ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-33.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- சேனாவரையர்: மு.வை.அரவிந்தன்.
தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை கண்ட பெருமக்கள் ஐவர் ,இளம்பூரனர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகிய ஐவரும் ஒருவர்பின் ஒருவராகக் காலந்தோறும் சொல்லதிகாரத்திற்கு விரிவான உரை எழுதி, தமிழ்மொழிக்குத் தொண்டு புரிந்தனர் சேனாவரையர் உரையே இன்றுவரை, புலவர் உலகம் போற்றும் பெருமையுடன் விளங்குகின்றது.
சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரை எழுதியுள்ளார். இவர் வேறு நூலோ, உரையோ எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. சிவஞான முனிவர் “ சேனாவரையர் எழுத்ததிகாரத்திற்கு உரை செய்தாராயின் இன்னோரன்ன பொருளனைத்தும் தோன்ற, ஆசிரியர் கருத்துணர்ந்து உரைப்பர், அவர் சொல்லதிகாரம் போலப் பெரும்பயன்படாமை கருதி எழுத்ததிகாரத்திற்கு உரை செய்யாது ஒழிந்தமையின் பின்னுள்ளோரும் மயங்குவராயினர், என்று கூறுகின்றார்.
சேனாவரையர் என்ற சொல்லுக்குப் படைத்தலைவர் என்பது பொருள். சேனை + அரையர் எனப்பிரித்துப் படைத்தலைவர் என்று பொருள் கொள்வர். நன்னூலின் உரையாசிரியராகிய மயிலைநாதர் . சிறப்பால் பெறும் பெயருக்கு ‘ஆசிரியன் படைத்தலைவன், சேனாவரையன்” என்பனவற்றை உதாரணமாகக் காட்டியுள்ளார். (நன்.பெய. -19.) ஆதலின் பண்டைத் தமிழ் மன்னர்கள் தம் படைத்தலைவர்களுக்குச் சேனாவரையர் என்ற சிறப்புப் பெயரை இட்டு வழங்கினர் என்று அறியலாம். சேனவரையர் என்பது இயர் பெயராகவும் கல்வெட்டுகளில் வழங்கியுள்ளது. உரையாசிரியராகிய சேனாவரையரைப் படைத்தலைவர் என்று கொள்வதற்குச் சான்று எதுவும் இல்லை. ஆதலின் அதனை இயற்பெயராகவே கருத வேண்டியுள்ளது.
இவர் தென்பாண்டி நாட்டில் வாழ்ந்தவர் என்பதற்கு இவர் உரையில் சான்றுகள் சில உள்ளன. இவர் ஆற்றூர்ச் சேனாவரையர் தம் சொத்துகளைச் சிவன் கோயிலுக்கு வழங்கிய காலம் மாறவர்மன் குலசேகர பாண்டியனது ஏழாம் ஆட்சியாண்டாகிய கி.பி. 1275 ஆகும். இப்பாண்டியனை எம்மண்டிலமும் கொண்டருளிய மாறவர்மன் குலசேகரன் (கி.பி.1268 - 1311) என்று வரலாற்றுு ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே சேனாவரையர் அப்பாண்டிய மன்னன் காலத்தில் 13 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் எனலாம். சேனாவரையர் ஆசிரியப்பணி............................... ...............தொடரும்......................................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக