தமிழமுது –296 – தொல்தமிழர் இசை மரபு:156 - நீட்சியும் -
வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - 17, 18, 19 ஆம் நூற்றாண்டுகளில்...! தாயுமானவர்:
பராபரமே எனப்பாடி தனித்த ஒருகடவுளைக் குறிக்காது பொதுத்தன்மையுடன் இறைத்தன்மையை வெளிப்படுத்திய ஞானி தாயுமானவர் ஆவார்.
”எவ்வுயிரும் தன்னுயிர்போல் இரங்கவும் நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராமரமே.”
என்ற அடிகளில் எவ்வுயிரும் தன்னுயிர்போல் இரக்கம் கொள்ள மனம் தர வேண்டிய நல் உள்ளத்தவர் தாயுமானவர். எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பது அவரின் ஞான உள்ளம்.
“எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்றும் அறியேன் பராபரமே.”
என்ற பொதுமை நோக்குள் எதிரி, நண்பன், புண்ணியன், பாவி எனும் பாகுபாடும் அழிந்துபோய் அனைத்துயிரையும் இன்பம் நோக்கிப் பயணிக்கச் செய்கின்ற பொதுச் சமயப் பார்வை ஏற்றம் பெறுகிறது. இதன் மூலம் தமிழின் பக்திப் பொதுமைக்கு உரமூட்டுகிறார். அனைவரையும் தாங்கும் தாயுள்ளம் கொண்ட நல்லவர் இவர் என்பதால் இவரின் பெயர் தாயுமானவர் என்று காரணம் குறித்த பெயராகி விடுகின்றது.
எங்கிருந்து எதனைக் கண்டாலும் அது ஆண்டவன் சன்னதியாவே அவரின் பொதுப்பார்வைக்குப்பட்டுள்ளது.
“என்னதுயான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும்
சன்னதியாம் நீ பெரிய சாமி பராபரமே.”
இந்த அடிகளின்் வழியாக எம்மதத்தாரும் எப்பிரிவினரும் ஏற்றிப் போற்றும் ஒருமை தெய்வத்தின் சன்னிதானத்தைத் தேடாது கண்டுணர்ந்து கொள்ளமுடிகின்றது. பல நெறி நின்றொழுகும் உலகம் ஒருநாள் எல்லாம் தேய்ந்து ஒருமை நெறிக்கு வந்துவிடும் என்பது தாயுமானவரின் நம்பிக்கை.
தேகத்தின் நிலையாமையைச் சுட்டிக்காட்டி மனித உயிர்களை “சேர வாரும் செகத்தீரே’ அவர் ஒருங்கழைத்துக் முழக்கம் செய்கின்றார். “
“காகம் உறவு கலந்துண்ணக்
கண்டீர் அகண்டாகார சிவ
போகம் எனும் பேரின்ப வெள்ளம்
பொங்கித் ததும்பிப் பூரணமாய்
ஏகவுருவாய்க் கிடக்குதையோ
இன்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச்
சேரவாரும் செகத்தீரே.”- (555)
காகம் உறவுகலந்து உண்ணுதலைப்போல அருளுணவைப் புசிக்க கைதட்டி அழைக்கிறது இப்பாடல். மேலும் போகம் ஏகவுருவாய், இறையாய் இருக்கும் ஒருமையை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
பிறப்பு வந்தது ஏன்? இறப்பு வருவது ஏண்...? என்ற விடை காணமுடியாத வினாவிற்குத் தாயுமானவர் விடை பகிர்கின்றார்.
“இறப்பும் பிறப்பும் பொருந்த எனக்கு
எவ்வணம் வந்ததென்று எண்ணியான் பார்க்கில்
மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச
மாயா மனத்தால் வளர்ந்த்து தோழீ”
-என்ற விடையில் மனம் நிம்மதி பெறுகின்றது.
ஞானப் பெருவெளிக்குத் தாயுமானவரின் தனிப்பங்கு இடையிழையில் அறுந்து விடாமல் நூற்றதுவே. அந்த இழையின் பின்னணியில் பாரதியாரும் வள்ளலாரும் பற்றும் பிறரும் இன்னும் வருவோரும் இருப்பர். இருந்துகொண்டே இருப்பர் ஒன்றே நன்றாய் அதுவே நாமாய் நடக்கும்வரை இந்த ஞானப் பெருந்தமிழுக்கு வழி வளர்ந்துகொண்டே இருக்கும்.-----கயிலைமணி அ. வேதரத்னம்.
- ....................................தொடரும்...............................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக