரியவர் யாரோ யார் அறிவார்..?
பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம் தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்
ஏட்டுல எழுதவில்லை எழுதி வெச்சு பழக்கமில்லை
இலக்கணம் படிக்கவில்லை தலைக்கனமும் எனக்கு
இல்லை – கவிஞர் வைரமுத்து.
இப்படியாகப்
பாடுபடும் மக்களின் பட்டறிவில் தோன்றியதுதான் பழமொழி. பழமொழியின் தொன்மை வளமறிந்த தொல்காப்பியர்
இதனை “முதுசொல்”
என்றார்.
”அகத்தின் அழகு முகத்தில்
தெரியும்.”
அகத்தின் அழகு என்பது உளவியல், உடலியல் எனும் இரண்டையும் உள்ளடக்கியதாகும். அதனால் தான் திருவள்ளுவர் அகமாகிய
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் என்றார்.
மனத்தின் பிறழ்வு நிலைகளை முகம் காட்டிக்கொடுக்கும்.
மனத்தில் குழப்பம், கவலை, விருப்பு, வெறுப்பு, சினம், வெறி இன்னபிற
பிறழ்வு நிலைகளை முகம் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும்
தன்னகத்தே கொண்ட எண் சாண் உடம்புக்குத் தலையே தலைமைச் செயலகம். தலையும் தன்னிலை உணர்த்தும் தலை சுற்றல், மயக்கம், வலி முதலிய
குறிகள் நோய்க்குறிகளாகும் . உடலில் தோன்றும் மாறுபாடுகளை உணர்த்தும் முதன்மை கருவி முகமேயாகும். உடலுக்கு ஒவ்வாத குளிர், வெம்மை முதலிய குறைபாடுகளை
உணர்த்துவது மெய் ; உணவின் ஒவ்வாமையை உணர்த்தும்
உமிழ் நீர், குமட்டல், தொண்டைப்புண் முதலியவற்றை உணர்த்துவது வாய் ; உடலின் உள்ளுறுப்புகளின் மாறுபாட்டை கண் சிவத்தல், மஞ்சள் படர்தல், நீலநிறம் கொள்ளல்
இன்னபிற நோவுகளை உணர்த்துவது கண் ; சுற்றுச்சூழல்
ஒவ்வாமையால் நீர் வடிதல், மூச்சு விடமுடியாமல் அடைப்பு ஏற்படல், காரமான தும்மல் மேலும்
பல குறிகளைக் கொடுப்பது மூக்கு ; செல்வத்துள்
சிறந்த செல்வமாகிய செவி உடல் இயக்கத்தில் பெறும் பங்காவது செவிப்பறையில் அளவான நீரின்றேல்
மனிதனால் நிலையாக நடக்கமுடியாது, சீழ்வடிதல், வலி ஏற்படல் இன்னபிற குறிகளை உணர்த்துவது
செவியாகும்.
மேற்குறித்தவாறு அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
என்கிற பழமொழி அரும்பொருள் பலவற்றை தன்னகத்தே கொண்டதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக