புதன், 23 நவம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள்

காதல் மரம்
அகநானூறு-273, ஒளவையார்
தலை வரம்பு அறியாத் தகைவரல் வாடையொடு
முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளை
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி
ஊரோர் எடுத்த அம்பல் அஞ்சினை
ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பிப்
புலவர் புகழ்ந்த நாணில் பெருமரம்
நிலவரை எல்லாம் நிழற்றி
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே.-   (10- -17)
உரை; முடிவு எல்லை இதுவென அறியப் பெறாத தன்மையொடு வருதலையுடைய வாடைக் காற்றோடு கூடி, முலையின் கண்ணே தோன்றிய  வேட்கை நோயாகிய வளரும் இளைய முளை, தளர்ச்சியை உடைய நெஞ்சினிடத்தே வருத்தமாகிய திரண்ட அடியாய் நீண்டு, ஊரார் எழுப்பிய அம்பலாகிய அழகிய கிளைகளைக்கொண்டு, ஆராக் காதல் என்னும் தளிர்களைப் பரப்பி, புலவரால் புகழப் பெற்ற நாணம் இல்லாத பெரிய மரம் ஆகி, நிலத்தின் எல்லை எல்லாம் கவிந்து, அலர் ஆகிய மலர்களைச் சொரியவும் (தலைவர்) வாராராயினர்.
சிறப்பு:- இங்ஙனம் உருவகங்களைக் காரணகாரிய முறையால் அமைத்திருப்பது ஒளவையாரது நல்லிசைப் புலமையின் எல்லையில் பெருமைக்குச் சான்றாகுமாறு அறிக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக