தமிழமுது –208– தொல்தமிழர் இசை மரபு:68.
6. கலித்தொகை:- வள்ளைப் பாட்டு - தொடர்ச்சி.
தோழிஇயற்பழித்தல்:
“வரைமிசை மேல் தொடுத்த நெய்க்கண் ஒறாஅல்
மழை நுழை திங்கள் போல் தோன்றும் - இழை நெகிழ
எவ்வம் உறீஇயினான் குன்று.”
நாம் அணிந்த அணிகள் நெகிழும்படி நம்மை வருந்தச் செய்தனன் ; அவன் குன்றாயிருந்தும் பக்க மலைகளில் மேலே கட்டியுள்ள தேன் இறால் மேகத்திடையே நுழைகின்ற மதியைப்போலத் தோன்றுகிறது , இதற்குக் காரணம் என்ன..? எனத் தோழி இயற்பழித்தனள்.
தலைவி இயற்பட மொழிதல்:
“எஞ்சாது எல்லா ! கொடுமை நுவலாது
அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன் என்
நெஞ்சம் பிணிக் கொண்டவன்.”
“ என்று யாம் பாட, மறைநின்று கேட்டனன்
தாழிருங் கூந்தல் என் தோழியைக் கை கவியா
சாயல்இன் மார்பன் சிறுபறம்் சார்தர
ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்தது என்
ஆயிழை மேனிப் பசப்பு.” 42: 22 – 32.
ஏடி...! ஒழியாமல் அவன் கொடுமை பற்றிக் கூறாதே ; என் நெஞ்சைத் தன்பால் பிணித்துக் கொண்டவன் ; பிறர் அஞ்சும்் கொடுந்தொழிற்கு அஞ்சாத அறன் இல்லாதவன் அல்லன் ; எனத் தலைவி இயற்பட மொழிந்தாள். என்று இவ்வாறு யாம்பாடுவதை மறைந்து நின்று கேட்டனன் ; மெய்மையால் இனிய சாயலை உடையவன் ; தாழ்ந்த கரிய கூந்தலை உடைய என் தோழியை எனக்கு அவள் வரவு கூறாமல், கையைக் கவித்து என் சிறுபுறத்தே சேர்ந்தனன். என் மேனியிற் பசப்பு ஞாயிற்றின் முன் இருள் போல் கெட்டு மறைந்தது. யாம் இவ்வாறு பாடவும் அவன் சிறுபுறஞ் சாராமையின் மேனியிற் பசப்பு மாயாமல் நின்றது எனப் பிரிந்தவழிக் கலங்கினாள் தலைவி.
................................................... தொடரும்................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக