தமிழமுது –214– தொல்தமிழர் இசை மரபு:74 .
7. அகநானூறு : கோடியர் -- இன்ப வாழ்வினர்.
“பாடுஇன் தெண்கிணை கறங்க காண்வர
குவி இணர் எருக்கின் ததர் பூங்கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப மகடூஉ
முளரித் தீயின் முழங்குஅழல் விளக்கத்துக்
களரி ஆவிரைக் கிளர்பூங் கோதை
வண்ண மாரிபின் வனமுலைத் துயல்வர
செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப
கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மான சீர் அமைத்து
சில் அரி கறங்கும் சி்றுபல் இயத்தொடு
பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென
தலைப் புணர்த்து அசைத்த பல்தொகைக் கலப்பையர்
இரும்பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன்தலை மன்றம் காணின் வழிநாள்
அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்.”
- அதியன் விண்ணத்தனார்,301 : 10 – 25.
இனிய ஓசையினையுடைய கிணைப்பறை ஒலிக்க, காண்பார்க்குக்் காட்சி இன்பம் உண்டாகுமாறு குவிந்த கொத்துக்களையுடைய எருக்கினது நெருங்கிய மலர்களால் ஆகிய கண்ணி, கூத்தருள் ஆடவர் தலையை அழகு செய்யும் ; காட்டுத்தீயின் அழல் ஒளியில் தொடுக்கப்பட்ட ஆவிரைச் செடியின் மலர்களால் ஆன மாலை அவர்தம் மங்கையரின் மார்பகத்தின் அழகு முலைகளில் கிடந்து அசையும் .
நெருங்கிய நடையினை உடைய பெண் யானையின் உயிர்ப்பு ஒலியுடன் ஆண் யானையின் உயிர்ப்பொலி சேர்ந்து ஒலித்தது போன்று சிறு வங்கியம், பெரு வங்கியம் இவற்றின் ஒலியுடன் முழவின் ஓசையும் சேர்ந்து ஒலிக்கும் ; கரிய மேகம் முழங்கும் போது நீரின்கண் ஒலிக்கும் தேரையின் ஒலியைப் போன்று தாளம் அமைத்து, அரித்தெழுகின்ற ஓசையை உடைய பல இசைக்கருவிகளோடு பல ஊர்களிலும் சென்று கூத்தாடுவர். கூத்தாட்டம் முடிந்தவுடன் பையினுள் விரைவாகப் பல இசைக்கருவிகளையும் உள்ளிட்டு அதன் தலையினைச் சேர்த்துக் கட்டுவர் ; பின்னர் தம் பெரிய சுற்றத்தோடு கூத்தாடிய இடத்திலிருந்து புறப்பட்டுப் போவர்.; அவர்கள் சென்றபின் பொலிவிழந்து காணப்படும் கூத்தாட்டு அரங்கினை மறுநாள் சென்று பார்க்கும்போது அக்காட்சி ஆரவாரமுடைய பழைய அவ்வூரில் வாழும் அம்மக்களுக்குப் பெருந்துன்பம் தருவதாகும்.
(வீட்டி - போக்கி ; கறங்குதல் - ஒலித்தல். ; காண்வர - காட்சி உண்டாக. ; அழகு பெற. ; ததர் - நெருங்கிய ; ஆடூஉ - ஆடவர். ; மகடூஉ - பெண்டிர். ; முளரித் தீ - காட்டுத்தீ ; துயல் வர - அசைய. ; பல்லியம் - பலவகையான இசைக்கருவிகள். ; ஒல்லென - விரைவாக. ; தலைப் புணர்த்தல் - தலையினைச் சேர்த்துக் கட்டுதல் ; பையர் - பை உடையவர் ; வழிநாள் - மறுநாள் ; அழுங்கல் - ஆரவாரம். ; மருவினம் - அடைந்தோம் ; கிணை - உடுக்கை / தடாரிப்பறை.; தூம்பு - வங்கியம் மூங்கிலால் ஆனது ; தெவுட்டும் - ஒலிக்கும். ; கோடியர் - கூத்தாடு்வோர் .) ................................தொடரும்.............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக