சான்றோர் வாய் (மை)
மொழி : 4
“அரசன் எவ்வழி குடிகள்
அவ்வழி.”
ஒரு பால் கோடாது உயர்
நிலை உடைய நீதியும் அரசின் உடைமைப் பொருள்
அனைத்தும் மக்கள் சொத்து எனக்கொண்டு ஆளும் அரசு மேற்கொள்ளும் நேர்மையான செலவு நிதியும் நாட்டை நல்வழிப்படுத்தும்.
அரசு அல்வழியில் செயல்படுமானால் நாடு நலிவடையும் மக்கள் துன்புறுவர்.
ஓர் அரசு எப்படி இருக்க
வேண்டும் எப்படி இயங்கவேண்டும் என்று நம் முன்னோர் நமக்கு நிறையவே சொல்லியிருக்கிறார்கள்.
கல்வியறிவில்லாத மூடர்கள் கையில் அரசு சிக்குமானால் என்னவாகும் என்பதை இன்று நாம் கண்கூடாகப்
பார்க்கிறோம் இல்லையா..?
ஆளும் அரசனுக்குரிய தகுதிகள்
:
“அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து
கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும்.. ” புறநானூறு: 184.
அறிவுடைய அரசன் தாம்
கொள்ளும் வரியை மக்களின் நிலயறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் அவன் நாடு கோடிப்
பொருளை ஈட்டிக்கொடுத்து செழிப்படையும் என்று நாடு செழிக்க நல்வழி கூறினார் பிசிராந்தையார்.
அன்றைய அரசு முறைகளையும் இன்றைய அரசு முறைகளையும்
ஒப்பிட்டுப் பாருங்கள் உண்மை புரியும்.
“ மன்பதை காக்கும் நின்புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ..” –புறநானூறு;210.
தலைவனே..! மக்களைக் காக்கும்
பெரும் பொறுப்பினை உணராது அன்பின்றி அறமற்ற முறையில் நீயும் நும்மை ஒத்தாரும் ஆட்சி
செய்வார்களானால் எம்மைப் போன்றோர் இவ்வுலகில் பிறவாதிருத்தலே நன்று, என்று அன்பும் அறமும் இல்லா ஆட்சியைப்பற்றிப் பெருங்குன்றூர்
கிழார் கூறுகின்றார்.
இன்று நம் நாட்டில் நடக்கும் ஆட்சி முறையை அன்றே
அவர் கூறினாரோ..? என்று எண்ணத்தோன்றுகிறதே.
மக்களை வருத்திக் கந்துவட்டிக்காரனைப்போல
அரசு செயல்படுமானால் நாடு அழியும் நன்மக்களும்
அழிவர். கொடுங்கோல் அரசனை எவ்வாறு தண்டிப்பது ….யார் தண்டிப்பது..? முற்பகல் செயின்
பிற்பகல் விளையும் என்பதுதான் நீதி.
“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்
கூற்று ஆவதூஉம்” என்றார் இளங்கோவடிகள்.
அரசியலில் தவறு இழைத்தோர்க்கு அறமே எமனாக அமையும்.
நம் கண் முன்னே அறம் எமனாக நின்றதைக் கண்டோமே..! அரசியலில் அடாது
செய்த ஆட்சியாளர்கள் படாதபாடுபட்டு பழியொடு மாண்டுபோனதைப் பார்த்தோமே.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக