தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -57.
முனைவர் இரெ. குமரன்: 3.ஐங்குறுநூறு:
தொல்தமிழர் - இந்திரவிழா- ஆடல், பாடல் நிகழ்த்துதல்:
”இந்திர விழாவின் பல்வேறு கூறுகளையும் மிக விரிவாக முதலில் கூறிய நூல் சிலப்பதிகாரமே ; அவ்விழாப் பற்றிய முதல் சங்க நூற் சான்று இச்செய்யுளே .
” அறிஞர் அ.தட்சிணாமூர்த்தி.
“இந்திர விழவிற் பூவின் அன்ன
புன்தலைப் பேடை வரிநிழல் அகவும்
இவ்வூர் மங்கையர்த் தொகுத்து இனி
எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின் தேரே.”
- ஓரம்போகியார், கிழத்தி கூற்றுப் பத்து : 62.
பெரும ....! தன் புல்லிய தலையில் பூப் போன்ற சூட்டினைக் கொண்ட மயிற் பேடை செறிவில்லாத புள்ளி நிழலில் இருந்து கொண்டு தன் சேவலை அன்புடன் அகவி அழைப்பதற்கு இடமானது இவ்வூர் ; இவ்வூரில் வாழும் பரத்தை மகளிர் பலரையும் இந்திரவிழாவில் ஆடல் பாடல்களை நிகழ்த்துதற்குத் தொகுப்பது போல் அவர்பால் காமம் நுகர்தற் பொருட்டுத் தொகுத்தனை ; அத்தோடு அமையாமல் மேலும் மங்கையரைத் தொகுக்க நின்னுடைய தேர் வேறு எவ்வூரிலே நிற்கின்றது உரையாய்.
( தலைவியின் இகழ்ச்சியுரை: தலைவன் கட்டுப்பாடற்ற முறையில் பரத்தையர் பலரையும் நாடி அலைந்தான் என்ற பொருளில் இங்ஙனம் வினவினாள் தலைவி . இந்திர விழாவின் போது ஊர்த்தலைவர் பரத்தையரைத் தொகுத்துக் கொணர்ந்து ஆடல், பாடல் நிகழ்த்தச் செய்த பண்டை வழக்கத்தினை இவ்வுவமை சுட்டுகிறது போலும்.)
( பூவின் அன்ன - பூப் போன்ற சூட்டு. ; பேடை - பெண் மயில். ; வரி நிழல் - செறிவற்ற புள்ளி நிழல்.)
..................................தொடரும்..................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக