செவ்வாய், 29 ஜூன், 2021

 

தன்னேரிலாத தமிழ் - 279.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு -1

...................................................

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின். – 1330.  

  

அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே!-வள்ளுவர்

ஆக்கி நமக்களித்த அரும் பொருளே!

                                                               (அறிவுக்கு)

உடலுக்கு உயிர் போலே!

உலகுக்கு ஒளிபோலே!

பயிருக்கு மழை போலே!

பைந்தமிழ் மொழியாலே!

                                                                (அறிவுக்கு)

அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே!

அனுபவத்தாலே தான் சுவைத்ததற்கப்பாலே!

அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே

அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே!

                                                                     (அறிவுக்கு)

வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது!

மனம்மொழி மெய்இனிக்க வார்த்திட்ட தேனது!

வானகம்போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது!-எம்

மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக்கண்டது!

                                        -கவிஞர் அ. மருதகாசி - படம்: அறிவாளி, 1963.

திங்கள், 28 ஜூன், 2021

தன்னேரிலாத த மிழ்–278.

 

தன்னேரிலாத த மிழ்–278.

மாசற விசித்த வார்புறு வள்பின்

மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை

ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்

பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்

குருதி வேட்கை உருகெழு முரசம்

மண்ணி வாரா வளவை எண்ணெய்

நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை

அறியாது ஏறிய என்னைத் தெறுவா

இருபாற் படுக்கும் நின்வாள் வாய் ஒழித்ததை

அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்

அதனொடும் அமையாது அணுக  வந்துநின்

மதனுடை முழவுத் தோள் ஓச்சி தண்ணென

வீசியோயே வியல் இடம் கமழ

இவண் இசை உடையோர்க்குஅல்லது அவணது

உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை

விளங்கக் கேட்ட மாறுகொல்

வலம்படு குருசில் நீ ஈங்கு இது செயலே.” – மோசிகீரனார், புறநானூறு :50.

சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறையைக் காண்பதற்கு வந்திருந்த மோசிகீரனார், வெற்றி முரசு வைக்கும் கட்டிலின் மேல் தன்னையறியாது கிடந்து உறங்கி விட்டார். வெற்றித் திரு வீற்றிருக்கும் கட்டிலின் மேல் வேறு பிறர் இருந்து உறங்குவது குற்றமாகும். அது செய்வோர், கொலைத் தண்டத்துக்குரியராவர். இஃது அக்கால அரசமுறை, இதனை அறியாதவர் புலவர். அவர் உறங்கியதை அறிந்த இரும்பொறை அவரைக் கொலை புரியாது, இனிதே உறங்குமாறு அவர்க்குக் கவரி கொண்டு  வீசலுற்றான். இதனால், இவன் வெற்றித் திருவும் பிறவும் புலவர் புலமை மாண்பு நோக்கத் தாழ்ந்தன எனக் கருதும் கருத்தினனாதலை நன்கறியலாம்.

இப்பாட்டின்கண், முரசு கட்டிலின்கண் அரியாது ஏறி உறங்கிக் கிடந்த தனக்கு உறக்கம் தெளியுங்காறும் சாமரை வீசிய சேரமானது பேரருளை வியந்து, மோசிகீரனார், “மென்பூஞ் முரசினுடைய சேக்கைக்கண் அறியா தேறிய என்னை, வாளால் இருபாற் படுப்பதைச் செய்யாதருளிய தொன்றே நீ தமிழ் முழுதும் நன்கறிந்த சிறப்புக்குப் போதிய சான்றாகும். அதனோடு அமையாது, என்னை அணுகவந்து, முழவுத் தோள் கொண்டு, கவரி வீசியதற்குக் காரணம் யாது கொல்லோ? இவ்வுலகத்தே இசையுடையோர்க் கல்லது உயர்நிலை உலகத்துள் உறைவிடம் இல்லை எனச்சான்றோர் கூறுதலை விளங்கக் கேட்ட கேள்விப் பயனோ நீ இங்கே இதனைச் செய்தற்குக் காரணம்எனக் கூறிப்  பாராட்டுகின்றார்.

வெள்ளி, 25 ஜூன், 2021

தன்னேரிலாத தமிழ் – 277.

 

                                              தன்னேரிலாத தமிழ் – 277.

தொல்காப்பியம்

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று

அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.”_ 880.

இயற்சொல் தாமே செய்யுளை ஆக்குவதற்குரிய சொற்கள் நான்கு வகைப்படும். அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்பன.

இயற்சொல்

அவற்றுள்

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்

தம்பொருள் வழாமை இசைக்கும் சொல்லே.”-881.

நிலம், நீர், காற்று, அன்பு, அறிவு, பண்பு போன்ற தமிழ் கூறும் நல்லுலகத்து வழங்கும் சொற்கள் அனைத்தும் இயற்சொற்கள் எனப்பெறும். கேட்டோர்க்குப் பொருள் வழுவாமல் தெரிய வேண்டும்.

திரிசொல்

ஒருபொருள் குறித்த வேறுசொல்லாகியும்

வேறு பொருள் குறித்த ஒரு சொல்லாகியும்

இருபாற்று என்ப திரிசொல் கிளவி.” – 882

அடுக்கல், பிறங்கல், ஓங்கல், குன்று, விண்டு, வரை போன்ற மலையைக் குறித்த பல சொற்கள்; உந்தி என்பதற்கு ஆற்றிடைக்குறை, கொப்பூழ், தேர்த்தட்டு, யாழ் உறுப்புப் போன்ற ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள். இவ்விருவகையும் திரிசொல்.

திசைச்சொல்

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி.” -883.

செந்தமிழ் நிலத்தைச் சார்ந்த தென்பாண்டி, குடம், குட்டம், அருவா, குடகர், கருநாடர் போன்ற பகுதியினர் வழங்கும் சொற்கள் திசைச்சொல். தாயைத் தள்ளை என்றல், தந்தையை அச்சன் என்றல் போன்றவை.

வடசொல்

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே.”- 884.

வடமொழி ஒலிகளை நீக்கித் தமிழ் எழுத்துக்களோடு அமைந்த சொற்கள் வடசொல்லாகும். கமலம், திலகம், அரி, அரன், பங்கயம் போன்றவை.