வியாழன், 12 பிப்ரவரி, 2026

தமிழமுது –207– தொல்தமிழர் இசை மரபு:67. .... வள்ளைப் பாட்டு - தொடர்ச்சி.

 தமிழமுது –207– தொல்தமிழர் இசை மரபு:67.  

6.  கலித்தொகை:- வள்ளைப் பாட்டு - தொடர்ச்சி.  

                 தோழிஇயற்பழித்தல்:  

( தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறும் அகத்துறை.) 

 “காணிய வா - வாழி, தோழி வரைத் தாழ்பு  

 வாள்நிலம் கொண்ட அருவித்தே நம் அருளா  

 நாணிலி நாட்டு மலை.”  

        தோழி...!  வாழிய, நம்மை அருளாது கொடுமை செய்தான் ; நாணமின்றியும் இருந்தனன் ; அவனது நாட்டின் மலையாய் இருந்தும் பக்க மலையிலே தாழ்ந்து ஒள்ளிய நிறம் கொண்ட அருவியைக் கொண்டுள்ளதே. இதன் காரணத்தை நாம் மனத்தான் ஆராய்வதற்கு வா.... எனத் தோழி இயற்பழித்தனள்.  

தலைவி இயற்பட மொழிதல்:  

 (தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்து கூறும் அகத்துறை.)   

 “ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ  

 ஓர்வு உற்று ஒருதிறம் ஒல்காத நேர்கோல்  

 அறம்புரி நெஞ்சத்தவன்.”  

  ஒரு பக்கம் சாயாத நேர்மையினை உடையது துலாக்கோல் ; அது போல அவனும் ஆராய்ந்து அறத்தையே விரும்பும் நெஞ்சத்தை உடையவன் ; தன்னான் நுகரப்பட்டார் நெஞ்சம் அழியுமாறு விடுவேனா..? விடமாட்டான் காண் , எனத் தலைவி இயற்பட மொழிந்தாள்.  

                தோழி:   

“ தண்நறுங் கோங்கம் மலர்ந்த வடயெல்லாம்   

பொன் அணி யானை போல் தோன்றுமே - நம் அருளாக்  

 கொன்னாளன் நாட்டு மலை.”  

 நம்மை அருளி, இல்லறப்பயனை நுகராமல் , பயனில்லா வாழ்க்கையை நடத்துபவன் மலியாய் இருந்தும் , தண்ணிய மணமுடைய கோங்கு மலர்ந்து, பக்க மலையெல்லாம் பொன்னால் ஆன ஆரம் அணிந்த யானைகள் போலச் சிறந்து தோன்றின ; இதற்குக் காரணம் என்ன..? எனத் தோழி இயற்பழித்தாள்.  

 

தலைவி:  

“ கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ - தன்மலை  

 நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்குத்   

தேர் ஈனும் வண் கையவன்,”--10 –21.   

தன் கொடையை விரும்பி வந்தோர்க்குத் தேரைக் கொடுக்கும் வண்மை கொண்ட கைகளை உடையவன் ; தன் மலை நீரினும் மென்மை உடைய உள்ளத்தான் ; நம்மை மணந்து கொள்ளாமல் இருப்பானோ..? நம்மைக் காம நோயால் வருந்த விடுவானோ..? விடான்...; வரைவன் எனத் தலைவி இயற்பட மொழிந்தாள்.  

...................பாடல் தொடரும்............................................. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக