ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-30.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- இளம்பூரணர் : மு.வை. அரவிந்தன்.
உரையாசிரியர் சில சொற்களின் பொருளை நன்கு விளக்கிச் சொல்லுகின்றார். அத்தகைய விளக்கம் ஆராய்ச்சி உலகிற்குப் புதிய ஒளி தரவல்லவை. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
அம்பல் என்பது முகிழ்த்தல். அஃது ஒருவர் முகக் குறிப்பினால் தோற்றுவித்தல். அலராவது சொல்லுதல் (களவியல் - 49)
புலவி அண்மைக்காலத்தது ; ஊடல் அதனின் மிக்கது (கற்பியல்- 15,)
மடம் என்பதற்கும் பேதமை என்பதற்கும் வேறுபாடு என்னை எனின், மடம் என்பது பொருண்மை அறியாது திரியக்கோடல் ; பேதமை என்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாகக் கோடல். (மெய்ப்பாட் - 4.)
மாணாமை என்ற சொல்லிற்கு மிகாமை என்ற பொருள் உரைப்பது இவரது புலமைச் சிறப்பைக் காட்டுவதாகும். “மாண மறந்து உள்ளா நாணிலி” -(கலித்- 89.) என்றாற் போல மாணாமை என்பது மிகாமை என உரைப்பினும் அமையும்.” (மெய்ப்பாட் - 24.)
“ ஒப்பும் உருவும் “ என்று தொடங்கும் சூத்திரத்தின் கீழ் (பொருளியல் - 42.) ஒப்பு , உரு,, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், முதலிய சொற்களுக்குக் கூறும் பொருள் கற்று மகிழத்தக்கவை.
படிமையோன் என்பதற்குத் ‘தவ ஒழுக்கத்தை உடையான்; என்று பாயிரப் பகுதியில் பொருள் கூறிய இவரே “படிமை என்பது ப்ரதிமா என்னும் வடமொழித் திரிபு “ என்று உரைக்கின்றார். (அகத் - 30)
யவனர் என்ற சொல்லை ஆரியச் சிதைவு என்று கூறுகின்றார். (எழுத் - 65.)
“ உயர்வு தாம் பல: குலத்தால் உயர்தலும், தவத்தால் உயர்தலும், நிலையால் உயர்தலும், உபகாரத்தால் உயர்தலும் என. (சொல். -87.) “ உயர்ந்தோர் என்ற வழிக் குலத்தினான் உயர்ந்தாரையும் காட்டும். கல்வியான் உயர்ந்தாரையும் காட்டும், செல்வத்தான் உயர்ந்தாரையும் காட்டும்.” (அகத்.-3)
”பிறப்பே குடிமை” என்னும் சூத்திரத்தின் கீழ் ‘நிம்பிரி கொடுமை’ என்னும் சூத்திரத்தின் கீழும் (மெய்ப்பா- 25,6.) பல சொற்களை இனிது விளக்கியுள்ளார்...........சூத்திர அமைப்பும் உரைப்போக்கும்........ ................................தொடரும்........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக