ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-26.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- இளம்பூரணர் : மு.வை. அரவிந்தன்.
தொல்காப்பியத்திற்கு இளம்பூரணரே முதன்முதலில் உரை கண்டார். இவரது காலம் பதினோராம் நூற்றாண்டு என்பர். இளம்பூரணர் காலம் வரை - தொல்காப்பியம் தோன்றிப் பல நூறு ஆண்டுகள் வரை , உரை இல்லாமலே கற்கப்பட்டு வந்ததா என்ற வினா எழக்கூடியதே, ஆனால் இந்நாள் வரை இளம்பூரணரே தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியர் என்ற கருத்து நிலவி வருகின்றது. இளம்பூரணர் தம் உரைகளில் பிற உரைகளாகச் சில கருத்துக்களைத் தெரிவிக்கின்றார். உரை இயற்றியவர் பெயரைக் குறிப்பிடவில்லை.
இளம்பூரணர் தொடங்கி வைத்த உரைப்பணி, பலவகையாக வளர்ச்சி பெற்றது. இவரது கருத்துகளை ஏற்று, புதிய இலக்கண நூல்களைச் சிலர் செய்துள்ளனர். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டிலும் இவர் கூறிய கருத்துகளைக் கொண்டு நேமிநாதமும் நன்னூலும் தோன்றின. பின்னால் தோன்றிய அகம், புறம், யாப்பு, அணி பற்றிய நூல்களும் ஆங்காங்கே இவரது கருத்துகளை மேற்கொண்டுள்ளன.
தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாக உரை இயற்றியதால் இளம்பூரணர்க்கு ‘உரையாசிரியர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்குப் பின்வந்த தொல்காப்பிய உரையாசியர்கள் அனைவரும் இவர் உரையைக் கற்றுத் தெளிந்த பின்னரே தம் கருத்தை விளக்கிப் புதிய உரை கண்டனர்.
பழைய உரை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வோர் இயல்பு உள்ளது. இளம்பூரணர் உரை தமிழ் மரபை உணர்த்தும் உரை எனலாம். சேனாவரையர் உரை வடமொழி இலக்கணக் கொள்கையைத் தமிழ்மீது திணிக்கும் உரை என்பது பொருந்தும். பேராசிரியர் உரை இலக்கண இலக்கிய ஆராய்ச்சி நிரம்பிய உரையாக உள்ளது. நச்சினார்க்கினியர் உரை இலக்கிய ச் சுவை நுகர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. தெய்வச்சிலையார் உரையில் சில இடங்களில் புதுமை ஒளி காணப்படுகின்றது, கலாடர் உரை முன்னைய உரைகளைத் தழுவி எழுதப்பட்ட சார்பு உரையாக உள்ளது.
17ஆம் நூற்றாண்டில்..............................................தொடரும்.....................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக