செவ்வாய், 1 நவம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் - பங்குனி உத்தர விழா

வென்று எறி முரசின் விறற்போர்ச் சோழர்
இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்
வருபுனல் நெரிதரும் இருகரைப் பேரியாற்று
உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில்
தீஇல் அடுப்பின் அரங்கம் போல
பெரும் பாழ் கொண்டன்று நுதலே.......( உறையூர் முதுகூத்தனார்,அகம். 137::4-12)
உரை:- உறையூர், பகைவர்களை வென்று அடிக்கின்ற வீர முரசினையும் போர் வெற்றியையும்  இனிய கள்ளினையுடைய கரும்பு மிக்கதும் உடையது சோழரது ஊராகும்.அவ்வூரிடத்தே பெருகிவரும் நீர் உடைத்திட , இடிந்து விழும் கரைகளையுடைய காவிரிப் பேரியாற்றின் அழகிய வெண்மையான மணலையுடைய மணங் கமழுகின்ற குளிர்ச்சி பொருந்திய சோலையில் உத்தரமும் நிறைமதியும் கூடிய நன்னாளில், பங்குனி உத்தர விழா நடைபெறும்.
அவ்விழாவின் மறுநாளில் பூக்களும் சிலைகளும் நெருங்கின மரங்கள் அடர்ந்த குறுங்காட்டின் நடுவேயுள்ள நெருப்பில்லாத வெற்றுஅடுப்புகளையுடைய (திரு) அரங்கம் போல, உன்னுடைய நெற்றியானது அழகு இழந்து....
குறிப்பு:- இப்பாடலாசிரியர் காலத்துத் திருவரங்கம் ஓர் ஊராகக் கருதப்படாது அகன்ற பொழில் சூழ்ந்த ஆற்றிடைக்குறையாகக் கருதப்பட்டது (இருந்தது) எனலாம். குறுங்காடு மண்டிய அவ்வாற்றிடைக்குறையில் உறையூர் மக்கள் பங்குனி உத்தர விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடுவர்.மக்கள் ஒன்றுகூடி விடியுமளவும் விழாக்கோலம் பூணுவர், யாண்டும் அடுப்புகள் அமைத்துத் தீமூட்டி உணவு சமைத்து உண்டு களித்து இன்பம் எய்துவர், மறுநாள் மக்கள் நடமாட்டம் இன்றி, அடுப்புகளிலும் தீயின்றி அவ்வரங்கம் அழகிழந்து பொலிவற்று வறிதே வெறிச்சோடி காணப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக