திங்கள், 28 ஜூன், 2021

தன்னேரிலாத த மிழ்–278.

 

தன்னேரிலாத த மிழ்–278.

மாசற விசித்த வார்புறு வள்பின்

மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை

ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்

பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்

குருதி வேட்கை உருகெழு முரசம்

மண்ணி வாரா வளவை எண்ணெய்

நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை

அறியாது ஏறிய என்னைத் தெறுவா

இருபாற் படுக்கும் நின்வாள் வாய் ஒழித்ததை

அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்

அதனொடும் அமையாது அணுக  வந்துநின்

மதனுடை முழவுத் தோள் ஓச்சி தண்ணென

வீசியோயே வியல் இடம் கமழ

இவண் இசை உடையோர்க்குஅல்லது அவணது

உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை

விளங்கக் கேட்ட மாறுகொல்

வலம்படு குருசில் நீ ஈங்கு இது செயலே.” – மோசிகீரனார், புறநானூறு :50.

சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறையைக் காண்பதற்கு வந்திருந்த மோசிகீரனார், வெற்றி முரசு வைக்கும் கட்டிலின் மேல் தன்னையறியாது கிடந்து உறங்கி விட்டார். வெற்றித் திரு வீற்றிருக்கும் கட்டிலின் மேல் வேறு பிறர் இருந்து உறங்குவது குற்றமாகும். அது செய்வோர், கொலைத் தண்டத்துக்குரியராவர். இஃது அக்கால அரசமுறை, இதனை அறியாதவர் புலவர். அவர் உறங்கியதை அறிந்த இரும்பொறை அவரைக் கொலை புரியாது, இனிதே உறங்குமாறு அவர்க்குக் கவரி கொண்டு  வீசலுற்றான். இதனால், இவன் வெற்றித் திருவும் பிறவும் புலவர் புலமை மாண்பு நோக்கத் தாழ்ந்தன எனக் கருதும் கருத்தினனாதலை நன்கறியலாம்.

இப்பாட்டின்கண், முரசு கட்டிலின்கண் அரியாது ஏறி உறங்கிக் கிடந்த தனக்கு உறக்கம் தெளியுங்காறும் சாமரை வீசிய சேரமானது பேரருளை வியந்து, மோசிகீரனார், “மென்பூஞ் முரசினுடைய சேக்கைக்கண் அறியா தேறிய என்னை, வாளால் இருபாற் படுப்பதைச் செய்யாதருளிய தொன்றே நீ தமிழ் முழுதும் நன்கறிந்த சிறப்புக்குப் போதிய சான்றாகும். அதனோடு அமையாது, என்னை அணுகவந்து, முழவுத் தோள் கொண்டு, கவரி வீசியதற்குக் காரணம் யாது கொல்லோ? இவ்வுலகத்தே இசையுடையோர்க் கல்லது உயர்நிலை உலகத்துள் உறைவிடம் இல்லை எனச்சான்றோர் கூறுதலை விளங்கக் கேட்ட கேள்விப் பயனோ நீ இங்கே இதனைச் செய்தற்குக் காரணம்எனக் கூறிப்  பாராட்டுகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக