சான்றோர் வாய்
(மை) மொழி
: 3.
“உழுதவன் கணக்கு பார்த்தால்
உழக்குக்கூட மிஞ்சாது.”
உழக்கு – ஓர் அளவு . இரண்டு ஆழாக்கு = உழக்கு ; ஆழாக்கு = 1/8.
உழு தொழில் உலகின் முதல் தொழிலாகும்
. உணவைத் தேடிய மனிதன் நீரையும் நிலத்தையும் இணைத்துப் பயிர்த் தொழில் கண்டான். தொல்பழங்காலந்தொட்டே
தமிழர்கள் வேளாண் தொழில் செய்து வருகின்றனர். தமிழ்நிலப் பகுப்பில் பயிர் விளையும்
நிலம் ‘மருதம்’ என்று சுட்டப்படுகின்றது. போர் முனையில் போராடும் வீரர்களைவிட ஏர் முனையில்
போராடும் உழவர்களைப் போற்றிப் புகழாத புலவர்களே இல்லை எனலாம்.
திருவள்ளுவர் ’கடவுள் வாழ்த்து ‘ என்று
ஓர் அதிகாரம் எழுதாமல் உழவர்களைப்போற்றிப்
புகழ்ந்து ‘உழவு’ குறித்து ஓர் அதிகாரம் (104) எழுதியுள்ளார்.
‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் …’ என்று இவ்வுலகம் ஏர்த்தொழிலின் பின்னேதான் சுழல்கிறது
என்றார். ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி….” என்றும் ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்…’ என்றும் இவ்வுலகில் வாழத்தகுதியுள்ளவர்கள் உழவர்களே என்பார்.
“குளம்
தொட்டுக் காவு பதித்து வழிசீத்து
உளம்தொட்டு
உழுவயல் ஆக்கி வளம் தொட்டுப்
பாகுபடும்
கிணற்றோடு என்றிவைம் பாற்படுத்தான்
ஏகும்
சுவர்க்கத்து இனிது.” என்கிறது சிறுபஞ்சமூலம்.
“ஆற்றங்
கரையின் மரமும் அரசறிய்
வீற்றிருந்த
வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்
உழுதுண்டு
வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு
வேறோர் பணிக்கு .” என்று நல்வழி கூறுகிறது.
மேற்குறித்தவாறு உழுதொழில் ஒன்றே உயர், உயிர், தொழில்
என்றும் புலவர்கள் போற்றி உரைத்துள்ளனர்.
இவ்வளவு
பெருமைக்குரிய உழவர்களின் வாழ்க்கையோ வறுமையோடுதான்.
உழவுத்தொழில் இயற்கையோடு இயைந்த தொழில், படாதபாடுபட்டுப் பருவத்தே பயிர் செய்து விளைச்சலைப்
பெற்றாலும் பருவம் தப்பியது என்றால் உழவனின்
வாழ்க்கையும் தப்பிப் பிழைப்பது அரிதாம். அதனால்தான் . நெற்றி வியர்வையால் உழவன் வெற்றி
பெற்றாலும் வரவு செலவு கணக்கைப் பார்த்தால் ஓர் உழக்கு அளவு கூட க் கையில் பொருள் இருப்பதில்லை என்ற வேதனையின் விளைவாகத் தோன்றியதே
மேற்சுட்டப்பட்டுள்ள பழமொழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக