தமிழமுது –197– தொல்தமிழர் இசை மரபு:57.
4.. பதிற்றுப்பத்து - முன்னுரை.
தமிழ் மொழியின் தொன்மையையும் தோன்றிய காலத்தையும் வரையறை செய்வது என்பது இயலாததொன்றூ. மனித வரலாறு காலத்தால் நீண்டு செல்வதைப்போலவே மொழியின் வரலாறும் நீண்டு செல்கிறது. சில மொழிகளில் உரைநடைத் தோற்றத்தையும் வரலாற்றையும் வரையறை செய்வதும் இயலாததொன்றாக உள்ளது. மொழியின் கூறுகளுள் பாட்டும் உரையும் முதன்மையானவை. தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான நூல்களுள் முதன்மையானதாகிய தொல்காப்பியம் செய்யுள்ளைப் பற்றியும் உரைநடையினைப் பற்றியும் சுட்டிச்செல்வது இங்கு உளங்கொள்ளத்தக்கது. எனவே பாட்டும் உரையும் மிகப்பழங்காலந்தொட்டே தமிழில் வழங்கிவருகின்றன என்பது வெள்ளிடைமலை.
பதிற்றுப்பத்து:
இந்நூல் புறநானூற்றினைப் போன்று புறப்பொருள் பற்றிய நூலாகும். சேர, சோழ, பாண்டிய மன்னராம் மூவேந்தர்களைப் பற்றிப் புற நானூறு குறிப்பிடினும் நூல் முழுதும் சேர மன்னர்களின் வரலாற்றுச் செய்தியைக் காலவொழுங்கின்படி விரித்துப் பேசும் நூல் பதிற்றுப்பத்து ஆகும். சங்க காலச் சேர மன்னர்கள் செங்கோன்மை , கொடைத்திறம், படைப்பெருமை, வீர மிகுதி முதலியவற்றை மட்டுமன்றிச் சங்ககாலச் சேர மக்களின் வாழ்க்கைமுறையையும் ஆடல் மற்றும் இசைக்கலைஞர்களாகிய கூத்தர்,பாணர் பொருநர், விறலி முதலியவ்ர் பற்றிய செய்திகளையும் கூறுவதால் சங்கத்தமிழ் மக்கள் மக்கள் பற்றிய சிறந்த நூலாக இந்நூல் விளங்குகிறது. சேர மன்னர்கள் பற்றிய அரசியல் செய்திகளும் குறிப்பாகத் தம் குடிமக்கள் மீது கண்ணோட்டமும், தம் பகைவர் மாட்டுக் கண்ணோட்டமில்லாது பொருத சினமும் வெற்றிக்களிப்பும் மிகவும் சிறப்பித்துச் சுட்டப்பெறுகின்றன.
சங்கத் தொகைநூல் வரிசையில் இந்நூல் நான்காவதாக அமைந்துள்ளது. இந்நூல் பத்துச் சேர மன்னர்களைக் குறித்து ஒவ்வொரு மன்னருக்கும் பத்துப் பாடல்களாகப் பத்துப் புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற நூறு செய்யுள்கள் அடங்கிய நூலாதலின் ‘பதிற்றுப்பத்து’ என்னும் பெயர் பெற்றது. இவற்றுள் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை. தமிழுலகுக்குக் கிடைத்திருப்பவை இரண்டாம் பத்து முதல் ஒன்பதாம் பத்து முடியவுள்ள எட்டுப்பத்துக்களே.
இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பனவற்றைப் புலப்பதுத்தும் குறிப்புகள் உள்ளன. அவ்வப்பாடலின் சிறந்ததொரு தொடரே பாட்டின் பெயராக அமைந்துள்ளது. இந்நூலின் நான்காம் பத்து அந்தாதியாக அமைந்துள்ளது ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் அப்பத்தினைப் பாடினோர் அதன் பாட்டுடைத்தலைவர், அவர் செய்த அருஞ்செயல்கள் பாடிய புலவருக்கு அவர் அளித்த பரிசில் முதலிய செய்திகளைக் குறிப்பிடும் பதிகம் உள்ளது. இப்பதிகங்கள் ஆசிரியப்பாவில் தொடங்கிக் கட்டுரையாக முடிவு பெறுகின்றன.இவை சாசனங்களில் காணப்பெறும் மெய்க்கீர்த்திகளைப் போன்ற அமைப்பு உடையன .
பதிற்றுப்பத்து : இரண்டாம் பத்து ......தொடரும்......................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக