தமிழமுது –280– தொல்தமிழர் இசை மரபு:140. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி:
பண்சுமந்த பாடல்கள்.காரைக்காலம்மையார்:
காரைக்காலம்மையார் பாடிய திருப்பாடல்கள் சைவ இலக்கியங்களில் சிறப்பிடம் பெற்றவையாகும். பண்ணோடு இயைந்த பாடல்கள் பாடிய முதல் பெண்ணரசி என்ற பெருமைக்குரியவர். இவர்தம் பதிகத்தைப் பின்பற்றியனவாகத் திருஞானசம்பந்தரின் பதிகங்கள் அமைந்திருப்பது எண்ணத்தக்கது. திருக்கடைக்காப்பு என்னும் புதிய தமிழ் யாப்பு மரபின் தாய் காரைக்காலம்மையாரவார்.
கூத்தரும் பாணரும் விறலியருமாக வளர்த்த இசை - நாடகத் தமிழ் ஆகியவை இருண்ட காலத்தில் அழிவின் விளிம்பிற்குச் சென்றன. பக்தி இயக்க முன்னோடியான காரைக்காலம்மையார் கூத்தப் பெருமான் சிறப்பை அற்புதமாகப் பாடியவர். அம்மையார் இசையைச் சமய நெறியோடு இணைத்துவிட்ட சிறப்புக்குரியவர். பண்ணார் இந்தமிழைப் பாடித் தமிழர்தம் அருளியலைத் தழைக்கச் செய்தவர். குழல், யாழ், தாளம் வீணை, கொக்கரி, சச்சை, குடமுழா, கரடிகை, துந்துமி, துடி முதலிய இசைக்கருவிகளை அம்மையார் குறிப்பிடுகின்றார்.
“நீரும் நிலனும் தீயும் வளியும்
மாகவிசும்போடு ஐந்துடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவன் ஆக.”
என்று மதுரைக்காஞ்சி சிவபெருமான் இயல்பினைக்கூறும். ஐம்பெரும் பூதங்களாலான உலகினைப் படைத்த முழுமுதற் கடவுளான சிவத்தின் இத்தன்மையைக் காரைக்காலம்மையார் ,
“ இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டு இறக்கஞ் செய்வான்.”
என்று அற்புதத் திருவந்தாதியில் காட்டுகின்றார்.
.........................தொடரும்................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக