வெள்ளி, 25 ஜூன், 2021

தன்னேரிலாத தமிழ் – 277.

 

                                              தன்னேரிலாத தமிழ் – 277.

தொல்காப்பியம்

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று

அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.”_ 880.

இயற்சொல் தாமே செய்யுளை ஆக்குவதற்குரிய சொற்கள் நான்கு வகைப்படும். அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன.

இயற்சொல்

அவற்றுள்

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்

தம்பொருள் வழாமை இசைக்கும் சொல்லே.”-881.

நிலம், நீர், காற்று, அன்பு, அறிவு, பண்பு போன்ற தமிழ் கூறும் நல்லுலகத்து வழங்கும் சொற்கள் அனைத்தும் இயற்சொற்கள் எனப்பெறும். கேட்டோர்க்குப் பொருள் வழுவாமல் தெரிய வேண்டும்.

திரிசொல்

ஒருபொருள் குறித்த வேறுசொல்லாகியும்

வேறு பொருள் குறித்த ஒரு சொல்லாகியும்

இருபாற்று என்ப திரிசொல் கிளவி.” – 882

அடுக்கல், பிறங்கல், ஓங்கல், குன்று, விண்டு, வரை போன்ற மலையைக் குறித்த பல சொற்கள்; உந்தி என்பதற்கு ஆற்றிடைக்குறை, கொப்பூழ், தேர்த்தட்டு, யாழ் உறுப்புப் போன்ற ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள். இவ்விருவகையும் திரிசொல்.

திசைச்சொல்

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி.” -883.

செந்தமிழ் நிலத்தைச் சார்ந்த தென்பாண்டி, குடம், குட்டம், அருவா, குடகர், கருநாடர் போன்ற பகுதியினர் வழங்கும் சொற்கள் திசைச்சொல். தாயைத் தள்ளை என்றல், தந்தையை அச்சன் என்றல் போன்றவை.

வடசொல்

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே.”- 884.

வடமொழி ஒலிகளை நீக்கித் தமிழ் எழுத்துக்களோடு அமைந்த சொற்கள் வடசொல்லாகும். கமலம், திலகம், அரி, அரன், பங்கயம் போன்றவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக