தமிழமுது –209– தொல்தமிழர் இசை மரபு:69.
6. கலித்தொகை:- கபிலர், குறிஞ்சிக்கலி: 64.
தலைவன் உயர் மொழிக்குத் தலைவி உறழ்ந்து கூறியது :
தலைவன் கூற்று:
”அணிமுகம் மதிஏய்ப்ப அம்மதியை நனி ஏய்க்கும்
மணிமுகம் மாமழை நின்பின் ஒப்ப பின்னின்கண்
வரி நுண்நூல் சுற்றிய ஈரிதழ் அலரி
அரவுக்கண் அணிஉறழ் ஆரல்மீன் தகை ஒப்ப
அரும்படர் கண்டாரைச் செய்து ஆங்கு இயலும்
விரிந்துஒலி கூந்தலாய் கண்டை எமக்குப்
பெரும்பொன் படுகுவை யாம்.”- 1-7.
நினது அழகிய முகம் மதியை ஒத்துள்ளது ; மணிகள் விளங்கும் நின் பின்னின கூந்தல், அம்முகத்துக்கு ஒப்பாகிய மிகவும் பொருந்தும் கருமையுடைய மழையை ஒத்திருந்தது; அப்பின்னின கூந்தலிடத்தே நீ சூடியிருக்கும் பூவோ நுண்ணிய நூலால் கட்டப்பட்டு,
தேனால் ஈரமான இதழைக் கொண்டிருந்தது ; கரும் பாம்பிடத்தே கிடந்து அதன் கரிய நிறத்தோடு மாறுபடுகின்ற ஆரல் மீனினது அழகை ஒப்ப, பின்னிய கூந்தலிலே கட்டிய பூ திகழ்ந்தது ; கண்டவர்க்கு அரிய வருத்தத்தைச் செய்து போகின்ற பரந்து தழைத்த கூந்தலை உடையாய் ..! என்னை எள்ளும் நிலைமையை நீ கைவிட்டு யான் கூறுகின்றதனை ஆராய்ந்து பார் ; எமக்குப் பழங்காலத்தே புதைக்கப்பட்டுக் கிடைத்த பெரும் பொன் புதையலைப் போன்றவள் நீ... என்று உயர்மொழி கூறினான்.
தலைவி எள்ளி நகை யாடினாள்:
“’ஏஎ,, எல்லா ....! மொழிவது கண்டை இஃது ஒத்தன் தொய்யல்
எழுதி இறுத்த பெரும் பொன் படுகம்
உழுவது உடையமோ யாம்.” 8 –10.
ஏஎ, ஏடா, இவன் ஒருத்தன் தன்னால் பொலிவிவு பெற்றேம் எனக் கூறுகின்ற கூற்றப்பார் ; என்று நெஞ்சொடு கூறி...!
நீ என் தோள் மேல் தொய்யல் எழுதிக் கனவு போல ஓரொருகால் தங்கின பெருஞ்செல்வம் தான் இதுவரைப் பெற்றோம் ; அதுவன்றி,எம் முலையால் நின் மார்பிடத்து இடைவிடாது உழுத நல்வினையை உடையேமோ யாம்..? அப்படி இல்லையே..!
அருமை செய்து விரும்பிய தலைவன் வந்த இடத்து , தலைவி எள்ளி நகையாடினாள் . தலைவன் அவளோடு மாறுபட்டுக் கூறி நகையாடி., கூட்டத்திற்கு உடன்பட வைத்தனன். தலைவன் உயர் மொழிக்குத் தலைவி உறழ்ந்து கூறியது என்பதனுள் அடங்கும்.
......................................தொடரும்....................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக