புதன், 4 பிப்ரவரி, 2026

தமிழமுது –199– தொல்தமிழர் இசை மரபு:59. ....-இசைக் கருவிகள்.

  தமிழமுது –199– தொல்தமிழர் இசை மரபு:59.  

            4.. பதிற்றுப்பத்து -இசைக் கருவிகள். 

  “புணர்புரி நரம்பின் தீம்தொடை பழுனிய  

 வணரமை நல்யாழ் இளையர் பொறுப்ப  

 பண் அமை முழவும் பதலையும் பிறவும்  

 கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கிக்  

 காவில் தகைத்த துறைகூடு கலப்பையர்...” -பரணர், 41: 1-5.  

புணர்புரி நரம்பின் யாழ் இசை தன்னிடத்தே பொருந்திய முறுக்கிய நரம்பினை உடைய யாழ் அஃதாவது மத்தளத்தின் தாளத்தோடு பொருந்திய முறுக்கின நரம்பினை உடைய யாழ். வணர் அமை யாழ் - யாழ் கோடு வளைந்திருத்தலின் வணர் அமை யாழ் என்றார்.  பழுநிய யாழ் - பண் முர்றுப்பெற்ற  யாழ். முழவு மத்தளம் , பண் அமை முழவு - யாழ் இசையோடு இயைந்த முழவாதலின் பண் அமை முழவு என்றார். பதலை - ஒரு கண் மாக்கிணை - ஒரு பக்கத்தில் மாத்திரம் அடித்தற்குரிய ஒரு வகைப் பறை.  தூம்பு, - வங்கியம் - கண் அறுத்து இயற்றிய தூம்பு - மூங்கிலின் கணுக்களை அறுத்துச் செய்யப்பட்ட நெடுந் தூம்பை பெரு வங்கியம் இசைக்கருவி. 

 

கலப்பையர் -  காவடியில் கட்டிய முடிச்சு ; கூத்தர்கள் ஆடல் துறைக்குரிய கருவிகளை யாழ், முழவு முதலிய பல்லியங்களை ( வாத்தியங்கள்) வைத்துக் கட்டப்பட்ட தூக்கு. கலம் -கருவி ; கருவிகளைக் காவடியில் சுமந்து செல்லும் பை உடையோர் கலப்பையர்.  

துறை : காட்சி வாழ்த்து  

 வண்ணம் : ஒழுகு வண்ணம்.  

 தூக்கு : செந்தூக்கு. 

பெயர்: சுடர் வீ வேங்கை. 

 

பாலைப்பண் : 

 “தீம்தொடை நரம்பின் பாலை வல்லோன்  

 பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்ந்தாங்கு  

 சேறுசெய் மாரியின் அளிக்கும் நின்  

 சாறுபடு திருவின் நனை மகிழானே.” - கபிலர், 65 : 14 –17.   

இனிய நரம்புகளை உடைய பாலை யாழை இசைப்பதில் வல்லோன். பண்கள் எல்லாவற்றுள்ளும் துன்பத்தைச் செய்யும் உறுப்பையுடைய பாலைப் பண்களை மாறி மாறி இசைத்தாற்போலச் சேற்றைச் செய்கின்ற மழையைப்போல அளீக்கும் விழாவின் செல்வத்தைப் போன்ற மதுவால் மகிழ்ச்சியை உடைய ஓலக்க இருப்பின் கண்ணே.சேரன் வீற்றிருக்கும் சிறப்பினைக் கூறியது..  

துறை: பரிசில் துறைப் பாடாண் பாட்டு.  

 வண்ணம்: ஒழுகு வண்ணம் . 

 தூக்கு: செந்தூக்கு.  

...................................தொடரும்........................................... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக