தமிழமுது –287– தொல்தமிழர் இசை மரபு:147 நீட்சியும் - வீழ்ச்சியும்.எழுச்சியும் : ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - மறுமலர்ச்சி - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்:
ஆழ்வார்கள் அருளிய பண்ணிசைப் பாடல்கள் :
முப்பது பண்களில் முகிழ்த்த இசைத்தமிழ்.
தமிழ் இயல், இசை, கூத்து என மூன்றாகப் பகுத்து ஆராயப்படும். ஆழ்வார்களின் பாசுரங்களில் சிலவற்றைத் தவிர எஞ்சியன யாவும் தூய தமிழ் இசை வடிவங்களாகும்.
பண்டைப் பண் அடைவுகளைப் பெற்ற பாமாலைகள் என்பதை ஆழ்வார்களும் தம் பாசுரங்களில் ஆங்காங்கே குறித்துச் சென்றுள்ளனர். தமிழ் இலக்கியவரலாற்றை எழிதிய அறிஞர் மு. அருணாசலம் அவர்கள் “சைவத் திருமுறைகளில் இடம் பெற்றிருக்கும் பண்டைய பண்களினும் கூடுதலாக ஆழ்வார்கள் பாசுரங்களில் பண்கள் மிகுந்து காணப்படுகின்றன்.” என்று குறிக்கிறார்.
தேவார மூவர் கையாண்ட பண்கள் 23 மட்டுமே. பிரபந்தத்தில் ஆழ்வார்கள் 30 பண்களைக் கையாண்டுள்ளனர். நமது தவக் குறை, முன்னோர் இப்பாசுரங்களுக்குப் பண் அமைக்காது விடுத்தனர்.அதன் காரணம் நன்கு புலப்படவில்லை. ஒரு வேளை, தமிழ் வேதம் என்றும் வேததத்துக்கெல்லாம் வித்து என்றும் கூறப்பட்ட ஆழ்வார்களின் பாசுரங்களை வேத விற்பன்னர்கள் வேதத்தை ஓதும் அதே ஓசையால் நாலாயிரத்தையும் ஓதுதலே சிறப்பென்று கருதிப் பண் அடைவு வகுப்பதில் நாட்டம் இல்லாதிருந்திருக்கலாம். காரணம் யாதாயினும் நாம் கவலைகொள்ள வேண்டுவதின்று.
இவை சங்க காலத்தில் நிலவியிருந்து களப்பிரர் காலத்தில் சிதைந்து போன 103 தமிழ்ப் பண்களில் 30 பண்களுக்குப் புத்துயிர் தந்தவர்கள் ஆழ்வாராதிகளே என்பதில் ஐயமில்லை. தற்போது கூட இசை அறிஞர்களின் உதவியோடு, நாலாயிரப் பனுவல்களுக்கு நாம் பண் அடைவுகளை அமைக்கலாம். சென்னைத் தமிழ் இசைச் சங்கம் போன்றவை இம்முயற்சியை மேற்கொள்ளலாம்.
திருமாலை அன்றி வேறு ஒரு தெய்வத்தைத் தொழாத ஒரு தெய்வக் கோட்பாட்டில் தலை நின்றவர்கள் வைணவர்கள். வைணவ சம்பிரதாயத்தில் ஆழ்வார்களை அடியொற்றி, அவர்கள் அருளிச் செயல்களின் மீதுகொண்ட ஆராக் காதல் வைணவத்தில் ஆசாரிய பரம்பரை தோற்றம் கொண்டது. ஆசாரியர்களை ஆழ்வார்களுக்கு நிகராகவும், ஆழ்வார்களை ஆண்டவனுக்கு நிகராகவும் சில நேரங்களில் மேலாகவும் வைத்து வழிபட்டு வணங்கும் பாவனை , வைணவத்தின் தனித்தன்மைகளுள் குறிக்கத்தக்க ஒன்றாகும்.--டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்.)
.....................தொடரும் ...............................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக