சனி, 26 செப்டம்பர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -24. உவா நாள் பரதவர் வழிபாடு:

 தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -24. 

  முனைவர் இரெ. குமரன்: 

தொல்தமிழர் - வழிபாடு : உவா நாள் பரதவர் வழிபாடு: 

                       கடியலூர் உருத்திரங்கண்ணனார் -பட்டினப்பாலை. 

வீழ்த்தாழைத் தான் தாழ்ந்த     

வெண் கூதாளத்துத் தண் பூங்கோதையர்   

  சினைச் சுறவின் கோடு நட்டு   

மனைச் சேர்த்திய வல் அணங்கினான்   

மடல் தாழை மலர் மலைந்தும்  

பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்   

புன் தலை இரும் பரதவர்    

பைந்தழை மா மகளிரொடு   

பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது     

உவவு மடிந்து உண்டு ஆடியும்....” 84 – 93.  

                         விழுது பொருந்திய  தாழையின் அடியிலே கீழே மலர்ந்திருக்கின்ற வெண் கூதாள மலரின் குளிர்ந்த பூமாலை அணிந்தவர்கள், சினை பொருந்திய சுறா மீனின் கொம்பை நட்டு, அந்தச் 

                    சுறாக்கொம்பை மனையாக ஆக்கி அதிலே சேர்க்கப்பட்ட, வலிய தெய்வத்தைப்  பொருத்தி வழிபடுவர்.  

               மடலையுடைய தாழை மலரைச் சூடியும் கரடு முரடாக இருக்கின்ற பனைமரத்தின் கள்ளை அருந்தியும் சிவந்த தலை மயிரையுடைய கூட்டமான செம்படவர்கள், பசுமையான தழைகளை அணிந்து, அழகிய பெண்களுடன் கூடியிருந்து பரந்த பெரிய குளிர்ந்த கடலின் மேல் மீன் பிடிக்கப் போகாமல் முழுமதி நாளிலே தங்கியிருந்து உண்டும் விளையாடியும் பொழுது போக்குவர்.  

(பரதவர் சுறா மீன்களால் தங்களுக்கு எவ்வகை இடையூறும் நேராமல் அத் தெயவம் காக்கும் என நம்பினர். உவவு நாள் - மதி நிறை நாள் ; காழ் - காம்பு.) 

 .......................................தொடரும்............................................................... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக