தமிழமுது –223– தொல்தமிழர் இசை மரபு:823.
பத்துப்பாட்டு: பொருநராற்றுப்படை. கரிகால்பெருவளத்தான் மீது பாடப்பெற்றது. பாடியவர் -முடத்தாமக்கண்ணியார்.
பாலை யாழை மீட்டிப் பாடுதல் :
“ ஆய்தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள்விசித் தொடையல்
மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன
அணங்கு மெய்ந்நின்ற அமைவரு காட்சி
ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்
சீருடை நன்மொழி நீரொடு சிதறி....” -16 – 24.
தினை அரிசியின் குத்தல் அரிசியை ஒத்து, நரம்புகளுக்கு ஆகா என விலக்கப்பட்ட குற்றங்களிலிருந்து நீங்கிய நரம்புகள் அந்த வார்க்கட்டுக்களொடு பத்தலிடை தொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உறுப்பு நலன்களெல்லாம் குறைவற அமையப்பெற்ற யாழ், மணமகளை ஒப்பனை செய்தால் ஒத்த அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. பாலை நில வழியே செல்பவரை அலைத்துப் பொருள் பறிக்கும் கொடுமையான ஆறலை கள்வர் கூட, தம் கைகளில் உள்ள கொடிய படைக்கலங்களை போட்டுவிட்டு அடங்கி நிற்கும்படியான பண்பு நிறைந்தது பாலை யாழ்.அவ்யாஅழினை நரம்புகள் கூடுமாறு தழுவியும் உருவியும் ஒன்றைவிட்டு ஒன்றைத் தெறித்தும் சீர்களையுடைய பண்ணை நீர்மையோடு பரப்பி ..... பாடுகின்றாள் பாடினி.
“ஆறலை கள்வர் படைவிட அருளின் பாலை.” என்னும் இரண்டு அடியால் இசைப்பயனை நுண்மையாக எடுத்துரைத்துள்ளார் புலவர்.
( பத்தல் - யாழின்கண் குடம் போன்று அமைந்த ஓர் உறுப்பு. கவடு - பிளவு ; விசியுறு - இழுத்துக் கட்டுதலுடைய. ; அவையல் - குத்துதல். ; வேய்வை - குற்றம். ; நீள் விசித் தொடையல் - நீண்ட வாய் இழுத்துக் கட்டப்பட்ட நரம்பினது தொடர்ச்சி. ; மண்ணுதல் - ஈண்டு ஒப்பனை செய்தல். ; மருவின் பாலை - கேட்குந்தோறும் பயிலுந்தோறும் இனிமை மிகுதற்கு இயைந்த பாலையாழ்.)
......................தொடரும்.......................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக