ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-24.
தொல்காப்பியர் வரலாறு :
தொல்காப்பியர்-காலம் :
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
” இலங்கைத்தீவின் வரலாற்றிலும், கி.மு. 2387இல் ஓர் கடல்கோள் நிகழ்ந்தமை குறிக்கப்பட்டுள்ளது. மநுவரசன் காலத்தில் ஓர் பிரளயம் நிகழ்ந்தமையைச் சதபத பிராமணம் தெரிவிக்கின்றது. அப்பிரளயத்தோடு தொடர்புடைய மநுவரசன் இமயமலைமேல் தவம் புரிந்துகொண்டிருந்தான் என மச்ச புராணம் கூறுகின்றது. பாகவத புராணமானது கிருதமலையாற்றங்கரையிலே திராவிட அரசனான சத்திய விரதன் என்பான் தவம் செய்து கொண்டிருந்த பொழுது அங்கு மீன் வடிவுடன் வந்த ஒரு தெய்வம் அங்கே நிகழப்போகும் கடல்கோளை அவனுக்கு முன்னரே அறிவித்து, அவ்வாறே அது நிகழ்ந்தபொழுது ஓர் மரக்கலத்தில் அவனையும் அவனைச் சார்ந்தோரையும் ஏற்றுவித்துக் கொண்டுபோய் உய்வித்த வரலாற்றை விரித்துரைக்கின்றது.
யூதர்களின் ஆகமத்திற் கூறப்பட்டுள்ள கடல்கோள் வரலாற்றோடு பாகவதபுராணத்தின் வரலாறு பெரிதும் ஒத்திருத்தல் கருதற்பாலது. இங்ஙனம் வெவ்வேறு நாட்டினர் கூறும் பிரளயம் வரலாற்றாலும் காலத்தாலும் பெரிதும் ஒத்திருத்தலானும் அது தமிழ் நாட்டில் நிகழ்ந்தது என்பதற்குப் புராணங்களேயன்றி பழைய தமிழ் நூக் உரைகளும் நிலநூல் உண்மையும் சான்று பகர்தலானும் இற்றைக்குச் சற்றேறக்குறைய 4200 ஆண்டுகளின் முன்பு தமிழகத்தின் தெற்கே ஒரு கடல்கோள் நிகழ்ந்து அதனாற் குமரியாறும், அதனைச் சார்ந்த நிலப்பகுதியும் அழிந்தனவென்றும் தொல்காப்பியம் அதற்கு முன்னரே இயற்றப்பெற்றதாகும் என்றும் கொள்ளுதல் வேண்டும். என்கிறார்”
”தொல்காப்பியர் பாரத காலமாகிய கி.மு. 1500க்கு முற்பட்டு வாழ்ந்தவர் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. களவியல் உரையில் கண்ட ஆண்டுக் கணக்கின்படி நோக்குங்கால் இடைச்சங்கம் கி.மு. 5320-இல் தொடங்கப்பெற்றமை புலனாதலின் தலைச்சங்கத்தின் இறுதியிலும் இடைச்சங்கத்தின் தொடக்கத்திலும் வாழ்ந்தவராகிய தொல்காப்பியனார் காலமும் அதுவே என்பதும் நன்கு துணியப்படும் என்க. என்றும் கூறுவர்.
........தொடரும்......... தொல்காப்பிய -உரையாசிரியர்கள்..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக