வெள்ளி, 29 நவம்பர், 2024

 

சான்றோர் வாய் (மைமொழி : 88 .   பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

தொல்காப்பியம் கடலளவு; ஈண்டு நாம் குறித்தது கடுகளவே. பின்வரும் பகுதிகளில் தொல்காப்பியரின் உலகளாவிய சிந்தனைகளைக் கற்றுத்தெளியலாம்.

சான்றுக்கு ஒன்று :

 “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்.” – 1169.

உலகில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் இன்ப விழைவு என்பது, தன் மனம்பொருந்திவரும் விருப்பமுடைமை ஆகும்.

 

 

 தொல்கப்பியர் வழிவந்த பேராசான் திருவள்ளுவர்

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய் தொழில் வேற்றுமை யான். .” -972. என்றார்.

உலகச் சிந்தனையாளகள் வரிசையில்  இவ்விருவரின் சிந்தனை ஆற்றலைக்  காலப் பழமையைக் கணக்கில் கொண்டு ஒப்பிட்டு உணர்க.

 

1. ”எழுத் தெனப் படுப

அகர முதல் னகர இறுவாய்

 முப்பஃது என்ப  சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.”

– என்று தமிழ் எழுத்துக்களை, இயல்புகளைத் தொகுத்து  எழுத்ததிகாரம் படைத்தார்.

2. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே ”– என்று எழுத்துக்களால் ஆன சொல் குறித்ததோடு ஓர் எழுத்தும் சொல்லாகிப் பொருள் தரும் என்று  எடுத்தியிம்பி மொழியை சொல்லதிகாரம் படைத்துக் கட்டமைத்தார்.

3.  உலக இயக்கத்திற்கு அடிப்படையாக விளங்கும்  ”முதல் எனப்படுவது நிலம்பொழுது இரண்டின்

இயல்பு எனமொழிப இயல்பு உணர்ந்தோரே.”

 என்று உலகியல் உணர்த்தி, வாழும் மக்கள் வாழிவியலை அகத்திணை, புறத்திணை எனப் பகுத்து,  மொழியால் தோன்றும் படைப்புகளின்  இலக்கிய மரபு வகுத்து,வாழ்வியலிலும் மரபு பேணப் பொருளதிகாரம் படைத்தளித்துள்ளார்.

தொல்காப்பியரின் பல்துறை சார்ந்த  சிந்தனைகளை  மேலும் காண்போம்.

 

தொல்காப்பியச் சிறப்பு:

உலகில் தோன்றியுள்ள இலக்கண நூல்கள் அனைத்தும் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் கூகின்றன. ஆனா, தொல்காப்பியம் மட்டுமே பொருள் இலக்கணத்தையும் சேர்த்துக் கூறுகிறது. பொருள் இலக்கணம் என்பது வாழ்க்கை இலக்கணம் அந்தப் பொருள் இலக்கணத்தினையும் அக இலக்கணம் என்றும் புற இலக்கணம் என்றும் இரு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டும் இலக்கணம் கூறுகின்ற சிறப்பு வேறு எந்த இலக்கண நூல்களிலும் காணமுடியாத கண்கொள்ளாக் காட்சியாகும்.

                    எழுத்து என்றால் என்ன..? அவற்றை எவ்வாறெல்லாம் தமிழ் மொழியிற் பயன்பெறுத்தப் பெறலாம் என்பவற்றை விளக்கியுரைக்கும் பகுதியே எழுத்ததிகாரமாகும்.

 

 சொல் என்றால் என்ன..? அவற்றை  எவ்வாறெல்லாம் தமிழ் மொழியிற் பயன்பெறுத்தலாம்? சொல் எவ்வாறு உருவாகின்றது? சொல்லுக்கு என்ன பொருள் என்பதனை விளக்கியுரைக்கும் பகுதியே சொல்லதிகாரமாகும்.

 எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் தெளிவாக உணர்ந்து கொண்டவன் படைக்கின்ற காவியங்களில் தமிழ்ப் பண்பாட்டைப் பேணிக் காக்கும் வகையினிற் படைத்திடுதல் வேண்டும் என்பதற்காகவே பொருளதிகாரத்தைப் படைத்தளித்தார் தொல்காப்பியர் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர், இது சரியான கருத்துமாகும்.” – புலவர் வெற்றியழகன் 

………………………தொடரும்………………….

வியாழன், 28 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 87. பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 87.   பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

மெய்ப்பாட்டியியல்:

மெய்ப்பாடு உணர்த்தினமையாற்  பெற்ற பெயர் என்பார் இளம்பூரணார். அஃதாவது உடம்பின்கண் தோன்றும் புறப்புலப்பாடுகள் பற்றிக் கூறுவதாம்.

“பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்

கண்ணிய புறனே நானான்கு என்ப.”- 1195.

அறிவின்பம் பயக்கும் விளையாட்டு ஆயத்தின்கண் தோன்றிய 8 *4= 32 கருத்துக்களும் எண்வகைச் சுவைகளையும் வெளிப்படுத்தும் விறல் அல்லது சுவை 4*4 = 16.

“நாலிரண்டாகும் பாலுமா ருண்டே.” -1196.

 

 

 எண்வகைச் சுவைகளை வெளிப்படுத்தும் சுவை 8 ஆகும். அவையாவன …..

”நகை அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப்பால் எட்டே  மெய்ப்பாடு என்ப. “ – 1197.

 சிரிப்பு, அவலம், இழிபு, வியப்பு, அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி என மெய்யின் புறப்புலப்பாடுகள் எட்டு வகைப்படும் என்பார். மேலும் இவ்வெட்டு வகைச் சுவை என்னென்னெ சூழ்நிலைகளில்  வெளிப்படும் என்பதையும் மிக விரிவாக எடுத்தியம்பியுள்ளார்.

வடமொழியாளர் மெய்ப்பாடுகள் ஒன்பது என்பர். மேற்கூறிய எண்வகைச் சுவைகளோடு  சமத்துவம்  என்ற ஒன்றினைக்குறிப்பர். சமத்துவம் அல்லது அமைதி என்பது  மெய்யின்கண் எவ்விதச் சலனமும் இன்றி இருப்பதாம்.  தொல்காப்பியர் சுட்டாத  சமத்துவம்  தமிழுக்குப் பொருந்துவதாக அவர் கருதவில்லை உடம்பில் அசைவற்று, புறப்புலப்பாடு ஏதுமின்றி இருத்தல் சுவையாகாது .

சமத்துவம் என்ற சுவைக்குச் சான்றாகக் கம்பர், ஓரிடத்தில் இராமனைக் குறிக்கும் பொழுது ”மணிமுடி கொண்டு இந்நாட்டினை  நீ ஆள்வதாக என்று முனிவர் கூறிய போதும் ; நாட்டைத் துறந்து பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரிய வேண்டும் என்று கைகேயி கூறிய போதும் இராமனின் முகம் துயரத்தைக் காட்டவில்லை. “ அன்றலர்ந்த செந்தாமரை ஒத்தாக இருந்தது “ என்பார் கம்பர். இராமனின் இந்நிலையைச்   சமத்துவம் என்னும் சுவைக்கு எடுத்துக்காட்டுவர்.

 

 ………………………தொடரும்………………….

செவ்வாய், 26 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 86. பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.

 சான்றோர் வாய் (மைமொழி : 86.   பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

 

                         தொல்காப்பியர்,  நிலவியல் சூழலியல், தொழில்,  இன்னபிற முறைகளை ஆராய்ந்து முன்னோர் மொழிபொருளைப் பொன்னேபோல் போற்றிப் பார்த்தறிந்தறிந்து  மக்கள் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, சிந்தித்து வகுத்தளித்தவற்றைக் காண்போம்.

      தலைவனும் தலைவியும் ஒத்துணர்ந்து களவு கற்பு என்னும் நிலையில் ஒழுக்கம் தவறாது நின்று மணம் செய்துகொள்வதை  இருவகையாகக் கூறுவார்.

கற்பு மணம் :

 

1.”கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்

கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.” – 1088.

கற்பு என்று கூறப்படுவது, வதுவைச் சடங்குடன் பொருந்திக் கொள்வதற்குரிய மரபினை உடைய  தலைவன், தலைவியைக் கொடுப்பதற்குரிய மரபினையுடையோர் கொடுப்பக் கொள்வது.

2, களவு மணம்:

”கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே

புணர்ந்து உடன்போகிய காலையானே.” – 1089.

 தலைவனும் தலைவியும் கொடுப்போர் இன்றியும் மணம் செய்து கொள்வர், அவ்விருவரும் களவு ஒழுக்கத்தில் இணைந்து உடன்போக்கு மேற்கொண்டு மணம் புரிந்து கொள்வர் என்பதாம்.

 

  களவு ஒழுக்கத்தின் இயல்பு:

 

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.” -1038.

 

 இன்பமும் பொருளும் அறனும் என்று சொல்லப்பட்ட அன்பொடு புணர்ந்த நடுவண் ஐந்திணியிடத்து நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயுங்காலத்து என்றவாறு “ –இளம்பூரணர்.  

இல்லறம் ஏற்றல் :

“கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்

விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

முகம் புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல்

அகம் புகல் மரபின் வாயிகட்கு உரிய.”-1098.

 

     கணவனே தன் தலைவன் என்ற மனத்திண்மையும் மாறாத அன்பும் நன்றின்பால் உய்க்கும் ஒழுக்கமும் மென்மை தன்மையால் பிறரைக் காக்கும்  தன்மையும் விருந்தினரைப் பேணலும் சுற்றத்தாரைக் காத்தலும் இவை போன்ற இல்லறக் கடமைகள் தலைவியின் பண்புகள் ; மனைவியின் வெயல்களை முகம் மகிழ்ந்து கேட்கும் நிலையில்  கணவனிடம் உரைத்தல்,  மனைக்கண் பழகும் பாணர் போன்றோர் கூற்றுக்களாக அமையும்.

 

இல்லறத்தின் பயன் :

”காமம் சான்ற கடைக் கோட் காலை

ஏமம் சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.” -1138.

இல்லற வாழ்க்கையின் இறுதிக் காலத்து, பெருமை பொருந்திய பிள்ளைகளுடன் நிறைந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு தலைவனும் தலைவியும் சிறந்ததாகிய செம்பொருளை இடைவிடாது நினைத்தல் மனையறத்தின் கடந்தகாலப் பயனாகும்.

………………………தொடரும்………………….

திங்கள், 25 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 85. பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 85.   பட்டறிவியச் சிந்தனைகள். – தொல்காப்பியர்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

அகப்பொருள்காட்சியும் கருத்தும்.

தொல்காப்பியர் அகத்திணையியலில்  களவு, கற்பு எனும் இருபெரும் பிரிவுகளில் மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்தியம்புகின்றார்.

ஆடவர் இயல்பு :

“பெருமையும் உரனும் அடூஉ மேன” -1044.

பெருமையும், வலிமையு, ஆடவர் இயல்பு ; இஃது உலகம் முழுவதும் பொருந்தும்.

இது தலை மகற்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. பெருமையாவது பழியும் பாவமும் அஞ்சுதல் ; உரன் என்பது அறிவு.  இவை இரண்டும் ஆண்மகனுக்கு இயல்பு என்றவாறு.

“சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்பது அறிவு “ குறள். 422. – இளம்பூரணர்.

பிறர் பாராட்டும் பெருமையுடன் சிறந்து விளங்குதலும் ; நன்னெறி குன்றாது வலிமையுடன் வாழ்வதும் ஆடவர்க்குரியனவாகும்.

பெண்டிர் இயல்பு:

”அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப.” – 1045.

“ இது தலைமகட்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.  என் எனின். அச்சமும் நாணும் பேதைமையும் இம்மூன்றும் நாடோறு முந்துறுதல் பெண்டிர்க்கு இயல்பு என்றவாறு.” –இளம்பூரணர்.

அச்சம், நாணம். மடன் என்ற மூன்று பண்புகளும் நாள்தோறும் முன்னிற்பவை, பெண்டிர்க்கு உரியவை ஆகும்.

அச்சமாவது பழிக்கு அஞ்சுதல் ; நாணமாவது பெண்டிர்க்கு இயற்கையாய் அமையும் அழகு ;மடனாவது அறியாமையாவது தன்னிலையில் தெளிவின்மையாகும்

பெண்டிர் இயல்புகள் :

”செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பாலான. “-1155.

அடக்கம், அமைதி, நேர்மை, உண்மை உரைக்கும் சொல்வன்மை,  நன்மை தீமைளை அறியும் அறிவு, உள்ளத்தின் கருத்தறிதல் அருமை  என்பன பெண்டிர் இயல்புகள்.

 தலைமகனுக்கும் தலைமகளுக்கும் உரிய இயல்புகளைச்சுட்டிய தொல்காப்பியர் இருமனம் இணையும் திருமணம் குறித்தும் கூறுகிறார்.

      …………………………தொடரும்………………….

ஞாயிறு, 24 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 84. பட்டறிவியச் சிந்தனைகள்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 84.   பட்டறிவியச் சிந்தனைகள்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

            

சிந்தனைப் போக்குகள்:

காலவளர்ச்சிஅறிவு வளர்ச்சிசிந்தனை மாற்றம்சமுதாய மாற்றம்.

மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்சங்ககாலம்.

உயிரெலாம் உறையுமோர் உடம்பாயினான்கம்பர் காலம்.

எல்லாரும் இந்நாட்டு மன்னர்பாரதியார் காலம்.

சிந்தனை, சொற்கள் உறவு

சிந்தனை, உடல் இயக்க உறவு

அனுமானச் சிந்தனை

அறிவியல் கற்பனைஇவற்றை முன்னரே சுட்டியுள்ளேன்.

 

  புறப்பொருள்களை அறியும் அறிவு ( Perceptual Thinking)

(பார்த்தவை, கேட்டவைகளைச் சிந்தித்தல்.)

தொல்தமிழர் உலகை உற்று நோக்கி  இயற்கையை முழுமையாக ஆராய்ந்து உலகத்தோற்றம் முதல் அழிவுவரை  இம்மண்ணில் வாழும் உயிர்கள் அனைத்தையும்  ஆராய்ந்துள்ளனர். குறிப்பாக வாழும் உயிரினங்களுள் உயர்ந்து சிறந்து விளங்கும் மானுடச் சமுதாயத்தில் மனிதன் மனிதனாக வாழ்வதற்குரிய   வாழ்வியல் நெறிமுறைகளை, உரைநடை தோன்றும் காலத்திற்கு முன்பே அனைத்து அறிவுரைகளையும் செய்யுள் வழியாகப் பேரிலக்கியங் களாகப் படைத்துள்ளனர்.

தொல்காப்பியர் சிந்தனைகள்:  

மானுட வாழ்வியல் குறித்துப் புலவர்களின் கண்ணோட்டம்வாழ்க்கை உண்மையானதா.. மாயைத் தோற்றமா…? – வாழ்க்கையை நுகர வேண்டுமா….துறக்க வேண்டுமா..?

இயற்கை நியதியே வாழ்க்கை வாழ்வதற்கே என்பதாம்.

வாழ்வியல் நெறிகள் பற்றி, உலக இலக்கியங்களில் காணப்படாத  மேன்மையான, உண்மையான கருத்துக்களைப் புலவர்கள் மிகத் தெளிவாகச் சுட்டியுள்ளனர்.

தொல்காப்பியர், மக்கள் வாழ்வியலை அகம், புறம் என இரு பெரும் பிரிவுகளாகக் கொண்டுள்ளார். அவற்றுள் அகத்திணை இல்வாழ்க்கையையும் புறத்திணை சமுதாய நடவடிக்கைகளையும் குறிக்கும்.  

காட்சியும் கருத்தும் :அகத்திணை;

திணைகள் ,

“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்

முற்படக் கிளந்த எழுதிணை என்ப,-947.

குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம் நெய்தல் இவை முதன்மை பெறுகின்ற ஒழுக்க வகைகள் ஏழு என்பர்.

நிலப் பகுப்பு:

”அவற்றுள்

நடுவண் ஐந்திணை நடுவனது ஒழியப்

படுதிரை வையம் பாத்தியப் பண்பே. -948.

 அவேழில் இருக்கும் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம் , நெய்தல் எனும் ஐந்திணைகளுள் நடுவிலிருக்கும் பாலை நீங்கக் கடலால் சூழப்பெற்ற இந்நில உலகத்தைப் பகுத்துக்கொண்டார்.

அவ்வவ் நிலத்திற்குரிய பொருள் வகைப்பாடு.

“முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே

நுவலுங்காலை முறை சிறந்தனவே

பாடலுள் பயின்றவை நாடுங் காலை” -949.

முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என முறையாகச் சொல்லும் நிலையில் இலக்கியத்தில் வழங்கியவற்றைக் கருதி அமைத்துக்கொண்டனர்.

மேற்சுட்டியவாறு அகத்திணை வாழ்வியல் நெறிமுறைகளைக் காணலாம்.

…………………………தொடரும்………………….

சனி, 23 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 83. பட்டறிவியச் சிந்தனைகள்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 83.   பட்டறிவியச் சிந்தனைகள்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு –குறள்:423.

 

தொன்மைத் தமிழின் மூவாயிரம் ஆண்டு காலவரலாற்றில் தோன்றிய தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கூர்ந்து நோக்கினால்  இயற்கையோடியைந்து வாழ்ந்த தமிழர்தம் பட்டறிவு, பகுத்தறிவு, அறிவியல் சிந்தனைகள்  இன்றளவும் போற்றிப் பேணக்கூடியதாகவே ஒளிர்கின்றன என்பதை பன்னோக்கு ஆய்வுகள் வழி அறியக் கூடியதாகவே அமைந்துள்ளன.

பட்டறிவு :EMPIRICISM – The theory that regards Experience(s)

“Nature speaks the language of God and reveals the majesty of God” –G.Barkely.

“Nothing was made by God for man to spoil or destroy”- John Loke.

சிந்தனை ஒரு வெற்றியக்கம், சிந்தனையால் பொருளறிவைப் பெறமுடியாது, அனுபவமே மனிதனுக்கு அனைத்தறிவையும் தருகிறதெனக் கூறும் தத்துவம் பட்டறிவியம்; பகுத்தறிவியத்திற்கு எதிரானது.”

ஒவ்வொரு மனிதனும் தன் அனுபவத்தைத் தவிர வேறு எதையும் அறிய இயலவே இயலாது,  என்று உறுதியாகக் கூறி அறிவின் உறுதித் தன்மையையும் பொதுமையையும் கேள்விக்குறியாக்கிவிட்டார் , ஹியூம்.

 பட்டறிவின்றிப் பட்டங்கள் ” (ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” எனும் பழமொழியை நினைவில் கொள்ளவும் ) ஆளும்  நாட்டில் முன்னேற்றம் முயற்கொம்பே..!  ஆட்சிக்கு, கல்வியால் அறிவும் பட்டறிவால் ஆளுமையும் இன்றியமையாதன.

முன்னோர் மொழி பொருளைப் பின்னோர் பின்பற்றாது கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று திரிந்தால்  வாழ்க்கை நரகமாகிவிடும்.

தொல்தமிழர் வாய்மொழி இலக்கியமாகிய முதுசொல் எனும் பழமொழியில் வாழ்வியல் நெறிமுறைகளை ஓரிரு சொற்களில் புலப்படுத்துவர்.

பட்டால்தான் புத்திவரும்

கெட்டநாய்க்குப் பட்டது உறுதி

சொல் புத்தியும் இல்லை ; சுய புத்தியும் இல்லை  என்றது  நன்மை தீமைகளை அறியும் அறிவின்றி  எல்லாம் எனக்குத் தெரியும் என்று தருக்கித் திரிபவர் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் அடிபட்டு, அடிபட்டு உழன்று வருந்துவர். மேற்சுட்டியுள்ள பழமொழிகள் கூறும் அறிவுரைகள்  பட்டறிவின் வெளிப்பாடுகளே……!

…………………………தொடரும்………………….

வியாழன், 21 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 82. சிந்தனை: விளக்கம்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 82.   சிந்தனை: விளக்கம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவுகுறள்:423.


முதல் நிலை:

“இவ்வாறு அறியும் போது முதல் படியில் தோன்றுவது காட்சி அறிவு (Perceptual Knowledge) இவற்றை மூளை பொதுமைப்படுத்தி அறிகிறது.

இரண்டாம் நிலை:

காட்சி அறிவிலிருந்து பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தறிவு (conceptual Knowledge)  இஃது இரண்டாம் நிலை.

இக்கருத்துப் படிமங்களைக் (Conceptual Images, Ideas) கொண்டு  மேலும் சிந்திக்க மூளையால் இயலும். இப்பொழுது வெளியுலகத் தொடர்பின்றி மூளையினுள்ளேயே  சலனம் நிகழ்கிறது. பல கருத்துக்களைக் கொண்டு சிந்திப்பதாலேயே அறிவியலில் கருதுகோள்கள் ஏற்படுகின்றன, இதனை (Ideational Thinking) என்று கூறுகிறோம். இதுதான் தருக்கவியலின் பொருள். அதற்குமேல்  பல கருத்துக்களையே சிந்தித்து, நிரூபணம் செய்து பொது விதிகளையும், அவற்றிற்கு அடிப்படையான தத்துவங்களையும் மூளை உருவாக்குகிறது. இதற்கு (Theorising….) அல்லது இயக்கவியல் தருக்கம் (Dialectical Logic) என்று பெயர்.

 சான்று:

 பொருள்முதல் வாத அடிப்படையிலேயே செல் முதல் மனிதன் வரையுள்ள உடல் வளர்ச்சியையும் உயிரியல் அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்க முடியும். மூளையின் செயற்பாட்டை அறியாத காரணத்தால் சீவன், புத்தி, மனம், நினைவு முதலிய கற்பனைகளை நமது பண்டைய தத்துவவாதிகள் படைத்தனர்.

       இன்று உயிர் எனறால் ஏதோ புரியாத ஒன்றாக இருக்கவில்லை. இஃது உடல் என்ற மிகச் சிக்கலான பொருளமைப்பின் ஒரு பண்பு.இஃது உடலினுள் நடைபெறும் உயிரியல் இரசாயன மாற்றங்களின்  ஒரு தொகுப்பு (Totality) இம்மாறுதல் வரிசைத் தொடர்புமாறி , திசை மாறிவிட்டால்  மாறுதல் நின்றுபோய்விடும் , அப்படிப் போய்விட்டால் செல்கள் வாழமாட்டா. அவைகள் பிரிந்து வேறு எளிய பொருள்கள் தோன்றத் தொடங்கும். இதுதான் சாவு. இவ்வறையறைக்கு மூலமான சில கூறுகளை எங்கெல்சு தனது “இயற்கையின் இயக்கவியல்” என்ற நூலில் கூறியுள்ளார்.

பின்னாளில், செல்லிலிருந்து மனிதன்வரை ஏற்பட்ட வளர்ச்சியை டார்வின் முதல் ஹால்டேன்வரை விளக்கியுள்ளனர். இம்மாறுதல்களின் அடிப்படைப் பொது விதிகளை டார்வின் நிறுவியுள்ளார்.

முடிவுரை:

ஜான் டூயி (John Dewey)-1859 – 1952.

 தருக்கம் (:Logic or Theory of Inquiry) எனும் நூலி.ல் “ சிந்தனை என்பது ஒரு கருவியாகும் (Instrument) என்றும்  உண்மை எனபது நாம் அடைய விரும்பும் இலக்குகளை அடைவதற்கு  நமது கருத்துக்கள் எந்த அளவுக்குப் பொருத்தமாகக் காணப்படுகின்றன் என்பதனைச் சார்ந்ததாகும்.” என்று கருதினார்.

சிந்தித்து தெளிதல்  எவ்வாறு…?

                இவ்வினாவிற்கு  லெனின் கூற்று சான்றாகும். “ கம்யூனிசம் என்பது புத்தகங்களில் படித்த முடிவுகளைக் குருட்டுத்தனமாக நம்புவது அல்ல. படித்தவற்றைக் கவனமாக எடை போட்டு, ஆழ்ந்து சிந்தித்து முடிவுகளைச் சான்றுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து, இந்த முடிவுகள் உறுதியாக மெய்ப்பட்டிருக்கின்றன என்று கண்டு ஒருவன் வந்தடைகின்ற உலகக் கண்ணோட்டம் தான் கம்யூனிசம்,” என்றார்.

 சிந்தனை உதவாது : ரூசோ (………….) 1712 – 1778.

 ரூசோவின் இயற்கை கொள்கை (Naturalism.) புரட்சிகரமானது. “ நமது நடத்தையை நல்ல வகையில் திசைப்படுத்துவதற்கு நமது சிந்தனை எல்லாக் காலங்களிலும் நமக்கு உதவாது என்றும்  இதற்கு ஏற்றது நமது மனவெழுச்சிகளேயாகும் (Emotions) என்றும்  இவரின் இயற்கை கொள்கை கருதியது. மனவெழுச்சிகள்  மனிதனது உண்மை இயல்பின் சிறந்த வெளிப்பாடுகளாகும்.

    சமுக ஒப்பந்தம் (Social Contract) என்னும் நூலில் ரூசோ மனிதர்கள் எளிமையாக இயற்கையோடு இசைந்து வாழ்க்கை நடத்தியும் தங்களது பிரச்சினைகளைத் தாங்களே ஒத்துழைத்துத் தீர்த்துக்கொண்டு வாழ்க்கை நடத்தியும் செயற்படும் ஓர் இலட்சிய சமுகத்தை (Ideal State ) எழுதுகிறார்.

…………………………தொடரும்………………….

புதன், 20 நவம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 81. சிந்தனை: விளக்கம்.

 

சான்றோர் வாய் (மைமொழி : 81.   சிந்தனை: விளக்கம்.


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவுகுறள்:423.

 

சிந்தனை – (Thought)

கால வளர்ச்சி – அறிவு வளர்ச்சி – சிந்தனை மாற்றம் – சமுதாய மாற்றம்.

அ.) புறப் பொருள்களை அறியும் அறிவு – பொருட்காட்சிச் சிந்தனை : (Perceptual Thinking)

1. பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் சிந்தித்தல்

2. கற்பனையாகச் சிந்தித்தல்

3. உளவியல் நினைவும் கற்பனை என்ற கூறும் – நினைவூட்டும் கற்பனை.

ஆ. ) கருத்துக்களை ஆராய்தல் – கருத்துச் சிந்தனை (Conceptual Thinking)

1. சிந்தனை, சொற்கள் – உறவு.

2.சிந்தனை உடல் இயக்க உறவு.

3. அனுமானச் சிந்தனை

4.அறிவியல் கற்பனை …. முதலியன.

சிந்தனை விதிகள்:

1. ஒருமை விதி – ( Law of identy)

2.  எந்தப் பொருள் மாறுதல் பெற்றாலும் அதுஅதுவே. ( அசோகர் போருக்குமுன்,பின் – ஒருவரே.

3.  முரணின்மை விதி: (Law of Contradiction)

ஒரு பொருளுக்கு  ஒன்றுக்கொன்று  முரணான தன்மைகள் இருக்க முடியாது – ஒருவனுக்கு உயிர் உண்டு அல்லது இல்லை , இரண்டையும் இணத்துக்கூற முடியாது.

4.   நடுப்பொருள் நீக்கும் விதி (Law of excluded middle)

இரண்டு முரண்பாடுகளுள் ஏதேனும் ஒன்று உண்மையாய் இருப்பது – மாம்பழம் இனிக்கும் அல்லது புளிக்கும்.

5.  போதிய நியாய விதி : (Law of Sufficient)

அகத்தும் புறத்தும் தோன்றும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் போதிய நியாம் இருக்க வேண்டும்.

6.   ஒன்று போலுள்ள நியாய விதி: (Law of Uniformity)

ஒரு நிகழ்ச்சிக்குக் கூறும் போதிய நியாயம் அது போன்ற நிகழ்ச்சிக்களுக்கெல்லாம் போதிய நியாயமாகும்.

இயக்கவியல் தருக்கம்:

இன்று அளவையியலும்  அறிவளவையியலும் அறிவியல் முன்னேற்றத்தால் ஏற்பட்டுள்ள  சிந்தனை முறைகளால் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளன.

         இதனடிப்படையில் தருக்கவியலும் வளர்ந்துள்ளது. நமது அறிவுத்தோற்றத்தில் பல படிகள் உள்ளன. முதல் படி, உலகிற்கும் நமது மூளைக்கும் ஏற்படும் தொடர்பு;  இத்தொடர்பின் வாயில்கள் ஐம்பொறிகள். பொருள் இயக்கத்தின் வெவ்வேறு நிலைகளை வெவ்வேறு பொறிகள் அறிகின்றன.  இவை நரம்புகளின் மூலம் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் செல்கிறது. இச்சலனங்களையெல்லாம் “கார்டெக்சு” என்னும் பகுதி தொகுத்தறிகிறது.(Systematise)

…………………………தொடரும்………………….

 

செவ்வாய், 19 நவம்பர், 2024

 

சான்றோர் வாய் (மைமொழி : 81.   மெய்யியல் கோட்பாடுகள்.-  மெய்ஞ்ஞானம் (தத்துவம்)


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவுகுறள்:423.


மெய்ஞ்னானம் ( தத்துவம்)



                          தத்துவம் (Philosophy) மெய்யறிவினை நமக்கு அளிக்க முற்படுகிறது. நமது வாழ்க்கைப்பற்றியும், நாம் வாழும் உலக பற்றியும் பல்வேறு அறிவியல் பிரிவுகளின் மூலம் கிடைக்கும்  விவரங்களைத் தொடர்புபடுத்தி அவற்றைப் புதிய முறையில் ஒருங்கிணத்து முழுமைபெற்ற (Comprehensive) அறிவாக  அவற்றை உருவாக்குதல் தத்துவத்தின் குறிக்கோளாகும். பேருண்மைப்பொருள் பற்றி (Reality) அதாவது பிரபஞ்சம் எனப்படும் பேரண்டத்தில் (Universe) அடங்கியுள்ள எல்லாவற்றையும் பற்றி முறைப்படியும் அதேபோது மிகப் பொதுப்படையாகவும் சிந்திக்கும் முயற்சி தத்துவமாகும், தத்துவ விசாரணை மனிதனுக்கு இயற்கையானதும் இன்றியமையாததும் ஆகும்.

தத்துவ விசாரணைக் கூறுகள்:

ஊகித்துணர்தல்

ஆழ்ந்து சிந்தித்தல்

தரம் குறித்தல்

 செயல்முறை வகுத்தல்

 சீர்தூக்கிப் பகுத்தாராய்தல்

அறிவு:

பிறரது கூற்றுகளை ஏற்றல்

புலன் காட்சி

 சிந்தித்தல்

                     அகக் காட்சி இவ்வகையான ஆய்வு முறைகள் தத்துவத்தை மெய்ப்பிக்க வழி வகுக்கின்றன.

காரல் மார்க்சு: மூலதனம்.

                      ”மூலதனத்தின் தத்துவ ஞானம் “ என்ற தலைப்பு விசித்திரமான சொர்றொடராகத் தோன்றலாம். மூலதனம் முதலாளித்துவச் சமுகத்தின் பொருளாதார உறவுகளைப் பற்றிய ஆராய்ச்சி என்பது நமக்குத் தெரியும். சில மேற்கிந்திய அறிஞர்கள் மூலதனத்தில் எந்தத் தத்துவஞானமும் இல்லை.  மார்க்சும் ஒரு த்த்துவஞானி அல்ல என்று மறுப்புரைக்கின்றார்கள். ஒரு தத்துவஞானி என்பவர் தன்னுடைய சொந்தக் கருத்துக்களின் அமைப்பு குறித்து விசேடமான த்த்துவஞான நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

                 மார்க்சு அப்படிப்பட்ட புத்தகங்களை எழுதவில்லை. அவர் எந்தவொரு இட்த்திலும் தத்துவஞானக் “கோட்பாட்டை” விசேடமாக விளக்கவில்லை. எனினும் அவரே தலைசிறந்த தத்துவஞானியாக இருக்கிறார்.   மார்க்சின் தத்துவஞானம் – இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் – அவர் எழுதிய எல்லா நூல்களிலும் விளக்கப்படுகிறது. அத்தத்துவஞானத்தை அறிந்து கொள்வதற்கு மார்க்சு எழுதிய எந்த நூலைப் படிக்க வேண்டும் என்று கேட்டால், அவருடைய வாழ்க்கையின் முக்கியமான சாதனையாகிய  “மூலதனத்தைப்” படியுங்கள் என்பதே சரியான பதிலாகும்.”

- மார்க்சு பிறந்தார்,பக்.383,384.

வி.இ. லெனின்.

                     ”மார்க்சு, தனக்குப்பின்னால் ஒரு “தர்க்கவியலை” விட்டுச்செல்லவில்லை என்றாலும் அவர் ”மூலதனத்தின் தர்க்கவியலை” விட்டுச் சென்றிருக்கிறார்……. மார்க்சு மூலதனத்தில் ஒரே விஞ்ஞானத்துக்குத் தர்க்கவியலை, இயக்கவியலை, மற்றும் கெகலிடம் மதிப்புள்ளதாக இருந்த ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு அதை மேலும் வளர்த்துச் சென்ற பொருள்முதல்வாதத்தின் அறிவுத் தத்துவத்தைக் கையாண்டார்.” மேலது, பக்.383.

…………………………தொடரும்………………….