தமிழமுது –206– தொல்தமிழர் இசை மரபு:66.
6. கலித்தொகை:- வள்ளைப் பாட்டு - தோழி கூற்று
“ மறம் கொள் இரும்புலித் தொல்முரண் தொலைத்த
முறம் செவி வாரணம் முன்குளகு அருந்தி
கறங்கு வெள் அருவி ஒலின் துஞ்சும்
பிறங்கு இருஞ்சோலை நல்மலை நாடன்
மறந்தான் மறக்க இனி எல்லா நமக்குச்
சிறந்தமை நாம் நற்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம்
கொல்யானைக் கோட்டால் வெதிர்நெல் குறுவாம் நாம்
வள்ளை அகவுவம் வா இகுளை நாம்
வள்ளை அகவுவம் வா.” : கபிலர். குறிஞ்சி: 42 : 1- 9.
வள்ளைப்பாட்டுப் பாடத் தோழி அழைக்க, தலைவி இசைதல் . தன் பழைய பகையான வீரம் படைத்த பெரிய புலியைக் கொன்ற , முறம் போலும் காதுகளைக்கொண்ட காட்டு யானை, தன் முன்னர்க் கிடந்த இலையாகிய உணவைத்தின்றது; ஒலிக்கின்ற வெள்ளிய அருவி நீரைப் பருகி, அயர்ந்து வளம் நிறைந்து விளங்கும் பெரிய சோலையிடத்தே உறங்கியது. ; அத்தகைய நல்ல மலை நாட்டை உடையவன் நம்மை மறந்து விட்டான் ; இனி அவன் மறப்பானாக.
தோழியே ஆராய்ந்து பார்க்கின் , நமக்கு அவன் உதவிய சிறந்த நிலையை மீளவும் நன்கு அறிந்தோம்; கொல்லப்பட்ட யானையின் கொம்பால், மூங்கில் நெல்லைக் குற்றுவதற்கு, அவன் செய்த கொடுமையையே வள்ளையாகப் பாடுவோம் வா... எனத் தோழி தலைவியை அழைத்தனள் ; அது கேட்ட தலைவி, ஏடி....! நீ, கூறிய வாறன்றி, அவன் திறத்தை நாம் வள்ளைப்பாட்டாகப் பாடுவோ வா என்றாள்.
தோழியும் தலைவியும் உரலில் நெல்லை இட்டு, இடித்துக்கொண்டே பாடத் தொடங்கினர்...... தொடரும் ........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக