தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -54.
முனைவர் இரெ. குமரன்: 3.ஐங்குறுநூறு:
தொல்தமிழரின் - வழிபாடு: மலையில் குடிகொண்ட முருகன்.
”கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி
அறியா வேலன் வெறி எனக்கூறும்
அது மனம் கொள்குவை அனை இவள்
புது மலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே.
” கபிலர் குறிஞ்சி,வெறிப் பத்து, 243.
அன்னையே...! இவளுடைய புதிதாக மலர்ந்த குளிர்ச்சியை உடைய கண்கள் தனிமையுற்று வருந்துவதற்குக் காரணமான நோய்க்குரிய அடிப்படை யாதென வினவினால், உண்மை அறியும் ஆற்றல் இல்லாத வேலன் மிளகுக் கொடி வளரும் மலையில் குடிகொண்ட முருகக் கடவுளை வேண்டி வெறியாட்டு நிகழ்த்தி நின் வினாவுக்கு விடையாக முருக அணங்கு என்று கூறுவான், அதனை நீயும் உண்மை என்று ஏற்றுக்கொள்வாய். (இது தகாது என அறிக)
தலைவியின் வாட்டத்தைத் தீர்ப்பதற்கு வெறியாடல் செய்ய முயன்ற தாயின் அறியாமையை எடுத்துக்காட்டித் தோழி களவினை வெளிப்படுத்தியது.
(கறி - மிளகுக்கொடி. ; சிலம்பு - மலை. ; பேணி - வழிபட்டு. ; மழைக்கண் - குளிர்ந்த கண்கள். ; புலம்பு - தனிமை. அனை - அன்னை என்பதன் தொகுத்தல் விகாரம்.)
.............................................தொடரும்.................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக