வியாழன், 16 ஜூலை, 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-38. உரையாசிரியர்- பேராசிரியர்:

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-38.  

                தொல்காப்பிய உரையாசிரியர்கள்  

                  உரையாசிரியர்- பேராசிரியர் மு.வை.அரவிந்தன். 

                               பேராசிரியர் என்ற பெயருடன் தமிழிலக்கிய உலகில் பலர் உள்ளனர். தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்கு உரை வகுத்த பேராசிரியர், பல ஆண்டுகளாக நன்கு அறிமுகமானவர் பொருளதிகாரம் பின்னான்கு இயல்களுக்குப் பேராசிரியர் உரை உள்ளது. ஆதலின் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவராக - கற்றவர் நெஞ்சில் நிலையான இடத்தைப் பெற்றவராக இவர் விளங்குகின்றார் 

                       பேராசிரியர் என்ற பெயருடன் உள்ள வேறு பல ஆசிரியர்கள் : திருக்கோவையார் உரை எழுதியவர் பெயரும் பேராசிரியர். 

                                         பொதுப்பாயிரம் செய்த பேராசிரியர்,  “வடவேங்கடம் தென்குமரி என்னும் சிறப்புப் பாயிரம்் செய்தார் பனம்பாரனார்  ”வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்.” என்னும் பொதுப்பாயிரம் செய்தான் ஆத்திரையன் பேராசிரியர் எனவும் பாயிரம் செய்தான் பெயர் கூறியவாறு என்று மரபியலில்(98) கூறுகின்றார். தம் பெயரையே ஆத்திரையன் பேராசிரியன் என்று படர்க்கையாக வைத்துக் கூறார் ஆதலின் ஆத்திரையன் பேராசிரியன் என்பவர் வேறு ஒருவர். 

                              மயேச்சுரர் என்னும் பேராசிரியர் , யாப்பருங்கல விருத்தியுரையில் யாப்பு நூல் ஒன்று இயற்றிய மயேச்சுரர், பேராசிரியர் என்று குறிப்பிடுகின்றார்.  

                                 குறுந்தொகை உரை எழுதிய பேராசிரியர்,  நல்லறி வுடைய தொல் பேராசான்   கல்வியும் காட்சியும் காசினி அறிய,   பொருள் தெரி குறுந்தொகை என்று கூறுகின்றது நச்சினார்க்கினியரின் உரைச் சிறப்புப் பாயிரம் . குறுந்தொகைக்குப் பேராசிரியர் எழுதிய உரை மறைந்து விட்டது.

பேராசிரியர் நேமிநாதர். ‘தமிழர் நாவலர் சரிதையில் ஒட்டக்கூத்தர் உலாப் பாடிய போது. பேராசிரியர் நேமிநாதர் பட்டோலை பிடிக்கப்பாடியது என்ற தலைப்புடன் ஒரு செய்யுள் காணப்படுகிறது. நேமிநாதர் என்பவருக்கும் பேராசிரியர் என்ற பெயர் வழங்கியதை அறிய முடிகிறது.   

                      தொல்காப்பிய உரையாசிரியர் - பேராசிரியர்,   கடல்போல் பரந்த புலமையுடையவர். இவரது புலமைத்திறனைத் தொல்காப்பியம் பொருளதிகார உரையில் கண்டு வியக்கலாம். இவர் தம் உரைகளில் நன்னூல் , தண்டியலங்காரம் , யாப்பருங்கலம் ஆகிய நூலாசிரியர்களின் கருத்துகளை எடுத்துக்கூறி மறுக்கின்றார் எனவே இவர் 12ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்னலாம். .......................................தொடரும்...................................  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக