ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-47.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- தெய்வச்சிலையார் : மு.வை.அரவிந்தன்.
வடமொழிப் புலமை:
இவர் வடமொழியில் புலமை உடையவர். வடமொழி இலக்கணக் கருத்தை பல இடங்களில் எழுதுகின்றார். பாணினியின் இலக்கணக் கொள்கையை இரண்டு இடத்தில் சுட்டுகின்றார்.
“ஒரு வினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே (88) என்ற சூத்திரத்தி்ற்கு வேறுபட்ட உரையை எழுதி, ‘இப்பொருள் பாணினியார்க்கும் ஒக்கும்’ என்று உரைக்கின்றார்.
“வண்ணத்தின் வடிவின்(41) என்ற சூத்திரத்தின் உரையில் “வேற்றுமைத் தொகை.....என்பன தம்முள் ஒருபுடை ஒப்புமை உடைய ஆதலின் பாணினியார் தற்புருட சமாசம் என்று குறிப்பிட்டார்” என்று கூறுகின்றார். ்சில தமிழ்ச்சொற்களுக்கு அவற்றோடு ஒத்த வடசொற்களைக் குறிக்கின்றார். முதல் - காரகம் (69) உரிச்சொல் - தாது ...... என்று குறிக்கின்றார்.
உரைநடை இயல்பு:
தெய்வச்சிலையார் உரைநடை உயிரோட்டமுடையதாய் எளிதாய் உள்ளது.
கீழே இவரது உரையின் ஒரு பகுதியைக் காணவும். “ காலம் என்பது முன்னும் பின்னும் நடுவும் ஆகி என்றும் உள்ளதோர் பொருள். உலகம் என்பது மேலும் கீழும் நடுவும் ஆகி எல்லா உயிர்க்கும் தோன்றுதற்கு இடமாகிய பொருள். உயிர் என்பது சீவன் ; உடம்பு என்பது மனம் புத்தி ஆங்காரமும் பூத் தன்மாத்திரையுமாகி வினையினாற் கட்டப்பட்டு எல்லாப் பிறப்பிற்கும் உள்ளாகி நிற்பதோர் நுண்ணிய உடம்பு, இதனை மூலப்பகுதி எனினும் ஆம். பால்வரை தெய்வம் என்பது ஆணும் பெண்ணும் அலியும் ஆகிய நிலைமையை வரைந்து நிற்கும் பரம் பொருள். வினை என்பது ஊழ். பூதம் என்பது நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதம். ஞாயிறு என்பது தீத்திரளாய் உலகிற்கு அருள் செய்வது. சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்த்துவது. அச்சொல்லின் இயன்ற மந்திரம் விடம் முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று.(55).
.............................. மக்கள் வாழ்க்கையும் நாகரிகமும்..................தொடரும் ........... ..................... .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக